சினிமா எடுத்துப் பார் 95: போலியோ பிளஸ் குறும்படம்

By எஸ்.பி.முத்துராமன்

காலத்தின் வேகத்தில் சின்னத் திரை தொடரை ஒரு நாளைக்கு ஒரு எபிசோட் என்கிற கணக்கைக் கடந்து இரண்டு, மூன்று எபிசோடுகள் எடுக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவானது. அப்படி எடுத்தால்தான் லாபம் வரும். இல்லையென்றால் கட்டுப்படியாகாது என்று வேகமாக எடுக்க ஆரம்பித்தனர். சுருக்கமாகச் சொன்னால் சுத்த ஆரம்பித்தார்கள். எதையும் தரமாகக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம்கொண்ட எங்களால் அந்த அளவுக்கு வேகமாகச் சுழல முடியவில்லை.

சில நடிகர், நடிகைகளும் ஒரு நாளில் இரண்டு, மூன்று தொடர்களில் நடித்து, நன்றாக நடிப்பதில் கவனம் செலுத்தாமல் மீட்டர் போடுவதில் கவனமாக இருந்தனர். ஷாட்டுக்கு ரெடியாகும் வரை செல்போனில் பேசிக் கொண்டிருப்பார்கள். கேமராவுக்கு முன் வந்து நடிக்கும்போது உதவி இயக்குநர் சொல்லச் சொல்லக் கேட்டு வசனம் பேசி நடிக்கத் தொடங்கினர். இதனால் காட்சிகள் முக பாவத்தோடும், ஏற்ற இறக்கங்களோடும் இல்லாமல் போனது. படப்பிடிப்புத் தளத்தை கோயிலாக நினைத்துக்கொண்டு வேலை பார்த்த எங்களுக்கு இதெல்லாம் புதிதாகவே இருந்தன.

அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் செட்டில் இருந்தால் நடிப்பைத் தவிர வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். அவருடைய நடிப்பில் வசனங்கள் அடி வயிற்றில் இருந்து வரும். முக பாவங்கள் முதிர்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்ட வர்களோடு பணிபுரிந்துவிட்டு இந்தக் காலத்தில் இந்த மாற்றங்களை எங்கள் மனம் தாங்கிக்கொள்ளவில்லை. அதனால் சின்னத்திரை தொடர்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டேன்.

அடுத்து கண்தானம் பற்றிய ஒரு குறும்படத்தை சங்கர நேத்ராலயாவுக் காக எடுத்தோம். இதைப் பற்றி நான் முன்பே சில நிகழ்வுகளில் சொல்லியிருக் கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயா புரொடக்‌ஷனின் ‘உழைப்பாளி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நாட் களில்தான் இதை ஷூட் செய்தோம். லட்சுமி என்ற பார்வை உள்ள குழந் தைக்கு, கண் பூத்ததுபோல டாக்டர் சுரேந்தர் அவர்கள் கான்ட்ராக்ட் லென்ஸ் செய்துகொடுக்க, அதை லட்சுமி அணிந்து கொள்ள பட்டப்பாடு பெரும்பாடு. அதை அணிந்ததும் கண் தெரியாத குழந்தைபோல் தெரிந்தது. அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு ரஜினிகாந்த் ‘இந்தக் குழந்தைக்கு கண் வர நீங்கள் எல்லாம் கண் தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்த தானம் கண் தானம்!’ என்று மக்களிடம் கூறுவார். அது மக்களிடத்தில் விழிப்புணர்வை உண்டாக்கியது.

1990-ல் 130 கண்கள் தானமாக கிடைத்தன. இந்தக் குறும்படம் வெளியான பிறகு 2016 வரை 1,128 பேர் கண் தானம் செய்திருக்கிறார்கள். இதற்கு ஏவிஎம்.சரவணன் சார் அவர்களின் முயற்சியும், ரஜினிகாந்த் அவர்களின் ஒத்துழைப்பும், டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், டாக்டர் சுரேந்தர், டாக்டர் பிரேமா பத்பநாபன் போன்ற மருத்துவர்களும்தான் காரணம்.

இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட தால் சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனையின் வரலாறையும் அப்படி எடுக்க வேண்டும் என்று டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் ஏவி.எம்.சரவணன் சாரிடம் கேட்டார்கள். அதன்படி மருத்துவ மனையில் இருக்கும் எல்லா துறை களிலும் படம் எடுத்து விரிவாக அந்த நோய்களைப் பற்றியும், மருத்துவத்தைப் பற்றியும் எடுத்துக் காட்டினோம். இந்தக் குறும்படம் வாயிலாக சங்கர நேத்ராலா யாவுக்கு ஒரு தனி வெளிச்சம் கிடைத்தது. இந்தக் குறும்படத்தை அமெரிக்காவில் போட்டுக் காண்பித்து அதன் மூலம் நிதி திரட்டி மேலும் பல தொண்டுகள் செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.

‘கண் தானம்’ குறும்படத்தில் குழந்தை லட்சுமியுடன் ரஜினிகாந்த், ‘நிம்மதி உங்கள் ஜாய்ஸ்’ தொடரில் ஜெயபாரதி, சரத்பாபு

இதை அடுத்து போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை உண் டாக்க, ரோட்டரி கிளப்புடன் இணைந்து ‘போலியோ பிளஸ்’ குறும்படம் எடுக்கும் வேலையில் இறங்கினோம். ஏவிஎம்.சரவணன்அவர்களும் அபிராமி ராமநாதன் அவர்களும் எங்களுக்கு துணையாக இருக்க, சினிமாவில் பெயர் பெற்ற நடிகர்கள் பலரும் நடிக்க சம்மதித்தனர். பார்த்திபன், குஷ்பு, பிரபு, பானுப்ரியா, லலிதகுமாரி, ரேவதி, மனோரமா, ரஜினிகாந்த் ஆகியோர் இதில் நடித்தார்கள். மக்களுக்கு ‘போலியோ’ சொட்டு போட்டால் குழந்தை களுக்கு இளம்பிள்ளை வாதம் வராது என்ற கருத்தை உரிய முறையில் மக்க ளிடத்தில் கொண்டுபோய் சேர்த்தார்கள். சுகாதார நிலையத்துக்கு வந்த தாய்மார்கள், ‘‘குழந்தைக்கு மனோரமா சொன்ன சொட்டு மருந்து போடுங்க’’, ‘‘ரஜினி சார் சொன்ன சொட்டு மருந்து போடுங்க’’ என்று ஆர்வமாக தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட் டார்கள். இன்றைக்கு அது வளர்ந்து மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு 99 சதவீதம் போலியோ இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் போலியோ இல்லாத புதியதோர் இந்தியா உருவாகப்போகிறது.

‘நிம்மதி உங்கள் ஜாய்ஸ்’ தொடரில் அஸ்வினி, விஜய் ஆதிராஜ்

கல்வியில் தனித்துவத்தோடு, திறமை யான பல மாணவ - மாணவிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் பணியை பத்மா சேஷாத்ரி பள்ளி நிறுவனம் செய்துவருகிறது. இதை திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி (திருமதி ஒய்.ஜி.பி) அவர்கள்தான் நிறுவினார்கள். மகளிர் சங்கப் பணிகளில் ஆர்வம் செலுத்திக்கொண்டிருந்த 10 பெண்கள் சேர்ந்து முடிவு செய்து ஒரு குடிசையில் தொடங்கியப் பள்ளிதான் பிஎஸ்பிபி. இன்றைக்கு கிளைகள் படர்ந்து சென்னையில் மட்டுமே நான்கு, ஐந்து பள்ளிகள் என்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட பள்ளி நிறுவனத்தின் செயல்பாடுகள், குறிக்கோள், லட்சியம் ஆகியவற்றை மையமாக வைத்து ‘பத்மா சேஷாத்ரி பள்ளி வரலாறு’ என்ற ஒரு குறும்படத்தை மிஸ்ஸஸ் ஒய்.ஜி.பி அவர்களின் 80-ம் ஆண்டு விழாவுக்காகத் தயாரித்தோம். இந்தக் குறும்படம் உருவாகும்போது அந்தப் பள்ளியின் திறமை மிகுந்த ஆசிரியர்களும், சுறுசுறுப்பான மாணவ- மாணவிகளும் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். எங்களுக்குத் தேவை யான படங்களை எல்லாம் அவர்கள் ஓவியமாக உடனுக்குடன் வரைந்து கொடுத்தார்கள். அந்த மாணவர்கள் பேசும்போது ஒரு தனித்தன்மையும், ஆளுமையும் கண்டோம். அதனால் தான் அந்த மாணவர்கள் இன்று உலகம் முழுதும் சிறந்த முறையில் பணியாற்றுகிறார்கள். அந்தப் பள்ளி யில்தான் என் மகனும், பேரன், பேத்தி களும் படித்தார்கள் என்பதை பெருமை யாகச் சொல்லிக்கொள்கிறேன்.

ராஜலட்சுமி பார்த்தசாரதி

இப்படிப்பட்ட சிறப்பான பள்ளியை நடத்தும் மிஸ்ஸஸ் ஒய்.ஜி.பி-யின் கணவர் ஒய்.ஜி. பார்த்தசாரதி ஒரு நாடகக் காதலர். அவர் ஆரம்பித்த நாடகக் குழுதான் ‘யுனைடெட் ஆர்ட்ஸ். அந்த நாடகக் குழுவில் பணியாற்றி புகழ்பெற்றவர்கள் பலர். அதில் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சோ அவர்களும், இப்போதும் புகழுடன் விளங்கும் விசு, மவுலி, வெங்கட், ஏ.ஆர்.எஸ், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் அடங்கு வர். இன்றைக்கும் இந்த நாடகக் குழுவை ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மனைவி சுதா மகேந்திரன், அவர்களின் மகள் மதுவந்தி, மகன் ஹர்ஸ் ஆகியோர் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஹர்ஸ் தான் நான் எடுத்த அந்தப் பள்ளியின் குறும்படத்துக்கு குரல் கொடுத்தவர். இவர்களோடு கல்விக் கூடங்களை ராஜேந்திரன், ஷீலா ராஜேந்திரன் நிர்வ கிக்கிறார்கள். நான்கு தலைமுறைகளாக கல்வியையும், கலையையும் வளர்த்து வருகிறார்கள்.

திருமதி ஒய்.ஜி.பி அவர்கள் தன் 80 வயதில் வைணவம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்கள். இன்று 85 வயதிலும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாராட்டி மகிழ்கிறார்கள்.

நாங்கள் தயாரித்த குறும்படம் பற்றி அடுத்து சொல்கிறேனே!

- இன்னும் படம் பார்ப்போம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்