மற்றும் இவர்: கதி கலங்க வைத்த தாத்தா!

By டி. கார்த்திக்

‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்தவர்களைக் கதி கலங்க வைத்த கொலை செய்யும் தாத்தாவைப் பார்க்கப் போயிருந்தேன். போனபோது சட்டப் புத்தகங்களைத் துழாவிக்கொண்டிருந்தார். ‘நான் ஒரு வழக்கறிஞர்..’ என்று சொல்லிக்கொண்டே வழக்கில் பேச வேண்டிய குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ஆணவக் கொலை செய்த தாத்தாவா இவர் என்று ஆச்சரியம்தான் ஏற்பட்டது.

கொடூரமாக ஆணவக் கொலை செய்யும் தாத்தாவாகப் பரிச்சயம் ஆகிவிட்ட அவரது பெயர் ‘கராத்தே’ வெங்கடேசன். 65 வயதான அவர் தமிழ் சினிமாவுக்குப் புதிய முகம் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால், இப்போதுதான் சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. திறமைக்கான அங்கீகாரம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பதற்கு உதாரண புருஷராகியிருக்கிறார்.

கராத்தே மாஸ்டராகத்தான் தொழிலைத் தொடங்கியிருக்கிறார்  வெங்கடேசன்.

‘அன்புக்கு நான் அடிமை’, ‘ரங்கா’ போன்ற ரஜினி படங்களில் நடித்த கராத்தே மணியின் உதவியாளர் இவர். 1978-ம் ஆண்டில் சண்டைக் கலைஞராக கராத்தே வெங்கடேசன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். படத் தயாரிப்பாளரும் சண்டை இயக்குநருமான கோபாலன் குருக்களின் ஆதரவால் சுமார் 60 தமிழ்ப் படங்களில் சண்டைக் கலைஞராக நடித்திருக்கிறார்.

1980-களில் சண்டைக் கலைஞராக நடித்தபோது  சட்டம் படிக்க ஆசை வரவே, அதையும் படித்து முடித்தார். சண்டைக் கலைஞராகவும் வழக்கறிஞராகவும் ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி செய்ய கராத்தே வெங்கடேசனால் முடியவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தபோது வழக்கறிஞர் பணி முழுநேரப் பணியானது. பல ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டில் ‘வெயில்’ படம் மூலமே மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். அவருக்கு அதன்பிறகு நன்கு நடிக்கக்கூடிய சில படங்களில் வாய்ப்பு கிடைத்தபோதும், சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெயர் கிடைக்கவில்லை.

ஆனால், வெங்கடேசனின் 40 ஆண்டு கால ஏக்கத்தை ‘பரியேறும் பெருமாள்’ என்ற ஒற்றைப் படம் தீர்த்து வைத்துவிட்டது. கொலைக்கார தாத்தா கதாபாத்திரத்துக்காக 60 வயதுக்கு மேற்பட்ட, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிற ஆளை இயக்குநர் மாரி செல்வராஜ் தேடிக்கொண்டிருந்தார். ஸ்டன்ட் யூனியனில் 30-க்கும் மேற்பட்டோரை அழைத்து போட்டோ ஷூட் செய்தபோது அதில் கராத்தே வெங்கடேசனும் கலந்துகொண்டார். அவர்களில் வெங்கடேசனை மட்டும் இயக்குநர் செல்வராஜ் தேர்வு செய்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ பட வாய்ப்பு இப்படித்தான் இவருக்குக் கிடைத்திருக்கிறது.

ஆணவக் கொலை செய்யும் கதாபாத்திரத்தில் எப்படித் துணிச்சலாக நடித்தீர்கள் என்று கேட்டால், சாந்தமாகச் சிரிக்கிறார் கராத்தே வெங்கடேசன். “கொலைக்கார தாத்தா கதாபாத்திரம் பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் முதலிலேயே சொல்லிவிட்டார். அதனால் எனக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. ஆணவக் கொலை செய்யும் கதாபாத்திரத்தைப் பார்த்து சிலராவது திருந்துவார்கள் என்று நினைத்தேன். எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.” என்கிறார் கராத்தே வெங்கடேசன்.

matrum-2jpg

வழக்கறிஞராக இருந்ததால், ஆணவக் கொலைகள் பற்றிய விஷயங்கள் இவருக்கு அத்துபடி. அதனால், இந்தக் கதாபாத்திரத்துக்காக எந்த ஹோம்வொர்க்கும் செய்யாமலேயே நடித்திருக்கிறார் வெங்கடேசன். கிளைமாக்ஸ் காட்சியில் ரயில்வே பாலத்தின் கீழே வெங்கடேசன் விழுந்து எழுந்து நடித்த காட்சி பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. கராத்தே, சிலம்பம், யோகா போன்றவற்றைச் செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால், கிளைமாக்ஸ் காட்சியில் விழுந்து எழ முடிந்திருக்கிறது. அந்தக் காட்சியில் நடித்தபோது கால் இடறி விழுந்து வெங்கடேசனின் முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக வெங்கடேசன் இன்னும் சிகிச்சை எடுத்துக்கொண்டுவருகிறார்.

சண்டைக் கலைஞர்கள் எல்லோருக்குமே படத்தில் பேசக்கூடிய கதாபாத்திரங்கள் அமைந்துவிடாது. சிலருக்கு மட்டுமே அது அமையும். பல ஆண்டுகள் கழித்து ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால், கராத்தே வெங்கடேசனுக்கு இப்போது புகழ் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. கொலைக்காரத் தாத்தா கதாபாத்திரத்தைப் பார்த்துத் திட்டியவர்கள்கூட, தற்போது அவரைப் பாராட்டுவதாகப் புளங்காகிதம் அடைகிறார் வெங்கடேசன்.

‘பரியேறும் பெருமாள்’ படம் வெங்கடேசனுக்கு மட்டும் சினிமாவில் புதிய வாசலைத் திறக்க வில்லை. அவரைப்போல சினிமாவில் புகழ் வெளிச்சத்துக் காகக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்கள் போன்றோருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

காமெடிக்கு ரெடி!

முதல் படம்?

சுமன் கதாநாயகனாக நடித்த ‘இரும்புக் கரங்கள்’. ஆண்டு 1978.

திருப்புமுனை தந்த கதாபாத்திரம்?

‘2003-ம் ஆண்டில் வெளியான ‘வெயில்’. ஒரு நடிகராக என்னை அடையாளம் காட்டியது.

பெயர் சொல்ல வைத்த படங்கள்?

‘மிளகா’, ‘நர்த்தகி’, ’வால்மீகி’, ‘சண்டியர்’ போன்ற படங்களில் நடிக்க சாத்தியமுள்ள கதாபாத்திரங்கள் அமைந்தன.

புதிய பட வாய்ப்புகள்?

‘ராஜ பீமா’, ‘எல்.கே.ஜி.’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம்?

எனக்கு காமெடி சென்ஸ் நிறைய உண்டு. யாராவது வாய்ப்புக் கொடுத்தால் ஜமாய்த்துவிடுவேன்.

 

தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்