சர்வதேச சினிமா: சேற்று மனிதர்களின் கதை- ரைஸ் பீப்பிள்

சில திரைப்படங்களைக் காண சப்-டைட்டிலோ மொழியோ தேவைப்படுவதில்லை. ‘ரைஸ் பீப்பிள்’ அத்தகைய ஒரு படம். தமிழ் வாழ்வுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் இந்தக் கம்போடிய தேசத்தின் திரைப்படம் 1994வரை அங்கிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படைப்பு.

நெல் வயல்களால் நிறைந்த கம்போடியா நாட்டின் ஒரு கிராமத்தில் கதை தொடங்குகிறது. வானத்தின் நீலம் பிரதிபலிக்கும் தெளிந்த தண்ணீர், கரையின் இரு மருங்கிலும் பசிய தாவரங்கள் நிறைந்த ஆறு. அதன் மார்பில் உறங்குவதுபோல் நீரில் மெல்ல நீந்திச் செல்கிறாள் ஓர் இளம் பெண்.

தாமரை இலைகளையும் மலர்களையும் கடந்து மிதந்த அவள் இப்போது சேற்றில் மலர்ந்த செந்தாமரைபோல நடவுக்குத் தயாராகி நிற்கும் கழனியில் நின்றுகொண்டிருக்கிறாள். அவளது கையில் மூங்கில் விளாறுகளால் கூம்பு வடிவில் பின்னப்பட்ட வலை போன்ற பொறி. அதைச் சேற்று நிலத்தில் குப்புற அழுத்தி நண்டுகளைப் பிடிக்க முயல்கிறாள். இக்காட்சியிலேயே இப்படத்தின் நிதானம் நமக்குப் பிடிபட்டுவிடுகிறது.

மூங்கில்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த வீட்டில் அன்று இரவு நண்டுச் சமையல். அங்கே போயெவ் குடும்பம் வசிக்கிறது. குடும்பம் என்றால் சாதாரணக் குடும்பமல்ல. போயெவின் மனைவியையும் ஏழு பெண் குழந்தைகளையும் சேர்த்து அவர்கள் ஒன்பது பேர். இரவு உணவுக்குப் பின் எல்லோரும் உறங்கப் போய்விட உறங்குவதற்கு முன் கைக்குழந்தையான கடைசி மகளுக்கு எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பதைச் சொல்லிக்கொடுத்தபடி கடவுளிடம் (புத்தர்) வேண்டுதல்களை முன்வைக்கிறாள் குடும்பத் தலைவி ஓம். “கடவுளே நாளை முதல் தொடங்கும் எங்கள் விவசாயப் பணிகள் யாவும் சிறப்பாக நடைபெற உன் அருள் வேண்டும்” என்று இறைஞ்சுகிறாள்.

அடுத்துவரும் நாட்களில் விதைப்பது, நாற்று நடுவது, களை பறிப்பது, நீர் பாய்ச்சுவது, பயிரைக் காப்பது, அறுவடை செய்வது, நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வது என விவசாயி வாழ்வின் பல்வேறு படிநிலைகளை போயெவ் குடும்பத்தில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஒரு சிறு சம்பவம் அந்தக் குடும்பத்தைப் புரட்டிப்போடுகிறது.

போயெவ் ஏர் ஓட்டும்போது அவனுக்கு விஷ முள் தைத்துவிடுகிறது. நடக்க முடியாமல் சிரமப்படுகிறான். வயல் வேலைகள் தடைபடுவதை நினைத்துப் புலம்புகிறான். மூத்த மகள் சாகோ ஏர் ஓட்டுகிறாள். சில நாட்கள் கழித்து சேற்று நிலத்தில் ஓம் விதைநெல் பாவுகிறாள். அப்போது “எல்லோரும் விதைக்கும்போது நாம் விதைநெல் பாவுகிறோம். மற்றவர்கள் களை வெட்டும்போது நாம் நாற்று நடுவோம்.

அவர்கள் அறுவடை செய்யும்போது நாம் களை வெட்டுவோம். மற்றவர்கள் நெல்லை வீட்டுக்குக் கொண்டுவரும்போது நாம் பதரை அறுவடை செய்வோம்” என போயெவ் புலம்புகிறான். மற்றவர்கள் சரியான காலத்தில் அறுவடை செய்துவிடும்போது அவ்வளவு குருவிகளும் இவர்கள் விளைச்சலை நோக்கி வரும் என்பதைத்தான் கவலையுடன் இப்படிக் குறிப்பிடுகிறான்.

வீட்டில் முடங்கிக் கிடக்கும்போது ஏதோ ஒரு வேகத்தில் கத்தி எடுத்து வரச்சொல்லி கணுக்கால் உள்ளே மறைந்திருக்கும் விஷ முள்ளை எடுத்துவிடுவதற்காகக் கத்தியால் குத்திக் கிழிக்கிறான். ரத்தம் வருகிறதே தவிர முள் வரவில்லை. பிரச்சினை பெரிதாகிப் படுத்த படுக்கையாகிவிடுகிறான். இந்த நாட்களில் நாற்று வளர்ந்து நிற்க, நடவு முடிந்த சில தினங்களில் அவன் இறந்துவிடுகிறான்.

இப்போது குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கிறாள் ஓம். கணவனின் வழிகாட்டுதல்கள் இன்றி சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறாள். பயிர் வளர்ந்துவரும்போது மழைக் காலம் வந்துவிடத் தன் மகள்களை அழைத்துச்சென்று வயல்களின் வரப்புகளை உடைத்துப் பயிர்களைக் காக்கிறாள். வெள்ளம் வடிந்ததும் நண்டுகளின் படையெடுப்பால் நடுங்கிப் போகிறாள். அதைத் தொடர்ந்து களைகள் பெருகிவர அவற்றைக் களைய நேரங்காலம் தெரியாமல் வயல்வெளியில் கிடக்கிறாள்.

கதிர் பிடிக்கும் காலத்தில் திரண்டு வரும் பறவைக் கூட்டங்களை விரட்டிச் சோர்ந்துபோகிறாள். இந்த மனச்சோர்வு மெல்ல மெல்ல மனநிலைப் பிறழ்வுக்கு அவளைத் தள்ளுகிறது. ஊர் கூடி அவளை வீட்டின் ஒரு பகுதியில் மூங்கில் கூண்டு ஒன்றைக் கட்டி அதில் அடைத்துவிடுகிறார்கள்.

இப்போது மூத்தவள் சோகா குடும்பப் பாரத்தைச் சுமக்கிறாள். வீட்டு வேலைகள், தன் சகோதரிகளைப் பராமரிப்பது என்று அவள் தாயாக விளங்குகிறாள். அம்மாவை மருத்துவமனைக்கு மோட்டார் வண்டியில் அனுப்பி வைத்துவிட்டு அறுவடைக்குக் கிளம்புகிறாள்.

அறுவடை முடிந்து வீட்டுக்கு எடுத்து வைத்ததுபோக மீதி நெல்லை வண்டியேற்றி சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றுத் திரும்புகிறாள். கிடைக்கும் பணத்தில் குடும்பச் செலவு, அம்மாவுக்கு மருத்துவச் செலவு என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சிகிச்சை முடிந்து அம்மா திரும்பிய பிறகு நெல் விளைச்சல் குறைவாக வந்திருப்பது கண்டு “நீங்கள்தான் எங்கள் நெல்லைத் திருடிவிட்டீர்கள்” என ஊர்க்காரர்களைப் பார்த்துத் திட்டுகிறாள் ஓம்.

தலைக்கு மொட்டையடித்துக் கொண்டு அப்பாவுக்கு இறுதிக் கடன் செய்த சோகா, அப்பாவின் நினைவாக ஆற்றில் விளக்குகளை மிதக்கவிடுகிறாள். ஊர்ப் பெரியவர்களிடமும் தனது தாய் மாமாவிடமும் குடும்பத்தைப் பற்றிய யோசனைகளைக் கேட்டுக்கொள்கிறாள்.

அடுத்த போக விளைச்சலுக்கான விதை நெல்லை அவள் தன் கரங்களால் வாஞ்சையுடன் பாவுவதுடன் கேமரா அவளிடமிருந்து பின்னோக்கி நகர்ந்துவந்து நம்மைப் பார்க்கிறது. நீங்கள் ருசித்துச் சாப்பிடும் அரிசிச் சோற்றின் பின்னுள்ள வாழ்க்கை இதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று நம் பதிலுக்காகக் காத்திருப்பதுபோல் அதே கோணத்தில் கேமரா நிலைகுத்தி நிற்கிறது.

சோகாவின் உறுதிகொண்ட நெஞ்சமும் ஒளிபடைத்த கண்களும் தெளிவுமிக்க பேச்சும் அக்குடும்பத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மட்டுமல்ல, விவசாயம் குறித்த நம்பிக்கையையும் பார்வையாளர்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்