திரைப்பள்ளி 09: ஷியாமளன் தவறவிட்ட புலிக்கதை!

By ஆர்.சி.ஜெயந்தன்

இந்திய சினிமா எத்தனையோ சிறந்த கதைகளை, வாழ்க்கை வரலாறுகளைத் தவறவிட்டிருக்கிறது. ரிச்சர்ட் அட்டன்பரோ என்ற வெள்ளைக்காரர் முந்திக்கொண்டாலும் காந்தியின் வாழ்க்கையைப் பிரம்மாண்ட உயிர்ப்புடன் திரையில் கொண்டுவருவதில் வெற்றிகண்டார். 11 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த திரைக்கதை உட்பட 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

‘காந்தி’படத்தின் திரைக்கதை உத்தி மிக எளிமையானது. காந்தியின் இறுதி ஊர்வலத்தில் தொடங்கும் படம் ஒரே பிளாஷ் - பேக்காக விரிந்து அவரது வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. காந்தி கொல்லப்பட்டபின் மீண்டும் இறுதி ஊர்வலத்துக்குத் திரும்பும் படம், அவரது அஸ்தி கடலில் கரைக்கப்படுவதோடு முடிந்துவிடுகிறது. பிளாஷ் – பேக்கில் உத்தி பயன்படுத்தப்பட்டாலும் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு தொடக்கம் ஒரு நடுப்பகுதி ஒரு முடிவு என்ற மூன்று அங்கங்களாகப் பிரித்தே திரைக்கதை அமைத்திருந்தார் ஜான் ரிச்சர்ட் பிரிலே.

22chrcj_m night syamalan எம்.நைட் ஷியாமளன் பாண்டிச்சேரியிலிருந்து…

இந்தியா தவறவிட்ட மற்றொரு படம் ‘லைஃப் ஆஃப் பை’. ஆங் லீ இயக்கிய இந்தப் படம், சிறந்த தழுவல் திரைக்கதை உட்பட 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 4 ஆஸ்கர்களை அள்ளியது. விருதுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் வெளியாகி 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வசூலையும் குவித்தது. ‘லைஃப் ஆஃப் பை’ பற்றி மற்றொரு சுவையான தகவலும் உண்டு. கனடா நாட்டின் எழுத்தாளரான யான் மார்டல் எழுதி, புக்கர் பரிசு வென்ற நாவலே ‘லைஃப் ஆஃப் பை’. இந்த நாவலின் கதை பாண்டிச்சேரியில் தொடங்குகிறது. நாவலைப் படமாக்க முன்வந்த ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ், பாண்டிச்சேரியில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்து, ஹாலிவுட்டில் இயக்குநராக வெற்றிபெற்ற மனோஜ் நைட் ஷியாமளனைத் திரைக்கதை எழுதி இயக்கும்படி அழைத்தது.

அழைப்பை ஏற்று நாவலைப் படித்துப் பார்த்த ஷியாமளன், “ ஒரு இயக்குநராக ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் அனுபவத்தை இந்தப் படத்தின் மூலம் தர முடியும் என்று தோன்றவில்லை” என்று கூறி விலகிக் கொண்டார். ஆனால் நாவலில் உள்ளபடியே நாயகன் பையின் தொடக்கக் கதை பாண்டிச்சேரியில் படம்பிடிக்கப்பட்டு ஒரு தமிழ்ப் பாடலும் சில தமிழ் வசனங்களும் இடம்பெற்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்துக்கு நான்கு ஆஸ்கர்கள் கிடைக்கும் என்று ஷியாமளன் நினைத்திருக்கமாட்டார்.

நான்கு பக்கம் போதும்!

க்வென்டின் டோரன்டினோ, கிறிஸ்டோபர் நோலன், டேவிட் லீன் உட்பட திரைக்கதையை கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் ஹாலிவுட் கில்லாடிகளின் பட்டியல் மிகப் பெரியது. திரைக்கதையைக் கன்னாபின்னாவென்று இவர்கள் என்னதான் கலைத்துப்போட்டுக் கதை சொன்னாலும் படத்தில் ஒரு விஷயம் தெளிவாக இருக்கும். முதன்மைக் கதாபாத்திரம், அது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, அதை எப்படிச் சமாளித்து அது வெற்றிபெறுகிறது அல்லது தோற்றுப்போகிறது எனும் கதாம்சம் மூன்று அங்கம் எனும் வடிவத்துக்குள் வந்தே தீரும்.

22chrcj_bakyaraj பாக்யராஜ்

திரைக்கதை மன்னன், திரைக்கதை திலகம் என்றெல்லாம் புகழப்படும் கே.பாக்யராஜ் வடிவம் குறித்துச் சொல்வதை மண்டைக்குள் ஏற்றி வைத்துக்கொள்வது நல்லது. “சீன் பேப்பரைப் பார்த்துதான் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை எனது டீமில் இருக்காது. இதுதான் கதை என்று முடிவானவுடன் காட்சிகளை யோசிப்பதற்காக மட்டும் கதை விவாதத்தில் எல்லோரும் உட்காருவோம். உதவி இயக்குநர்களில் இவர் பெரியவர் இவர் சின்னவர் என்ற பாகுபாடு இருக்காது.

60 காட்சிகளை விவாதித்து உருவாக்கியபின் அந்தக் காட்சிகளின் ‘ஒன் லைன் ஆர்டரை’ நான்கு பக்கங்களுக்கு வரிசை எண் கொடுத்து எழுதிவிடுவேன். ஒன் லைன் எழுதும்போதே தொடக்கம், நடுப்பகுதி, போராட்டம், முடிவு என்ற திரைக்கதையின் வடிவம் சரியான ஃப்ளோவில் இருக்கிறதா என்று தெரிந்துவிடும். படப்பிடிப்புக்கு இந்த நான்கு பக்க ஒன் லைன் ஆர்டர் இருந்தால் போதும். கதையை விவாதித்து விவாதித்து வசனம் முழுவதும் மண்டையில் ஏறி இருப்பதால், ஒன்லைனை வைத்து ஸ்பாட்டில் வசனம் எழுதிக்கொள்வேன்” என்கிறார்.

வசனம் இல்லாத காட்சிகளின் ஒன் லைன் ஆர்டர் இருந்தால் போதும் என்று கூறும் பாக்யராஜ், திரைக்கதையின் வடிவத்தில் இருக்க வேண்டிய ஓட்டம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் காட்டுகிறார். மூன்று அங்க முறை எனும் வடிவத்துக்குள் இருக்கும் அம்சங்களை முதலில் ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் திரைக்கதைக்குள் பொருத்திப் பார்க்கும் முன்பு, மூன்று அங்கமுறையை எளிமையாகத் தெரிந்துகொண்டு செல்லுவோம்.

முதல் அங்கம்

திரைக்கதையின் மூன்று அங்கங்களில் முதல் அங்கம் ‘நிறுவுதல்’ (Setup). எதையெல்லாம் நிறுவ வேண்டும்? கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது, அவர்கள் வாழும் உலகை அறிமுகம் செய்வது, முதன்மைக் கதாபாத்திரத்துக்கும் (The Protagonist) மற்ற கதாபாத்திரங்களுக்கும் இடையிலான தொடர்பை, உறவை அறிமுகம் செய்வது என விளக்கிச் சொல்ல வேண்டியிருப்பதால் திரைக்கதை மொழியில் இதை Narrative exposition என்கிறார்கள். இதே முதல் அங்கத்தில் மறக்கக் கூடாத ஒரு நிறுவதல் உண்டு!

அதுதான் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லப்போகிற முக்கிய சம்பவத்தை (Inciting incident) நிகழச்செய்வது. இதை முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை அல்லது அது அடைய நினைக்கும் லட்சியம் என்று வைத்துக்கொள்ளலாம். அந்தப் பிரச்சினையை தீர்க்க, அல்லது லட்சியத்தை அடைய முதன்மைக் கதாபாத்திரம் முனைப்புடன் முன்வருவதோடு முதல் அங்கம் முடிகிறது.

இரண்டாம் அங்கம்

பிரச்சினையில் சிக்கிக்கொண்ட முதன்மைக் கதாபாத்திரம், அதை எப்படி எதிர்கொள்கிறது (Confrontation) என்பதைச் சித்தரிப்பதே இரண்டாவது அங்கம். பிரச்சினையை அல்லது லட்சியத்தைத் தனது பலத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் முதன்மைக் கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறது, எதிர்கொள்வதால் அதற்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன, லாபங்கள் என்ன, மீண்டும் மீண்டும் உருவாகும் தடைகளை அது எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பரபரப்பும் விறுவிறுப்புமாக சித்தரிக்கும் பகுதிகளைத் தன்னிடம் வைத்திருக்கிறது இரண்டாவது அங்கம்.

மூன்றாம் அங்கம்

முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சினையை அதனால் தீர்க்கமுடிந்ததா, அது தன் லட்சியைத்தை எட்ட முடிந்ததா என்பதைக் குழப்பம் ஏதுமின்றி கூறுவதே தீர்வு அல்லது முடிவு (Resolution -The climax) எனும் மூன்றாவது அங்கம்.

இப்போது ‘லைஃப் ஆஃப் பை’ திரைக்கதைக்கு வருவோம்.‘காந்தி’திரைப்படத்தைப் போல இதுவும் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குச் சென்று மீண்டும் நிகழ்காலத்துக்கு வரும் திரைக்கதைதான். ஆனால் கடந்த காலத்தில் விரியும் பிளாஷ் பேக் உத்தியில் நாயகன் பையின் வாழ்க்கை விரிகிறது. அதற்குள் மூன்று அங்கம் எனும் வடிவம் கச்சிதமாகப் பொருந்தியிருந்ததால் பாதிப் படத்தில் நீங்கள் எழுந்துசென்றுவிட முடியாதவாறு அது உங்களை திரையரங்குக்குள் ‘கேஸ்ட் அவே’ செய்துவிடுகிறது. இப்போது கடலில் தத்தளிக்கும் பை, திரையரங்குக்குள் நீங்கள் திரைக்கதையின் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அடுத்த வகுப்பில் விடுதலை...

தொடர்புக்கு: jesudoss.c@thethehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

27 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்