கோணங்கள்: கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய விமர்சனமும்

By கேபிள் சங்கர்

நான் வலைப் பூ எழுத்துக்காரன். அதுவே எனது எழுத்தின் முகம். அதுவொரு சுதந்திரக் களம். கொத்து பரோட்டா என்கிற தலைப்பில் 2009-ம் ஆண்டிலிருந்து பத்தி எழுத்து பாணியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதிவருகிறேன். பல வார, மாத இதழ்களில் கதை, கட்டுரை, விமர்சனங்கள் எழுதி வெளி வந்திருந்தாலும் எனது வலைப்பூ வழியே பிரபலமான பத்தி எழுத்துக்கென்று தனி வாசகர் வட்டம் உருவானது.

அதன் பின்னணியில் எந்த வியாபார உத்தியும் இல்லை. எத்தனை சோதனை வந்தாலும் உள்ளது உள்ளபடி எழுத வேண்டும் என்ற விரதம் எனக்குக் கை கொடுத்தது. இது பல்லைக் கடித்துக்கொண்டு நான் கடைபிடிக்கிற விரதமல்ல. தாகமெடுக்கிற போதெல்லாம் தண்ணீர் குடிப்பதுபோல இயல்பாக நடப்பது. அனலில் நின்று பரோட்டா சமைத்தாலும் சாப்பிட்டாலும் நிறைய தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். நானும் நிறையவே தண்ணீர் குடித்திருக்கிறேன்.

கொத்து பரோட்டாவை ருசித்தவர்கள் கொத்துக் கொத்தாக வந்து முதுகில் தட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பலர் “ மகனே நேரா மாட்டினே நொங்கு எடுத்திருவோம்” என இங்கிதமாய் மிரட்டியிருக்கிறார்கள். கொத்து பரோட்டா புத்தகமாகவும் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. வலைப்பூவில் கிடைத்த விமர்சனங்களைவிடப் புத்தகமாய் வெளிவந்து கிடைத்த விமர்சனங்கள் அதிகம்.

முகத்தில் அடித்தாற்போலக் கழுவி ஊற்றும் விமர்சனங்களை ஏற்றுச் சமாளிக்கும் பக்குவத்தை இத்தனை வருட வலைப்பூ எழுத்து கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த நேரத்தில் ரசனை வளர்க்கும் தி இந்து தமிழில் பொழுதுபோக்கு உலகை, உழுது, களைபிடுங்கி எழுதுவதென்றால் அது பெரிய பொறுப்பு. கண்டிப்பாக முயற்சிப்பேன். நீங்களும் கண்டிக்கவோ, கை கொடுக்கவோ கண்டிப்பாக வருவீர்கள். எதுக்கு இத்தனை பீடிகை என்று கேட்பீர்களானால்… மன்னிக்கவும். என்னை அறியா வாசகர்களும் அதிகமிருக்கலாம். அதற்காகத்தான் இந்த “ கும்பிடுறேன்.. சாமி”. விஷயத்துக்கு வருவோம்.

விமர்சனக் கொடுக்குகள்

சமீப காலமாய் கோடம்பாக்கத்தில் பெரும் விவாதத்திற்கான விஷயமாகிவிட்டது இணையதள மற்றும் வலைப்பூ சினிமா விமர்சனங்கள். முன்பெல்லாம் பத்திரிகைகளில் மட்டுமே தமிழ் சினிமா விமர்சனங்கள் வெளிவரும். ஒரு சில பத்திரிகைகளின் விமர்சனம் வந்த பிறகே படம் பார்ப்போம் என்று காத்திருந்து படம் பார்த்த ரசிகர் கூட்டம் ஒன்று இருந்ததது. ஒரு பிரபல பத்திரிகை,

பிரபல இயக்குனர் படத்திற்கு வெறும் ‘சீ” என்று எழுதியதால் மட்டுமே அப்படம் ஓடவில்லை என்கிற நம்பிக்கை இருந்த காலமும் உண்டு. அப்போதெல்லாம் அவங்க நல்ல மார்க் கொடுத்திட்டாங்கன்னா தப்பிச்சிரலாம் என்று ஒரு கூட்டமும், “நாங்க மாஞ்சு மாஞ்சு உக்காந்து யோசிச்சு படமெடுப்போம் இவங்க ஸ்கூல் வாத்தியார் மாதிரி மார்க் போட யாரு அனுமதி கொடுத்தது?” என்று இன்னொரு கூட்டமும் புலம்பிக்கொண்டுதானிருந்தார்கள். பின்பு டிவி வந்தவுடன் ‘டாப் டென்’ என விமர்சனம் செய்யப்பட்டது. “கால் மேல கால் போட்டு உக்கார்ந்துகிட்டு விமர்சனம் பண்றது ஈஸி. படம் எடுக்கிறவன் கஷ்டம் அவங்களுக்குத் தெரியுமா?” என்றார்கள்.

தொலைத் தொடர்பு வளர, வளர, வெறும் வாய்க்கு நிறையவே கிடைத்தது அவல். அடுத்து வந்தது எஸ்.எம்.எஸ். காலம். படம் பார்த்த அரை மணி நேரத்தில் நல்லாயிருக்கு, இல்லை, மொக்கை என சில வார்த்தைகளில் ரிசல்ட்டைக் கொடுக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். இந்த மொபைல் போன் வந்துதான் சினிமாவைச் சீரழிக்கிறது என்று புதுக் காரணம் சொன்னார்கள். இணையம் வந்து அதில் தமிழில் எழுதக்கூடிய சாத்தியங்கள் அதிகமானதும், பத்திரிகைகளில் மட்டுமே எழுத முடியும் என்கிற நிலை மாறிப்போனது. விளைவு...? யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை இணைய வெளியில் கொட்ட முடியும் என்கிற நிலவரம் கலவரமானது.

இந்த கட்டற்ற இணையச் சுதந்திரம் சினிமாவை மட்டுமல்ல, உலகில் உள்ள யாரையும் விமர்சிக்க வழி செய்கிறது. “ஏ அமெரிக்காவே உன்னை எச்சரிக்கிறேன்” என்று தங்கப்பதக்கம் படத்தில் சோ அரசியல்வாதியாய் பந்தா காட்டுவாரே, அதையெல்லாம் நிஜமாகவே இணையவாசிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கையேந்தி பவன் குருமா முதல் ஓபாமா வரை யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சனம் செய்யலாம் என்று வந்துவிட்ட பிறகு ஊர் வாயை எப்படி அடக்க முடியும்?

கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய வாய்மொழியும்

இணையத்தில் வரும் விமர்சனங்களை வெற்றி பெற்ற படக் குழுவினர் விரும்புகிறார்கள். ஆனால் வெற்றியடையாத படக் குழுவினர் அதை விரும்புவதில்லை. இத்தனைக்கும் அவர்களின் முந்தைய படம் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று அதில் வந்த விமர்சனங்களால் படத்தின் மதிப்புக் கூடி வெற்றியும் பெற்றிருந்தாலும்கூட, அதை அவர்கள் கஜினி சூர்யாபோல மறந்துவிடுவார்கள். பொதுவாக இணைய விமர்சனங்களை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை.
ஏனென்றால் அவர்கள் உயர்வாக நினைத்த பல விஷயங்களைக் கட்டுடைத்துக் காசு கொடுத்து படம் பார்த்தவன் “என்னாத்த நீ கிழிச்சிட்டே” என்று நெஞ்சில் ஏறி மிதிக்கிற வகையில் எழுதிவிடுவதால் படைத்தவர்கள் கோபத்தில் துடிக்கிறார்கள்.

இவனுங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? முடிஞ்சா நீ சினிமா எடுத்துப் பாரு” என்று ஒரு பக்கம் நடிகர் ஆதரவு கூட்டமும், இன்னொரு பக்கம் எதிர் கூட்டமும் நின்று வார்த்தைகளால் வாள் வீசிக்கொண்டிருக்கும். முன்பெல்லாம் படம் வெளியான மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் உருவாகும் ‘மவுத் டாக்’ எனும் மாயாஜாலம்தான் இன்று இணையம் மூலமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திட்டோ, பாராட்டோ ரெண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் மனநிலை அல்லது எடுத்துகொள்வது மாதிரி நடிக்கத் தெரிந்தவர்கள்தான் கெத்தாக இணையத்தில் உலாவ முடியும். “வீரம்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது” என்று கமல் சொன்னதுபோல.

இணையத்தில் எழுதப்படுவதெல்லாம் விமர்சனமா என்று கேட்டீர்களானால் அதை பத்தி தனியே பேச நிறைய இருக்கிறது. இப்படி நான் சொன்னதிற்கு “நீ என்ன பெருசா எழுதி கிழிச்சிட்டே” என்றும் விமர்சனம் வரலாம். ஆனால் விமர்சனத்தைத் தாங்க மாட்டாதவர்கள் வசதியாக மறந்துபோய்விட்ட ஒன்றுண்டு. அது திரைப்பட உருவாக்கத்தில் செலுத்தியிருக்க வேண்டிய நேர்த்தி. இது பரோட்டாவைப் போல சுடச்சுட விலைக்குக் கிடைக்காது.

மினி ரிவ்யூ

“நல்லா கேட்டுக்க பாடம்... இனி வில்லன் சப்ஜெக்டுதான் ஓடும்” இந்த வரிகளை கேட்டதும் அட ட்ரெண்டியா இருக்கே என்று கவனிக்க ஆரம்பித்தேன். தடால் தடால்னு நகைச்சுவையாக வார்த்தைகள் வந்து விழ ஆரம்பித்தன. “பல்லக்கு தூக்குற அல்லக்கைகூட ராணிய மடிச்சா ராஜாதான்... ஓசோன் படலத்து ஓட்டைய நீயும் ஓவர்லாப் பண்ணி வித்துக்கடா” என இறந்து போன வாலி உயிரோடு எழுந்து வந்து எழுதினதுபோல இருந்தது. பாடலாசிரியர் யாரென்று தேடியபோது ரமேஷ் வைத்யா என்றது யுட்யூப். இவர் ஏற்கனவே “அதிகாலையில் சேவலை எழுப்பி” என ஒர் சூப்பர் ஹிட் பாடலைக் கொடுத்தவர். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

பல்லக்கு - அல்லக்கை மாதிரியான சுவாரசிய வார்த்தை விளையாட்டை சமீப பாடல்களில் நான் கேட்கவில்லை. முழுக்க முழுக்க நகைச்சுவையுடனான பாடல் வரிகளில் மிக ஈஸியான, பெப்பியான ஷான் ரோல்டனின் டியூனும், குரலும் ஆடாம ஜெயிச்சோமடா படத்திற்கு பலம் என்றே கூற வேண்டும்.

தொடர்புக்கு: sankara4@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்