சி(ரி)த்ராலயா 10: மாயமானது தங்கவேலுவின் மோதிரம்!

By டி.ஏ.நரசிம்மன்

‘கல்யாண பரிசு’ படப்பிடிப்பில் கோபுவுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம். தங்கவேலு, எம்.சரோஜா சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை கோபுவே நடித்துக் காட்டினார். அவர் மிமிக்ரி கலைஞர் என்பதால் தனது வசனங்களைத் தானே நடித்துக் காட்டிப் பேச, தங்கவேலுவும் சரோஜாவும் அதைக் கப்பென்று பிடித்துக் கொண்டார்கள்.

“ஆச்சாரி… உம்மைப் போல எல்லா வசனகர்த்தாவும் நடிச்சு காட்டிட்டா எங்களுக்கு வேலை மிச்சம்” என்று சொன்ன தங்கவேலு, ஸ்ரீதரிடம் சென்று கோபுவைப் பாராட்ட, உடனே ஸ்ரீதர், “நீயே சரோஜாதேவிக்கும் வசனம் சொல்லிக் கொடுத்துடு கோபு” என்று கூடுதல் பொறுப்பைக் கொடுத்தார்.

வசன வாத்தியார்

கதாநாயகிக்கே வசனம் சொல்லித்தரும் முக்கியப் பணி கிடைத்துவிட்ட கம்பீரத்துடன் சரோஜாதேவி முன்பாகப் போய் நின்றார் கோபு. பக்கத்தில் அவருடைய அம்மா. பெயரே ருத்ரம்மா!

“குட் மார்னிங் ஜடை கோபால்” சரோஜாதேவி கொஞ்சியபடி வரவேற்றார். “என் பேரு சடகோபன். ஜடை கோபால் இல்லை” கோபு விளக்கினார். “ஜடை கோபால்ங்கிற பேருக்கு என்ன அர்த்தம்?” கன்னடம் கலந்த தமிழில் கேட்டார்.

பெயர்தான் கொலை செய்யப்பட்டுவிட்டது. மதிப்பையாவது காப்பாற்றிக் கொண்டுவிடுவோம் என்று நினைத்த கோபு, “ஜடை கோபால்னா, ‘உலகத்திலேயே சிறந்த புத்திமான்’ என்று அர்த்தம்!” எனக் கூற, ருத்ரம்மா கோபுவை மலைப்புடன் நோக்கினார். சரோஜாதேவி தொடர்ந்து ஜடைகோபால் என்றே கோபுவை அழைக்க, படத்தின் ஒளிப்படக் கலைஞர் ‘ஸ்டில்ஸ்’ அருணாச்சலம் இந்தத் தகவலை ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டார்.

“அட்ஜஸ்ட் பண்ணிக்க கோபு, சின்ன வயசுல நீ ஜடையோட சுத்திட்டு இருந்தது சரோஜாதேவிக்கு தெரியுமோ என்னவோ!” என்று தன் பங்குக்கு நண்பனை கலாட்டா செய்தார் ஸ்ரீதர். இது நடந்து சுமார் 50 ஆண்டுகள் கழித்து கடந்த 2011-ல் நடந்த கோபுவின் சதாபிஷேக வைபவத்துக்கு சென்னை வந்திருந்த சரோஜாதேவி, ‘ஜடை கோபால்’ என்று அழைத்துக் கிண்டல் செய்ததை கோபுவுக்கு நினைவுபடுத்தி சிரித்துத் தீர்த்தனர்.

வழக்காறாக மாறிய வசனம்!

‘கல்யாண பரிசு’ படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்தவுடன் திருப்தியுடன் கோபுவிடம் வரும் தங்கவேலு, “ஆச்சாரி, நீ பெரிய லெவலுக்கு வருவே, நடிக்கிற எங்களாலயே சிரிப்பை அடக்க முடியுல, ஷாட் நேரத்துல நீயும்தானே பார்க்கிறே!” என்று மனதாரப் பாராட்டுவார். இப்படிப் பாராட்டும் மகிழ்ச்சியும் கலகலப்புமாகப் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானபோது, முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்க்கச் சென்ற ஸ்ரீதருக்குப் பயங்கர அப்செட். சரோஜாதேவி அழும் இடங்களில் எல்லாம் ரசிகர்களும் கூடவே கிண்டலாக கேவ ஆரம்பித்தனர்.

“என்னடா கோபு! ரசிகர்கள் கேலி செய்யறாங்களே, படம் படுத்துடுமா?” என்று கவலையோடு கேட்டார். ஆனால், ஒரே வாரத்தில் பிக் அப் ஆகி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பெண்கள் கூட்டம் திரையரங்குதோறும் மொய்க்க ஆரம்பித்தது. படத்தின் செண்டிமெண்ட் காட்சிகளில் மனம் இளகி குமுறிக் குமுறி அழுத பெண்கள், நகைச்சுவைக் காட்சிகளில் விலா நோகச் சிரித்த ஆண்களோடு இணைந்து கொண்டனர்.

படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைப் பகுதி தனி ரெக்கார்டுகளாக விற்பனையில் சக்கைபோடுபோட்டது, பட்டிதொட்டியெங்கும் வயது பேதமின்றி அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தனர். பிரபல எழுத்தாளர் பைரவன் என்று சொல்லி மனைவியிடம் தனக்குப் பாராட்டு விழா நடந்ததாக டூப் விட்டு தங்கவேலு மாட்டிக்கொள்ளும் இடம் மிகவும் பிரமாதம் என்று பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டது.

“எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னேன். ‘தட்’னான் பாரு…!” என்று தங்கவேலு கூற, “உங்களையா?” என்று சரோஜா கேட்பார்.

“என்னை ஏன் தட்றான்? கையை தட்னான்… தட் னான்...தட்டிகிட்டே இருந்தான்!” என்று தங்கவேலு தொடந்து டூப் விடும் காட்சியின்போது திரையரங்குகள் அதிர்ந்தன. நடைமுறை வழக்கில் மன்னார் அண்ட் கம்பெனி என்றாலே ஏமாற்று வேலை என்று அர்த்தம் பெற்றுவிட்டது.

உருவப்பட்ட மோதிரம்

‘கல்யாண பரிசு’ படத்தின் வெற்றி, ஸ்ரீதரை மிகப் பெரிய உயரத்துக்கு இட்டுச்சென்றது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சூப்பர் ஹிட். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 25 வாரங்கள், ஐந்து சென்டரில் நூறு நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது. மற்ற மொழிகளிலும் படத்தின் ரீமேக் உரிமைக்கு ஏக கிராக்கி. தெலுங்கில் நாகேஸ்வரராவும் சரோஜாதேவியும் நடித்தனர். இந்தியில், ராஜ்கபூர் – வைஜயந்திமாலா ஜோடி நடித்தது.

ஊர் ஊராகக் ‘கல்யாண பரிசு’ படத்துக்கு வெற்றிவிழாக்கள் நடந்தன. படத்தில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர் வெற்றிவிழாக்களில் கலந்துகொண்டபோது மக்கள் கூடம் அலைமோதியது. மதுரையில் நடந்த வெற்றிவிழாவில் கோபு மேடையேறியபோது, “என் நண்பன் கோபு” என்றுதான் ஸ்ரீதர் அவரைக் கூட்டத்தினரிடையே அறிமுகப்படுத்தினார். இதில் நெகிழ்ந்து போன கோபு, ஸ்ரீதரின் இறுதி நாட்கள் வரை அவரைப் பிரியாமல் இருந்தார்.

ஸ்ரீதர் இயக்கிய கடைசி படம் வரையிலும் அதில் இணைஇயக்குநர் கோபு என்ற பெயர் கிரெடிட் கார்டில் ஒளிர்வதைக் காணலாம். ஒரு முக்கிய நகரத்தில் ‘கல்யாண பரிசு’ வெற்றிவிழா நடந்து முடிந்ததும் கோபு அருகில் வந்த தங்கவேலு, ‘கல்யாண பரிசு’ ஆச்சாரி...படத்துக்கு திருஷ்டி கழிந்தது” என்றார். விஷயம் புரியாமல் கோபு விழிக்க ‘கல்யாண பரிசு’ கையைக் குலுக்குற சாக்குல எவனோ என் இரண்டுபவுன் தங்க மோதிரத்தை உருவிட்டு போயிட்டான். அவன் நம்மளவிட பெரிய மன்னார் அண்ட் கம்பெனியா இருப்பான்போல” என்றார்.

‘கல்யாண பரிசு’ படத்தை ‘நஸ்ரானா’ என்ற பெயரில் இந்தியில் இயக்கினார் ஸ்ரீதர். படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஸ்ரீதர் - கோபு இருவருக்கும் பிரிவு உபசார விருந்து ஒன்றைத் தனது வீட்டில் கொடுத்தார் படத்தின் நாயகன் ராஜ்கபூர். இதற்கு முன்தினம்தான் படத்தின் இசையமைப்பாளர் ரவி ரீ-ரெகார்டிங் பணிகளை முடித்து சவுண்ட் நெகட்டீவை ஒப்படைத்திருந்தார். ராஜ்கபூர் தரப்போகும் விருந்தை முடித்துக்கொண்டு சவுண்ட் நெகட்டீவை எடுத்துக்கொண்டு சென்னை செல்ல இரவு 9 மணி விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து முடித்தாகிவிட்டது.

மாலை ஏழு மணிக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார் ராஜ்கபூர். ஸ்ரீதரையும் கோபுவையும் கப்பல் போன்ற ராஜ்கபூரின் கார் அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றபோது மாலை 7.30 மணி. இருவரையும் வரவேற்றார் ராஜ்கபூர். அப்போது எக்ஸ்பிரஸ் கார்டு என்ற புதியவகை சீட்டு விளையாட்டை ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்ரீதருக்கு ஆட்டம் பிடித்துப்போக ராஜ்கபூரும் ஸ்ரீதரும் நேரம்போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று சுவர்க்கடிகாரத்தைக் கண்ட கோபுவின் வயிறு கலங்கிப்போனது.

தனது கண்களை நம்ப முடியாமல் தனது கைக்கடிகாரத்தையும் பார்த்தார் கோபு. மணி அதே 8.30 காட்டியது. “ அய்யோ விமானம் புறப்பட இன்னும் சரியாக அரைமணிநேரம்தான் இருக்கிறது. எழுந்திரு ஸ்ரீ…” என்று கத்தியேவிட்டார் கோபு…அந்த சூப்பர் ஸ்டார் நாயகன் அதிர்ந்துபோய் கோபுவைப் பார்த்தார்...

சிரிப்பு தொடரும்.

தொடர்புக்கு: tanthehindu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்