கிரேசியைக் கேளுங்கள் 14 - பத்திரிகைத் துறை அனுபவம்

By செய்திப்பிரிவு

வி பார்த்தசாரதி, சென்னை - 49

உங்கள் பத்திரிகைத் துறை அனுபவம் பற்றி எழுதுங்களேன்?

அது 85-ம் வருடம் என்று நினைக்கிறேன். காலையில் ஓட்டம் (சுந்தரம் கிளேட்டனுக்கு இன்ஜினீயராக), மாலையில் ஆட்டம் (நாடக நடிகனாக), நள்ளிரவு வரை நாட்டம் (‘ஜூனியர் விகடன்’ ஆபீஸில் எழுத்தாளனாக) என்று என் வாழ்க்கை கைனடிக் ஹோண்டாவில் ஓடிக் கொண்டிருந்தது. என்னை ஆளாக்கியது எனது அப்பா வழித் தாத்தா என்றால், என்னை எழுத்தாளனாக்கியது ’ஆனந்த விகடன்’ தாத்தா.

இந்த ர.மோகனுக்கு ‘கிரேசி’ என்கிற அடைமொழியைக் கொடுத்து, உரையாடல் மட்டுமே அறிந்திருந்த எனக்கு உரைநடையை உபதேசித்தவர் எங்கள் எல்லோராலும் எம்.டி என்று மரியாதையாக அழைக்கப்படும் ஆனந்த விகடன் நிர்வாகி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள்.

கல்கி, தேவன், சாவி, பரணீதரன் போன்ற ஜாம்பவான்கள் முத்தெடுக்கக் குளித்த விகட மகா சமுத்திரத்தின் அலையில் என்னையும் நின்று விளையாட அனுமதித்தவர். ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கே.பி.டி. சிரிப்பு ராஜன்’என்ற நகைச்சுவை சரித்திரத் தொடர்கதை என்னும் அகழியைத் தாண்ட வைத்து, விகடன் கோட்டைக்குள் நான் நுழைய முத்திரை மோதிரம் அளித்தவர்.

சூரியனுக்கு முன் போய் சூரியனுக்குப் பின்னே திரும்பும் இந்த சுந்தரம் கிளேட்டன் இன்ஜினீயரைக் கொஞ்சினவர் எம்.டி. எனது பத்திரிகை மசக்கையை அவரிடம் வெளியிட்டபோது ‘ஏன் கஷ்டப்படறே...பேசாம நீ இங்கே சப்-எடிட்டரா சேந்துடேன். இன்ஜினீயர் சம்பளம் தர்றேன்’’ என்று தனக்கே உரிய கணீர் குரலில் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஊழியனோடு சேர்ந்து VSP (வெற்றிலை, சீவல், புகையிலை) போடுவார் அந்த முதலாளி. நான் விகடனில் வேலை பார்த்தேன் என்பதைவிட டிராமா, சினிமா போக அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் என்பதுதான் நிஜம். அந்த அளவுக்கு எனக்கு அனுக்கிரகம் அளித்தவர் எம்.டி.

ஒரு தடவை ‘‘அப்பாவுக்குக் காரியம் செய்ற நாளை ஏன் ‘அமாவாசை’ என்கிறோம் சார்? ‘அப்பாவாசை’ என்றுதானே சொல்ல வேண்டும்’’ என்ற ஏறுமாறான எனது கேள்விக்கு, ‘‘அது இல்ல மோகன்... பையன் அப்பாவுக்குக் காரியம் செய்யணும்கிறது அம்மாவோட ஆசை என்பதால்தான்… அது அமாவாசை ஆச்சு’’ என்று பளிச்சென்று பதில் சொல்லி எனது வார்த்தை விளையாட்டுக்கு வித்திட்டார். அப்போதெல்லாம் அவர் வருஷா வருஷம் மயிலம் முருகனைத் தரிசிக்க என்னையும் அழைத்துச் செல்வார். அவரது வீட்டு நவராத்திரி கொலுப் படிகள் பார்க்கச் செல்லும் என்னை, தன் ஜெமினி பங்களா படியிறங்கி வந்து கையைப் பிடித்து அழைத்துச் செல்வார் அந்த பாஸ்.

‘‘மோகன் வறுவல் சீவல் இருக்கா…’’ என்று கேட்டு என் டேபிளுக்கே வருவார். அடியேன் எழுதும் கதை, கட்டுரைகளுக்கு ‘Good, not bad…’ என்றெல்லாம் மார்க் போடுவார். அந்த மார்க் என்றுமே அக்மார்க்தான்.

சாதாரணமாக விகடனில் வந்த எழுத்தை வேறு பத்திரிகையில் எடுத்து பிரசுரித்தால் ‘நன்றி - விகடன்’என்று போடுவது வழக்கம். என் எழுத்து எங்கு பிரசுரமானாலும் ‘நன்றி - விகடன் எம்டி’!

சோனா ராஜ், புதுடெல்லி.

அர்த்தம் இல்லாமல் வரும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

அர்த்தம் இல்லாமல் வருவதே கோபம். அதே கோபம் அர்த்தத்துடன் வந்தால் அதன் பெயர்… பாரதி பழகச் சொன்ன ‘ரெளத்திரம்’. கடிக்காமல் இருந்த பாம்பை ஊர் மக்கள் அடித்தபோது பாம்பு கடவுளிடம் முறையிட, பதிலுக்குக் கடவுள் “உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். சீறாதே என்றா சொன்னேன்” என்றாராம். கடிப்பது கோபம்... சீறுவது... ரெளத்திரம்!

குஹன், நன்னிலம்

‘நாற்பது வயதில் நாய் குணம்’ என்று ஏன் சொல்லப்பட்டது?

40 வயதாகிவிட்டது... ஜாக்கிரதை! இனிமேல் நீங்கள் உப்பைக் குறைக்கணும், சர்க்கரையைக் குறைக்கணும், சோற்றைக் குறைக்கணும், சுக போகங்களைக் குறைக்கணும்… என்று டாக்டர் நம்மை நோய் வராமல் தடுக்க எல்லாவற்றையும் ‘குறை’க்கச் சொல்வார். அந்த ‘குறை’த்தலில் உள்ள பெரிய ‘ற’வை சின்ன ‘ர’வாக்கி, ‘நோய்’ என்பதை ‘நாய்’ ஆக்கிவிட்டோம். உண்மையிலேயே வைத்தியர் சொல்படி உப்பு, சர்க்கரை இத்யாதிகளைக் குறைத்தால் 40 வயதில் நோய் ‘குணம்’ ஆகும்.

மத்தளராயன், மாம்பலம்

பரமசிவத்தையும் எலுமிச்சைப் பழத்தையும் ஒப்பிட்டு, பாம்பையும் நல்லெண்ணெய்யையும் ஒப்பிட்டு கவி காளமேகம் போல, ஏதாவது இரண்டை ஒப்பிட்டு வெண்பா எழுதுங்கள் பார்க்கலாம்?

காதலையும் துறவையும் ஒப்பிட்டு ஒரு வெண்பா:

‘ஊரைவிட்(டு) ஓடலால் ஒன்றிக் கலத்தலால்

யாரிடமும் கூறாமல் ஏற்பதால் - பாரினில்

சாதலை வென்று சமாதியில் (காதல் சமாதி) நிற்பதால்

தீதிலாக் காதல் துறவு’.

- இன்னும் கேட்கலாம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

3 mins ago

தமிழகம்

13 mins ago

இணைப்பிதழ்கள்

30 mins ago

இணைப்பிதழ்கள்

41 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்