எனது தமிழின் ஆசான்!

By வைரமுத்து

என் தமிழாசானே! வைகை ஆற்றங்கரையில் பிறந்தவனைத் தமிழ் ஆற்றங்கரைக்கு ஆற்றுப்படுத்திய பெருமகனே! நீங்கள் புகழின் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில், உங்கள் ‘பராசக்தி’ பட வசனங்கள் தமிழ்நாட்டுக் காற்றில் கந்தகத்தையும் மகரந்தத்தையும் கலந்துகொண்டிருந்த காலகட்டத்தில், விழுப்புண்கள் என்னும் கழற்ற முடியாத விருதுகளை உங்கள் மார்புக்கு நீங்கள் அணிந்து பார்க்க ஆசைப்பட்ட போராட்டப் பொழுதுகளில், மதுரை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் வரைபடத்துக்குள்கூட வரமுடியாத மெல்லிய கிராமத்தில் நான் குழந்தையாய் விழுந்து 'குவா' சொல்கிறேன்.

எனது பத்தாவது வயதில், அதாவது உங்கள் முப்பத்தொன்பதாவது வயதில் இந்த ஏகலைவனுக்கு நீங்கள் தூரத்திலிருந்தே துரோணர் ஆகிறீர்கள்.

தறிகெட்ட குதிரையாய், காற்றோடு காற்றாய்ப் பயணப்பட்டுக் கொண்டிருந்த மனசு சட்டென்று நின்று ஒரேபுள்ளியில் குவிந்தது உங்கள் தமிழ் கேட்டுத்தான்.

ஆயித்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்றில், இயக்கத்தில் ஒரு விசுவரூபமாய் நீங்கள் விழுதுவிட்ட பொழுதில், உங்கள் எழுத்தும் பேச்சும் தமிழ்நாட்டின் மந்திர உச்சாடனங்களாய் மாறிவிட்ட பொழுதில், ‘காஞ்சித் தலைவன்’ படத்தில் நீங்கள் எழுதிய ராஜ வசனங்கள் திரையரங்குகளை சங்கீத மண்டபங்களாய் மாற்றிவிட்ட மந்திர வருடத்தில், தேனியில் உங்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் வெள்ளி வீரவாளும் கேடயமும் பரிசளித்த அந்தப் பொன் நிமிடங்களில் அந்தத் தேனியிலிருந்து பத்தாவது மைலில் எனது பத்தாவது வயதில் உங்கள் ‘பராசக்தி’ வசனங்களை நான் பாடம் செய்துகொண்டிருந்தேன்.

அது எனக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சிகளை என்னவென்று சொல்ல....?

அதைப் போல் பேசிப்பார்க்க வேண்டுமென்று உதடுகளும் எழுதிப்பார்க்க வேண்டுமென்று விரல்களும் ஒரே நேரத்தில் துடித்துக் கொண்டன.

உங்கள் எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அந்தச் சாணித் தாள்கள் என் உயிருக்கு எருவாயின.

'பராசக்தி’ ‘மந்திரிகுமாரி’,  ‘மனோகரா' போன்ற வசனப் புத்தகங்களை, தங்க நாணயங்களைத் தொலைத்துவிட்ட உலோபியைப் போலத் தேடித் தேடித் திரிந்திருக்கிறேன்.

பாடப் புத்தகத்தில் உள்ள தமிழ் என்னைக் கசையால் அடித்தது; உங்கள் படைப்புகளில் உள்ள தமிழ் என்னை மயிலிறகால் வருடிவிட்டது.

சங்கத் தமிழுக்கு இருக்கும் இறுக்கம் ‘மனோகரா’வில் நீங்கள் எழுதிய சங்கிலித் தமிழுக்கும் இருக்கிறது.

 “பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, வீரனே! என் விழி நிறைந்தவனே! தீரர் வழி வந்தவனே! என்று யாரைச் சீராட்டிப் பாராட்டினீர்களோ அவனை, அந்த மனோகரனை, சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?” பழுக்கக் காய்ச்சிய இந்த இரும்பு வசன வரிகளை வாய்விட்டு வாசித்தபோது என் சித்தம் கெட்டது. ரத்தம் சுட்டது.

“புறநானூற்றின் பெருமையை மூடவந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும், கலிங்கத்துப்பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்... ஓடும்... ஓடும்... ஓலமிட்டு ஓடும்' ஓங்காரக்கூச்சலிட்டு ஓடும்.''

இந்த அக்கினி வசனங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பில் அவசர அவசரமாய் நூலகத்துக்கு ஓடிச் சென்று - ''புறநானூறு கொடுங்கள்; கலிங்கத்துப் பரணி கொடுங்கள்'' என்று நான் கிளர்ச்சியோடு கேட்டபோது ஒரு பன்னிரண்டு வயதுப் பையன் பரிசம் போட வந்திருப்பது மாதிரி என்னைப் பரிகாசத்தோடு பார்த்தார்கள். இப்படி என்னுள் நீங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தீர்கள்; நான் உங்கள் தமிழால் வருடா வருடம் வளர்ந்தேன்.

திருவாரூர்த் தெருவில் உங்கள் பொதுவாழ்க்கை ரதம் புறப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை உங்களின் எழுத்தாக, பேச்சாக, செயற்பாடுகளாக, சின்னங்களாக, அன்றாட வாழ்வியலாக, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சியாக, மாறுதல்களாக, கண்ணீராக, ரத்தமாக, வேர்வையாக, கையொப்பமாக, உங்களின் ஒவ்வொரு நாளுக்கும் பதிவு இருக்கிறது.

இனிவரும் நூற்றாண்டில் இன்னொரு மனிதனுக்கு இப்படி ஒரு வாய்ப்பிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு நல்ல தலைவனின் லட்சணங்கள் என்று நான் கருதுபவை மூன்று. வளையாத மானத்தோடு வாழ்க்கை வாழ வேண்டும்.

தான் வாழும் தலைமுறையை, புதிய பொருளாதார -பண்பாட்டுச் சிகரங்களை நோக்கி ஓர் அங்குலமாவது உயர்த்தியிருக்க வேண்டும்.

வருகின்ற தலைமுறைக்கும் தன் பெயரை ஓர் ஊட்டச்சத்தாய் விட்டுச் செல்ல வேண்டும்.

எனக்குத் தெரிந்து இந்த மூன்று இலக்கணங்களுக்கும் இருக்கும் இலக்கியம் நீங்கள்தான்.

இலக்கியமே! உங்களை ஒவ்வொரு வாக்கியமாக மனப்பாடம் செய்கிறேன், நானே இலக்கியமாகிறேன்.

தொடர்புக்கு: poet.vairamuthu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்