வெட்டிவேரு வாசம் 11 - காக்க மறந்த கவசம்

By சுபா

எல்லையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காப் பாற்றுவதற்காக இரவு, பகல் விழித்திருக்கும் ராணுவ வீரர்கள் மீது எங்களுக்குப் பெரும் மரியாதை உண்டு. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் வேற்று நாட்டின் அச்சுறுத்தல் இல்லை.

அதனால், இங்கு ராணுவத்தினரின் தியாகங்கள் சரிவர உணரப்படுவது இல்லை என்பது எங்கள் கருத்து. இந்திய ராணுவத்தைப் பின்னணியாக வைத்து, நாங்கள் எழுதிய பல கதைகள் பெரும் வரவேற்பு பெற்றன. ரசித்துப் படித்த சில வாசகர்கள் ராணுவத்திலும் இருந்தார்கள்.

எல்லையில் இருந்த ராணுவ முகாமில் இருந்து, தணிக்கை செய்யப்பட்ட முத்திரையுடன் ஓர் அஞ்சல் அட்டை எங்களுக்கு வந்திருந்தது.

‘அன்புமிக்க சுபா,

உங்கள் கதைகளின் தீவிர வாசகன் நான். சென்னைக்கு வருகிறேன். கீழ்க்கண்ட முகவரியில் என்னை நீங்கள் சந்தித்தால் பெருமகிழ்வு அடைவேன்.

- நாராயண்’

திருவல்லிக்கேணியில் குறுக்கில் வெட்டும் பல சந்துகளில் ஒன்றில் அவருடைய பழமையான வீடு இருந்தது. கம்பிகள் வேய்ந்த கதவில் ‘ஓம் நமோ நாராயணா!’ ஸ்டிக்கர்.

கதவைத் திறந்த பெண்மணியின் நெற்றியில் பொட்டு இல்லை. கூந்தலில் நரை. “வாங்க..!”

உள்ளே முற்றம். இடது புறம் மரத் தூண்களுடன் கூடம். சுவரில் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்தில் ராணு வச் சீருடையில் நாராயணனுடைய அப்பா. ஒயர் நாற்காலியில் நாராயணன். முப்பதுக்குள் வயது. நெற்றியில் திருமண். முகம் எங்கும் பூரிப்பு.

“தப்பா நினைச்சுக்காதீங்க. முழங்கால்ல ஆப்பரேஷன். அதான் எழுந்துக்கல. இதுல யாரு… சுரேஷ், யாரு… பாலா?”

அறிமுகங்களுடன் கைக் குலுக்கினோம். அதிர்ந்தோம்.

அவருக்கு உள்ளங்கை இருந்தது. கட்டை விரல் இருந்தது. மற்ற நான்கு விரல்களையும் காணவில்லை.

“ஏதாவது விபத்தா? மெஷின்ல கையை விட்டீங்களா?”

நாராயணன் சிரித்தார்.

“இங்கே பனியன் வரைக்கும் கழட்டியாகணும். அப்படி வேர்க்குது. ஆனா, நான் டியூட்டி பார்த்த இடம் காஷ்மீர்ல மலை உச்சி. நாம கஷ்டப்பட்டு மீட்ட சியாச்சன் க்ளேசியர். அசந்தா, பாகிஸ்தான்காரன் உள்ளே பூந்துருவான். முன்னூத்தி அறுபத்தஞ்சு நாளும் பனி. ஸ்வெட்டர், கம்பளி, கிளவுஸ் எல்லாம் உண்டு. ஆனா, பனியிலயே ஊறி ஊறி கிளவுஸ் எல்லாம் நைஞ்சு போச்சு. ஒருநாள் ஆள்காட்டி விரல்ல எந்த உணர்வுமே இல்லையேனு கிளவுஸைக் கழட்டினேன். விரலையே காணும். கழட்டின கிளவுஸுக்குள்ளயே இருந்தது. சந்தேகத்தோட அடுத்த விரலைப் பிடிச்சுக் கொஞ்சம் மடக்கினேன். நம்ப மாட்டீங்க, சும்மா காம்புலேர்ந்து பூவைப் பறிச்சா மாதிரி அதுவும் கையோட வந்துடுச்சு. ரத்தம் இல்ல, சத்தம் இல்ல… ஒவ்வொரு விரலா உதிர ரெடியா இருந்தது.”

கேட்கவே மிரட்சியாக இருந்தது.

“அடுத்த ஷிஃப்ட்டுக்கு ஆள் வந்ததும் விரலை எடுத்துக்கிட்டு மூணு கிலோ மீட்டர் நடந்து எங்க கேம்ப்புக்குப் போனேன். மயக்கமாயிட்டேன். மிலிட்டரி ஆஸ்பத்திரியில மிச்ச ரெண்டு விரலும் செத்துப் போச்சுன்னு சொல்லி அதையும் வெட்டி எடுத்துட்டாங்க.”

அவர் மேலும் சொன்ன சில தகவல்கள் நெஞ்சைப் பிசைந்தன. எல்லையில் இருப்பவர்களுக்கு உணவுப் பொருள் எடுத்துச்செல்லும் ஆர்மி லாரிகள் உயரம் ஏற முடியாமல் அடிக்கடி பிரேக்டவுன் ஆகி, மூன்று நாள் உணவை ஒரு வாரத்துக்குப் பிரித்து உண்பார்கள். சாப்பாடு, தூக்கம் பற்றி எல்லாம் புகார் சொல்ல நேரமே இல்லாதபடி எதிரி ராணுவம் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

“பனியில உட்கார்ந்தே இருந்ததுல, முழங்காலும் மரத்துப் போயிருந்தது. டாக்டர்ஸ் பார்த்தாங்க. லிகமென்ட் வீணாப் போயிடுச்சுன்னு, ஒரு சின்ன ஆப்பரேஷன் பண்ணியிருக்காங்க. இனிமே பழையபடி நடக்க முடியாது. துப்பாக்கியும் பிடிக்க முடியாது.”

“என்ன செய்வீங்க..?”

“கொஞ்சம் பென்ஷன் வரும். அரசாங்க வேலைக்கு ஆர்மியில இருந்தவங்களுக்கு முன்னுரிமை இருக்கே. போஸ்ட் ஆபீஸ்ல வேலை கிடைச்சிருக்கு. பெருமாள்தேவன்பட்டியில போஸ்ட்டிங். போறதுக்கு முன்னால உங்களைப் பார்க்கலாமேன்னு கூப்பிட்டேன்..”

அவரைச் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து ராணுவத்தினரை நினைத்து இதயம் முழுக்க கனத்திருந்தது.

பல வருடங்கள் கழித்து...

2008. நவம்பர் 26. மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல். அவர்களை எதிர்கொள்ள நெஞ்சை நிமிர்த்திச் சென்ற ஹேமந்த் கர்க்கரேயும், இன்னும் இரண்டு அதிகாரிகளும் குண்டு துளைக்க முடியாத கவச உடையை அணிந்திருந்தனர். ஆனால், தோட்டாக்கள் அவர்களுடைய தரக்குறைவான கவசங்களைத் துளைத்து, மார்பையும் துளைத்து உயிரையே பறித்தன என்ற செய்தி நெஞ்சை உலுக்கியது.

நமக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைப்பவர்களுக்கு அடிப்படையான பாதுகாப்பு வழங்குவதில் கூடவா பணத்துக்காக ஊழல்? ராணுவத்திலும், காவல்துறையிலும் கூட அரசிய லும், ஊழலும் நுழைந்து விட்டது எங்களைக் கலங்கடித்தது. இந்த மனிதாபிமானமற்ற ஊழலில் பங்குகொண்ட அத்தனை பேருக்கும் அந்தக் கவச உடைகளை மாட்டி, நிற்க வைத்துச் சுட வேண்டும் என்றுகூட கோபம் வந்தது.

எழுத்தாளன் கோபம் அதிகபட்சம் எழுத்து வரைதானே?

‘ஆரம்பம்’ திரைப்படம்.

தீவிரவாதிகளின் தோட்டாக்களுக்கு, தரமற்ற புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்த நண்பனைப் பறிகொடுத்த நாயகன் அசோக்குமார் (அஜீத்), ஊழலுக்குத் துணைபோன உயர் அதிகாரியைக் கேள்விகளால் துளைப்பான்.

“இது நல்ல குவாலிட்டின்னா உன் உயிரக் காப்பாத்தட்டும்” என்று அந்த ஜாக்கெட்டை அவர் மீது வைத்து, சுடுவது போல் துப்பாக்கியை உயர்த்துவான். ‘நோ’ என்று அலறியபடி அவர் நடுங்கிப் பின்வாங்குவார். அவன் ஜாக்கெட்டைத் தரையில் போட்டு டப்டப்பென்று சுடுவான். பொத்தல் விழும். எங்கள் கோபம் நாயகனின் வார்த்தைகளானது.

“சாவைப் பார்த்து நாங்க என்னைக்குமே பயந்தது இல்லை. ஆனா, அந்த சாவு நேர்மையானதா இருக்கணும்” என்று ஆவேசமாக அஜீத் பேசியபோது, அந்த வார்த்தைகளுக்குக் கூடுதல் உயிர் கிடைத்தது.

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்