தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: தகர்க்க முடியாத சாதனைகள்

By பிரதீப் மாதவன்

சகாப்தமாகவும் சரித்திரமாகவும் வாழ்ந்து மறைந்த முன்னோடிகள் தமிழ் சினிமாவில் வெகுசிலர்தான். அந்தச் சிலரில் ஏ.வி.மெய்யப்பனின் சாதனைகளை ஒரேயொரு கட்டுரைக்குள் அடக்கிட இயலாது. அவர் விதைத்த ஏ.வி.எம். என்ற விதை ஆலமரமாய் உயர்ந்து விரிந்து நின்று, எங்கெங்கோ இருந்து வந்த கலை தாகம் கொண்ட பறவைகளுக்கு வேடந்தாங்கலாதத் தன் கிளைகளில் அடைக்கலம் தந்து வளர்த்திருக்கிறது. இன்னும் இரு ஆண்டுகளில் 75 ஆண்டுகள் கலைப் பயணத்தை நிறைவு செய்ய இருக்கும் ஏ.வி.எம்., இதுவரை 175 படங்களை எடுத்து சாதனை படைத்திருக்கிறது.

நான்காவது தலைமுறையாகத் திரைப்படத் துறையில் ஈடுபட்டுவரும் ஒரே நிறுவனம் என்ற பெருமையையும் இந்நிறுவனம் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதனைகளுக்கு அடித்தளமிட்டவர் ஏ.வி.எம்.மின் நிறுவனரான மெய்யப்பன். அவரது தொழில் பக்தியை விஞ்சிட யாருமே இல்லை. தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்று புகழப்படுபவர்களில் (ஏ.வி.எம்., எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்) முதலாமவர் மெய்யப்பன்.

இசைத்தட்டில் தொடங்கிய பயணம்

செல்வச் செழிப்பு மிக்க செட்டிநாட்டு நகரத்தார் குடும்பத்தில் 1907-ம் ஆண்டு ஜூலை 28 அன்று ஆவிச்சி செட்டியார், லட்சுமி ஆச்சி தம்பதியின் மகனாகக் காரைக்குடியில் பிறந்து, வளர்ந்தவர் மெய்யப்பன். அப்பாவின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால் அவரது வியாபாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆகவே, எட்டாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்துக்கொண்டு, தந்தையின் வியாபார ஸ்தலமான ஏ.வி.அண்ட் சன்ஸ் கடையில் அவருக்கு உதவ ஆரம்பித்தார். இது காரைக்குடியில் அந்நாட்களில் புகழ்பெற்ற கார், சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்கும் கடையாக இருந்தது.

வளர்ந்து வாலிபனாக ஆன பின்பு தன் தந்தையாரின் அனுமதியுடன் ஸ்டில் கேமராவுக்கான பிலிம் ரோல்கள், கிராமபோன் ரெக்கார்டுகள் உள்ளிட்ட அரிதான பொருட்களைச் சென்னையில் வாங்கிவந்து கடையின் விற்பனையைப் பெருக்கினார். விற்பனைக்காக அவர் வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளைத் தானும் கேட்டு இசை ரசனையை வளர்த்துக்கொண்ட மெய்யப்பன், சிறந்த ரெக்கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைத்த தருணம்தான் மெய்யப்பன் என்ற கலைஞன் பிறக்கக் காரணமாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் கிராமபோன் நிறுவனத்தின் தென்னிந்திய உரிமையைப் பெற்ற மெய்யப்பன், சென்னை மவுண்ட் ரோடில் ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’என்ற வியாபார ஸ்தாபனத்தை நிறுவி, ரெக்கார்டுகளின் விற்பனையோடு மட்டுமல்லாமல் கிராமஃபோன் இசைத்தட்டுகளை உற்பத்திசெய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். பேசும்படங்களின் வரத்தையும் இசைத்தட்டுகள் திரைப்படத்தின் ஒரு அங்கமாக மாறியதையும் கண்ட அவர், நாம் ஏன் திரைப்படத் தொழிலுக்குள் நுழையக் கூடாது என்று நினைத்தார். கொஞ்சமும் தயங்காமல் களத்தில் குதித்தார்.

கல்கத்தாவில் கன்னி முயற்சி

அது 1935-ம் வருடம். தென்னிந்தியப் பேசும் படங்கள் அனைத்தும் கொல்கத்தாவில் தயாராகி வந்தன. எனவே, மெய்யப்பனும் கல்கத்தாவுக்கே சென்றார். அங்கே ‘நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில்’படப்பிடிப்புத் தளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் அரங்கம் அமைத்துத் தனது முதல் முயற்சினான ‘அல்லி அர்ஜுனா’வைப் (1935) படமாக்கினார். தனது முதல் முயற்சிக்காக அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் சரஸ்வதி சவுண்ட் புரடொக்‌ஷன்ஸ். இயக்கியதுடன் தானே படத்தைத் தொகுத்து வெளியிட்டார். மெய்யப்பனின் கன்னி முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனால், அவர் துவண்டுவிடவில்லை. கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த அவர், தனது நண்பர்களைப் பங்குதாரர்களாகக் கொண்டு ‘பிரகதி ஸ்டூடியோஸ்’ என்னும் நிறுவனத்தைச் சென்னையில் அமைத்தார். தரமான கேமரா, இறக்குமதி செய்யப்பட்ட பிளேபேக் கருவிகள், கதை, சினேரியோ, நடிகர்கள் தேர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார். திட்டமிடலும் செயலாக்கமும்தான் சினிமா என்பதைத் தனது இரண்டாவது முயற்சியிலேயே உணர்ந்து அதை அங்குலம் அங்குலமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.

சபாஷ் சபாபதி

இப்படி அவர் திட்டமிட்டு இயக்கிய இரண்டாவது படம்தான் ‘சபாபதி’(1941). சுகுண விலாச சபா நாடக மன்றத்தை நடத்திவந்த நாடக ஆசான் பம்மல் கே. சம்பந்த முதலியாரின் புகழ்பெற்ற நகைச்சுவை நாடகமாக விளங்கி வந்தது சபாபதி. “அதைப் படமாக்கலாம், மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்” என்று பரிந்துரைத்தார் ஏ.டி.கிருஷ்ணசாமி. நல்ல கதையைத் தேடிக்கொண்டிருந்த மெய்யப்பன் நாடகத்தைப் பார்த்து திருப்தி அடைந்த பின் திரைக்கதை, வசனத்தைச் சம்பந்த முதலியாரிடமே எழுதி வாங்கிக்கொண்டார். டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என். ரத்னம், சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘சபாபதி’மக்கள் பாராட்டும் விதமான வெற்றியை ஈட்டியது.

நகைச்சுவைப் படத்துக்குக் கிடைத்த வெற்றியால் உடனடியாக மீண்டும் ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார் மெய்யப்பன். இந்த நேரத்தில் புகழ்பெற்ற மராத்திக் கதையைத் தேர்ந்தெடுத்தார். அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை சுந்தர் ராவ் நட்கர்னியிடம் ஒப்படைத்தார். கணவனைச் சந்தேகப்படும் செல்வந்தர் வீட்டுப் பெண்களின் மனநிலைதான் கதையின் களம். அப்படிக் கணவனைச் சந்தேகப்படும் மனைவி கதாபாத்திரத்தில் கே.ஆர். செல்லம் நடித்தார். கணவராக கே.சாரங்கபாணி நடித்த ‘என் மனைவி’படத்துக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. சிரிப்புப் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்றவுடன் இதைப் போன்ற சமூக நகைச்சுவை படங்களை அதிகம் தயாரிக்கும் போக்கு இதன் பிறகே உருவானது. மார்வெல் ரேடியோக்கள் புகழ்பெற்றுவந்த அந்தக் காலத்தில் ‘என் மனைவி’ படத்தின் பாடல்கள் பெரும்புகழ்பெற்றன.

அடம்பிடித்த நாயகி

மூன்றாவது படமான ‘ஸ்ரீவள்ளி’யை (1945) இயக்கித் தயாரித்த மெய்யப்பன், அன்று வளரும் இளம் நட்சத்திரங்களாக இருந்த டி.ஆர், மகாலிங்கத்தை முருகனாகவும் குமாரி ருக்மணியை வள்ளியாகவும் துணிந்து தேர்வு செய்த நடிக்க வைத்தார். படத்தின் நாயகி ருக்மணி, மகாலிங்கத்தைப் போல் தானும் பாடி நடிப்பேன் என்று அடம்பிடிக்க அமைதியாக அவரை வைத்துப் பாடல்களைப் பதிவுசெய்து படமாக்கிக்கொண்டார். முதல் பிரதி தயாரான பிறகு ருக்மணியின் பாடல்கள் மகாலிங்கத்துக்கு இணையாக எடுபடாமல் போனதைக் கண்டு, பி.ஏ. பெரிய நாயகியை ருக்மணிக்குப் பதிலாக மகாலிங்கத்துடன் பின்னணி பாடவைத்து சவுண்ட் நெகட்டிவ் தயாரித்து இரண்டே நாட்களில் வேலையை முடித்தார். பொறுமையும் திறமையுமான அவரது அணுகுமுறைக்குப் பெரிய வெற்றி கிடைத்தது. படம் வெளியான பிறகு குமாரி ருக்மணியும் அதை ஏற்றுக்கொண்டார்.

கரைக்குடியில் முகாம்

இரண்டாம் உலகப் போர் உச்சம் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னையில் மின்சார விநியோகம் பெரும் பிரச்சினையாக மாறியதால் காரைக்குடியின் தேவகோட்டை ரஸ்தாவுக்குத் (சாலை) தனது ஸ்டூடியோவை மாற்றினார். அதற்கு ‘ஏ.வி.எம் ஸ்டூடியோஸ்’என்று பெயரிட்டார். அங்கிருந்துதான் ‘நாம் இருவர்’(1947), ‘வேதாள உலகம்’(1948) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறினார்.

சாதனைகளின் சாம்ராஜ்யம்

இதன் பிறகு காடாகக் கிடந்த கோடம்பாக்கத்தின் வடபழனி பகுதியில் குதிரை லாயம் வைத்திருந்த இடத்தை வாங்கி, நிலத்தைச் சீரமைத்து மெய்யப்பன் உருவாக்கியதுதான் சாதனைகளின் சாம்ராஜ்யமாக விளங்கும் இன்றைய ஏ.வி.எம். ஸ்டூடியோ. முதல் பின்னணிப் பாடல் முயற்சி, முதல் பின்னணிக்குரல், முதல் மொழிமாற்றுப் படம் (டப்பிங்), வங்காள, சிங்கள மொழிகளில் படத் தயாரிப்பு, ப. நீலகண்டன், பீம்சிங் எஸ்.பி.முத்துராமன் எனப் பல புகழ்பெற்ற இயக்குநர்களை உருவாக்கியது, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா வரை ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் என்ற தனித்த பெருமை என எழுத்தில் அடங்காத சாதனைகளைப் படைத்த முன்னோடி ஏ.வி.மெய்யப்பன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

14 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்