இசை முகம்: திடீர் கச்சேரி

By ஆர்.சி.ஜெயந்தன்

மாலைநேரச் சென்னை. அதுவொரு முகூர்த்த நாள். திருமண வரவேற்பு நிகழ்வில் களை கட்டியிருந்தது அந்தக் கல்யாண மண்டபம். அதன் வாசலில் ஒரு வேன் வந்து நிற்கிறது. உள்ளே பிரபலப் பின்னணிப் பாடகர் அந்தோனிதாசன் தனது குழுவுடன் அமர்ந்திருக்கிறார்.

குழுவிலிருந்து ஒருவர் மட்டும் இறங்கி மண்டபத்துக்கு உள்ளே போய் மணமகன் வீட்டாரைச் சந்தித்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடங்களில் வேனுக்குத் திரும்பி வந்து, “கிரீன் சிக்னல் கிடைச்சுடுச்சு” என்கிறார். உடனே வேனிலிருந்து அந்தோனிதாசனும் அவரது குழுவினரும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கே ‘திடீர் கச்சேரி’ நடக்கிறது. தனது இசைக்குழுவுடன் இணைந்து, திரையில் தாம் பாடிய பாடல்களையும் மேடைகள் தோறும் பாடிவரும் தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில் சிலவற்றையும் அடுத்தடுத்து அந்தோனிதாசன் பாட, இந்த எதிர்பாராத இசை மழையால் திருமண வீட்டார், நெகிழ்ந்தும் மகிழ்ந்துபோகிறார்கள்.

 ஒருமணி நேரக் கச்சேரி முடிந்ததும் மணமக்களை வாழ்த்திப் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார் அந்தோனிதாசன். அதேநாளில் மற்றொரு திருமணம், காதணிவிழா என்று எதிர்பாராமல் சென்று, இலவசமாகத் திடீர் கச்சேரி நடத்திவிட்டுத் திரும்புகிறார்.

‘சூது கவ்வும்’ படத்தில் ‘காசு பணம் துட்டு’ பாடல் வழியாகத் திரையில் கவனம் பெற்ற அந்தோனிதாசன், கடந்த 2007-ல் இருந்தே திரையில் பாடி வருபவர். சமீபத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ‘ஆஹா கல்யாணம்’ பாடலும் அதற்குமுன் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்குப் போடுது’ பாடலும் அவரை இன்னும் பிரபலப்படுத்தின. இத்தனை பிஸியாக இருக்கும் ஒரு பாடகர் எதற்காகத் திடீர் இலவசக் கச்சேரியில் இறங்கினார். அவரிடம் கேட்டோம்.

“தமிழ் நாட்டுப்புறப் பாடல்களால்தான் எனக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிரம் கச்சேரிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியிருந்தாலும் திரையிசை என்னை சிட்டி முதல் பட்டிவரை கொண்டு சேர்த்துவிட்டது. தற்போது சோனி மியூசிக் நிறுவனம் அவர்களுடைய ‘அப்பீஷியல் ஆர்ட்டிஸ்ட்’களில் ஒருவராக என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இது அத்தனை சீக்கிரம் அமைந்துவிடாத வாய்ப்பு. சோனி மியூசிக் வழியே நான் பாடிக்கொடுத்து வரும் நாட்டார் பாடல்கள் உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றைக் கேட்டுவிட்டு, எங்கெங்கிருந்தோ போன் செய்து பாராட்டுகிறார்கள். இதுதான் நமது நாட்டார் இசையின் வலிமை.

நமது வாழ்வியலைக் கூறும் நாட்டுப்புற இசையை, கிராமிய வாத்தியங்களுடன் இணைந்த மினி இசைக் கச்சேரியாகத் திருமணம், குடும்ப விழாக்களில் யாரும் எதிர்பாராத விதமாக இலவசமாக நடத்தினால் அது எத்தனை சுவாரசியமான முயற்சியாக இருக்கும் என்று சோனி மியூசிக்கில் ஆலோசனை கேட்டார்கள். சிறந்த முயற்சி என்று கூறி உடனே ஒப்புக்கொண்டேன்.

யதார்த்தமாகச் சென்று திடீரென்று சர்ப்பிரைஸ் கொடுத்தபோது அரங்கில் பொங்கி வழிந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. முதல்முறையாக இந்த முயற்சியைச் சென்னையில் செய்துபார்த்தோம்.

மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. மணமக்கள் ‘காலத்துக்கும் இதை மறக்க முடியாது.’ என்றார்கள். உறவினர்கள் எங்களைப் சூழ்ந்துகொண்டு பாடிய பாடல்களையும் வரிகளையும் வாத்திய இசையையும் புகழ்ந்துபேசி செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

சிறுவர் சிறுமியர் உற்சாக நடனமாடினார்கள். நாங்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நம் பாரம்பரிய இசையை மங்கல நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மாற்றும் இந்த திடீர் கச்சேரியை தமிழகம் முழுவதும் தொடருவோம்” என்கிறார் அந்தோனிதாசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்