ஒரு ஷங்கர், ஒரு ராஜமௌலி போதுமா?

By திரை பாரதி

மோஷன் கேப்சர் மெல்ல மெல்ல முன்னேறி ஃபெர்பாமென்ஸ் கேப்சர் தொழில்நுட்பமாக முன்னேற்றம் அடைந்ததைப் பார்த்தோம். ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தில் மனித கதாபாத்திரங்கள் இடம்பெற்ற அதேநேரம் 3டி முறையில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் கதாபாத்திரங்களே நாயகன், நாயகியாகச் சித்தரிக்கப்பட்டன.

பண்டோரா என்ற நேவி கிரகத்தைச் சேர்ந்த நாயகன், நாயகி கதாபாத்திரங்களுக்கான நடிப்பை சாம் ஒர்த்திங்டன் மற்றும் ஜோ சல்டானா ஆகிய இரண்டு தொழில்முறை நடிகர்கள் வழங்கினார்கள். பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் முறையில் இவர்கள் வழங்கிய நடிப்பை அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு 100 சதவீதம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நடிகர்கள் தரும் நடிப்பில் எவ்விதச் சேதாரமும் இல்லாமல் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உடனுக்குடன் உள்ளீடு செய்யப்பட்டது.

இதற்கு பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் பதிவு செய்யப் பயன்படும் ‘லைக்ரா’ என்ற இறுக்கமான உடையும், அதில் பொருத்தப்பட்ட கூடுதல் சென்சார்களும் நடிகரின் உடல்மொழியை அப்படியே எடுத்துக் கொள்ள உதவின.

அதேபோல நடிப்பின் இதயமாகிய முகபாவங் களைப் பதிவுசெய்ய முகத் தசைகள் அசைய காரணமாக இருக்கும் முக்கிய முக நரம்புகளின் பாதையில் வரிசையாகப் பொருத்தப்பட்ட மைக்ரோ சென்சார்கள் நடிகர்களுக்குப் பெரும் அவஸ்தையாக இருந்தன. அதற்கு விடை கொடுக்கப்பட்டது. இந்தக் கடினமுறைக்குப் பதிலாக பெர்ஃபாமென்ஸ் கேப்சர் முறையில். முகபாவங்களைப் படம்பிடிக்க ஒரேஒரு ‘ஹெட்மவுண்ட் கேமரா’தலையில் பொருத்தப்பட அது வேலையைச் சுலபமாக முடித்தது.

அவதாருக்குப் பிறகு உருவான பல படங்களில் இத்தொழில்நுட்பம் முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மனிதனுக்கும் குரங்குகளுக்குமான போரைச் சித்தரித்த ‘ ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ திரைப்படம். இந்தப் படத்தில் மனித சமூகத்துக்கு எதிராக சிம்பென்ஸி குரங்கள் முன்னெடுக்கும் புரட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறது ‘சீஸர்’ என்ற குரங்கு. இதன் சாகஸங்களையும் நடிப்பையும் கண்ட ரசிகர்கள் இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டாடித் தீர்த்தார்கள். வசூல் சாதனையில் அவதாரை மிஞ்சியது இந்தப் படம்.

இதில் ‘சீஸர்’ குரங்காக பெர்ஃபாமென்ஸ் கேப்சர் முறையில் நடித்துக் கொடுத்தவர் ஆண்டி செர்கிஸ்.

தற்போது கணினியின் இயங்கு திறனும், புதிய புதிய வசதிகளுடன் பெர்ஃபாமென்ஸ் கேப்சர் மென்பொருளும் விறுவிறு வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால் இந்தத் தொழில்நுட்பத்தில் புதிய தலைமுறை உத்திகள் இணைந்துகொண்டே இருக்கின்றன. அவதார், டின்டின், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டபோது இருந்ததைவிட இன்று இத்தொழில்நுட்பம் எட்டு கால் பாய்ச்சலில் முன்னேறிவிட்டது.

இன்று ஹாலிவுட்டில் தயாராகும் 50 சதவீதக் கதைப் படங்களுக்கு பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தேவைப்படுகிறது. (Motion Analysis, Xsens, Vicon, Optitrack, Organic Motion, Animazoo) மோஷன் அனலிசிஸ், எக்ஸ்சென்ஸ், விகான், ஆப்டிடிராக், ஆர்கானிக் மோஷன், அனிமாஷூ எனப் பல நிறுவனங்கள் இத்துறையில் கலக்கி வருகின்றன.

இன்று இத்தொழில்நுட்பம் மூலம் உடலில் தேவைப்படும் இடங்களில் துல்லியமாக சென்சார்களைப் பொருத்தி உணர்வுகளையும் பிம்பங்களையும் பெறுவது மருத்துவத் துறைக்குப் பெரும் வரமாக அமைந்துவிட்டது. எலும்பு முறிவு, நரம்புப் பிரச்சினை, முதுகுத் தண்டு இயக்கம், மூட்டுகள், கழுத்து எனப் பிரச்சினையைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க பெர்ஃபாமென்ஸ் கேப்சர் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட ஆரம்பித்துவிட்டது.

அதேபோல உடற்பயிற்சித் துறை, விளையாட்டு வீரர்களின் உடற்கூறு இயக்கத்தில் இருக்கும் தவறுகளைச் சரி செய்து கொள்ளவும் உத்திகளை மாற்றிக்கொண்டு பயிற்சி எடுக்கவும் இத்தொழில் நுட்பம் கைகொடுக்கிறது. ராணுவம், மனிதர்களுக்கு இணையான உடல்மொழிகளுடன் ரோபோக்களை உருவாக்குதல் என இதன் பயன்பாடு அதிகரித்தபடி செல்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் குறைந்த செலவில் தரமான அனிமேஷன் படங்களைக் குழந்தைகளுக்காக எடுக்க முடியும். அதற்கு ஊடகக் கல்வி பயிற்றுவிக்கும் கல்விக் கூடங்கள் இத்தொழில்நுட்பத்தை இங்கே பயிற்றுவிப்பது மிக முக்கியம். இந்தியத் திரைப்படங்கள் மனித நடிகர்களைக் கொண்ட ஹீரோயிசக் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக, இம்முறையில் உயிர் தரப்படும் 3டி அனிமேஷன் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளைப் படமாக்கலாம்.

நமது வரலாற்றில், பண்பாட்டில், புராணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருப்பது நமக்குப் பெரும் பலம். அவதாரையும் டின் டின்னையும் ரசித்த நாம், அதைவிடச் சிறந்த படங்களை உருவாக்க பெர்ஃபாமென்ஸ் தொழில்நுட்பம் நம் அருகில் வந்துவிட்டதை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். ஆண்டுக்கு 8,000 படங்களை எடுக்கும் நாம் ஒரு ஷங்கரும் ஒரு ராஜமௌலியும் போதும் என்று முடிவு செய்துவிட்டால் நம்மால் உலக சினிமா சந்தையைக் கைப்பற்றவே முடியாது. அடுத்து முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற அளவுக்கு வளர்ந்து நிற்கும் சிறப்புக் காட்சி (Visual effects) துறையை அலசத் தொடங்குவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

14 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

22 mins ago

ஓடிடி களம்

54 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்