சினிமா ஸ்கோப் 4: சொல்ல மறந்த கதை

By செல்லப்பா

ஒரு படம் பார்க்கிறோம், அது குறித்து எழும் முதல் கேள்வி படம் எப்படி என்பதே. பதில் சொல்கிறோம். அடுத்த கேள்வி, கதை என்ன என்று வந்து விழும். ஏனெனில், கதைக்குச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வளவு.

நமக்குக் கதை கேட்கப் பிடிக்கும். பாட்டியிடம் கேட்ட கதை, அம்மா சொன்ன கதை, அப்பா கூறிய கதை நண்பர்களுடன் பேசிய கதைகள் என வாழ்நாள் முழுவதும் கதைகளாகவே பேசுகிறோம். வாழ்வில் நாம் கடந்த சம்பவங்களைச் சிறிது புனைவு கலந்து கதைகளாகவே பிறரிடம் சொல்கிறோம். கதைகளைப் பேசுவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் கேட்பதிலும் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

எனவே, நம்மைப் பொறுத்தவரை சினிமாவும் நன்றாகக் கதை சொல்ல வேண்டும் எனவே விரும்புகிறோம். அது கதை சொல்லும் ஓர் ஊடகம்தானே. என்ன ஒன்று, சினிமாவில் கதை காட்சியாகவும், இசையாகவும், சிறு வசனம் வழியேயும், அரங்கப் பொருள் மூலமாகவும் என வெவ்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது. சிறுகதையிலோ நாவலிலோ கதையாசிரியர் எல்லாவற்றையும் எழுத்தில் விவரித்துத் தருவார்.

மனத்திரை உதாரணமாக, கதையில், “அவன் பத்திரிகையொன்றைப் புரட்டிக்கொண்டு அறை ஒன்றில் அமர்ந்திருந்தான். வெளியே வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன. இன்னும் அவளைக் காணவில்லை. வழக்கமாக இதற்கு முன்னரே வந்து வீட்டின் வேலைகளை முடித்திருப்பாள். ஏன் அவள் இன்னும் வரவில்லை என்ற கேள்வி அவன் மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது” என்று எழுதப்பட்டிருந்தால் வாசகர்கள் அவற்றுக்கான காட்சியைத் தாங்களே தங்கள் மனத்திரையில் உருவாக்கிப் பார்த்துக்கொள்வார்கள்.

அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவு, அந்த அறை எப்படி இருந்தது, வெளியே என்ன மாதிரியான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன… இதையெல்லாம் அவர்கள் மனம் காட்சிகளாக உருவாக்கும். தாங்கள் கடந்து வந்த அத்தகைய தருணம் ஒன்று சிந்தனையில் வந்து போகும். இவையெல்லாம் சேர்ந்த கலவையான உணர்வை அந்தக் கதை தரும். ஆக வாசகரின் கற்பனைக்கு வேலை உண்டு.

ஆனால், சினிமாவில் அந்தக் கற்பனையை இயக்குநர் தலைமையிலான படக் குழுவினர் உருவாக்கித் தர வேண்டும். பார்வையாளரின் வேலை எளிது. ஐநூறு, அறுநூறு பக்கங்களில் சொல்லப்படும் வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேரத்துக்குள் சினிமாவில் சொல்லிவிட முடியும்.

இப்படிச் சொல்ல முடிவதாலேயே அது அதிகக் கற்பனையைக் கோரும் கடினமான பணியாகவும் மாறிவிடுகிறது. அதுதான் இயக்குநரின், படக் குழுவினரின் முன்னர் உள்ள பெரும் சவால். அதை அவர்கள் எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே சினிமாவின் கலைரீதியான வணிகரீதியான வெற்றி அமைகிறது.

ஒரு படத்தின் முதல் வேலை எதுவென்று நினைக்கிறீர்கள்? கதையைத் தேர்வு செய்வதுதான். கதையைச் சிலர் தாங்களே எழுதுகிறார்கள். சிலர் பிறரிடம் பெறுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதை சொல்லத் தெரிந்தால்தான் திரைப்படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை நிலைமை. ‘இயக்குநருக்கும் கதைக்கும் என்ன தொடர்பு, கதை என்பது கதையாசிரியனின் வேலை அல்லவா?’ என்று எந்தத் தயாரிப்பாளரும் கேட்பதுமில்லை.

ஒரு நல்ல கதையை உங்களால் தயாரிப்பாளரோ அவரைச் சேர்ந்தவர்களோ ரசிக்கும்படி சொல்லத் தெரியவில்லை என்றால் உங்களது இயக்குநர் கனவு வெறும் பகல் கனவுதான். நீங்கள் வைத்திருக்கும் கதை என்ன என்று கேட்டால் ஓர் உதவி இயக்குநர் ‘ஓபன் பண்ண உடனே...’ எனத் தொடங்கி படத்தின் திரைக்கதையை ஷாட் பை ஷாட்டாகச் சொல்லத் தொடங்கிவிடுவார். அவருடைய விவரிப்பில் படத்தின் திரைக்கதையைத்தான் நீங்கள் கேட்டிருப்பீர்கள். கதைக்கும் திரைக்கதைக்குமான புரிதல் இந்த அளவிலேயே இருக்கிறது.

இறைவியின் சிக்கல்

இந்தப் புரிதல் இல்லாமலேயே படங்கள் உருவாக்கப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான 'இறைவி' வரை இந்தச் சிக்கல் இருக்கிறது. கதைக்குப் பொருத்தமான திரைக்கதை அதில் அமைக்கப்படவில்லை. கதையின் அழுத்தத்தை உணராமலே கனமான அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.

எனவே, திரைக்கதையைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் போயிருக்கிறது. ஒரு கதையை எதற்காகச் சொல்கிறோம், எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது போன்ற தெளிவு இல்லாவிட்டால் இயக்குநரின் பாடு சிக்கலாகிவிடும். இதை உணர்ந்துகொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் இறைவி.

எப்படி வேண்டுமானாலும் கேட்பார்கள்

ஆக, எண்சாண் உடம்புக்குத் தலை எப்படியோ அப்படியே செல்லுலாய்ட் சினிமாவுக்குக் கதை. எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும் ஒரு படத்தின் கதை ரசிகர்களுக்குத் திருப்தி தரவில்லை என்றால் அந்தப் படத்தை ரசிகர்கள் புறக்கணித்துவிடுகிறார்கள்.

ரஜினிகாந்த் பெரிய சூப்பர்ஸ்டார்தான். அவர் நடிக்க வேண்டாம், வந்து நின்றாலே போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்று கதை பேசுவார்கள். ஆனால், அவர் நடித்த எல்லாப் படங்களும் வெற்றிபெற்றவையா? அவர் ஆன்மிகக் கனவுடன் உருவாக்கிய 'பாபா' அவருக்கு மிகப் பெரிய தோல்வியாகத்தான் அமைந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பங்கும் இருந்தது

. அந்தப் படத்துக்காக ராமகிருஷ்ணனை அழைத்து வந்ததையே ஒரு கதை போல் சொல்வார்கள். ஆனால் கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய நடிகர் படத்துக்குக் கதை எதற்கு என்பார்கள். எப்போது? படம் வெற்றிபெறும்போது. அதே நடிகரின் படம் தோற்கும்போது, கதையே இல்லாமல் எப்படி ஒரு படம் வெற்றிபெறும் என்று கேட்பார்கள்.

அதனால்தான் ‘நான் யானையல்ல, குதிரை’ என்று வசனம் பேசிய ரஜினிகாந்த், லிங்காவில் கிடைத்த அனுபவம் காரணமாக, புதுக் கதையும் பார்வையும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்; ரஞ்சித் என்னும் புது இயக்குநரைத் தேடி வந்திருக்கிறார். இங்கே ரஜினிகாந்தும் அவருடைய படங்களும் வெறும் உதாரணங்கள்தான். இது எந்த நடிகருக்கும் பொருந்தும்.

கமலின் கெட்டிக்காரத்தனம்

ஆகச் சிறந்த நடிகர் என மதிக்கப்படுபவர் கமல்ஹாசன், அவரே கதை எழுதுவார்; திரைக்கதை எழுதுவார்; வசனம் எழுதுவார்; பாடல் எழுதுவார்; என்றாலும் எப்போதும் யாராவது ஓர் எழுத்தாளரைப் பக்கத்தில் வைத்துக்கொள்வார். சுஜாதா, பாலகுமாரன், கிரேசி மோகன், ஜெயமோகன் எனப் பலர் கமலின் படத்துக்குப் பங்களித்திருக்கிறார்கள். இவர்களின் கதைத் திறமையையும் எழுத்துத் திறமையையும் முடிந்த அளவு கமல் கறந்துவிடுகிறார்.

அதுதான் அவரது கெட்டிக்காரத்தனம். ஆக, ஒரு படத்தின் வெற்றியை எது வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால், தோல்வியை மோசமான கதை தீர்மானித்துவிடும். அதனால்தான் கதை பற்றி இவ்வளவு கதைக்க வேண்டியிருக்கிறது. வசூலைப் புறந்தள்ளிவிட்டு யோசித்தால் எந்த நடிகருக்கும் பெயரை வாங்கித் தந்த படம் அழுத்தமான கதை கொண்டதாகவே இருக்கிறது.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்