எனக்குச் சிலம்பம் சுழற்றத் தெரியும்! - சமந்தா பேட்டி

By கா.இசக்கி முத்து

 

‘இ

ரும்புத்திரை’ கதையைக் கேட்டவுடனே, நம்ம சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சினைகள் நடக்கிறதா என்று பயந்தேன். இண்டர்நெட் மூலம் நமக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் உள்ளன, நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் எப்படிக் கசிகின்றன என்பதை இயக்குநர் மித்ரன் அவ்வளவு அழகா கதைக்குள் கொண்டு வந்திருக்கார்” என்று சமந்தா பேசும்போது அவரிடம் அவ்வளவு உற்சாகம். சென்னையில் பிறந்த பெண், தற்போது ஆந்திரத்தின் மருமகள். திருமணமாகிவிட்டது அவருடைய நடிப்பு வாழ்க்கையை கொஞ்சம்கூட மாற்றவில்லை.

விஜய், சூர்யா ஆகியோரைத் தாண்டி விஷாலுடன் பணிபுரிந்த அனுபவம்?

விஷால் செட்டில் இருந்தாலே செம காமெடிதான். அங்கிருக்கும் அனைவரையும் சிரிக்க வைச்சுட்டே இருப்பார். திரையுலகம் நல்லாயிருக்கணும், மக்கள் நல்லாயிருக்கணும் என்று ரொம்பவே மெனக்கெடுகிறார். அவருக்கு இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பு இருப்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். அவர் ஒரு திறமைசாலி.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வருவது குறித்து...

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி எப்போதுமே செம காமெடிதான். ஒரு ஊரை மையமாகக் கொண்ட கதையில் நான் படம் பண்ணதில்லை. முழுக்கப் பாவாடை தாவணி, சிலம்பம் கற்றுக்கொண்டு ‘சீமராஜா’ படத்தில் நடிச்சது நல்ல அனுபவம். தியாகராஜன் குமாரராஜா படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ அனைவருக்குமே அதிர்ச்சியா இருக்கும். சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி இடையே போட்டி கிடையாது. ஆனால் அவர்களது முந்தைய படத்துடனே போட்டியிட்டு வருகிறார்கள்.

திருமணமாகியும் தொடர்ச்சியாக நாயகியாக நடித்து வருகிறார் என்ற பார்வை இருக்கிறதே...

திருமணத்துக்குப் பிறகு வெளியான ‘ரங்காஸ்தலம்’ வெற்றிப்படமாக அமைந்தது. திருமணத்தால் படத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நல்ல கதாபாத்திரங்கள், சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாராலும் என்னைப் புறக்கணிக்க முடியாது என நினைக்கிறேன். திருமணமான நடிகை என்ற இமேஜை உடைப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். ஆனால், உடைப்பது மட்டும் போதாது.

தொடர்ச்சியாகப் பல வெற்றிப் படங்களைத் தந்தால் மட்டுமே, திருமணமான நடிகைகள் நாயகியாக நடிக்க முடியாது என்ற சிந்தனையை மாற்ற முடியும். ஒரு நாயகியாக, திருமணமான பிறகும் நடிப்புத் துறையில் எதிர்காலம் உள்ளது என்பதற்கு எதிர்காலத்தில் வரும் நடிகைகளுக்கு நான் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன்.

திருமணத்துக்குப் பிறகு சமந்தா எவ்வளவு மாறியிருக்கிறார்?

முன்பு ரொம்ப கோபப்படுவேன். திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் குறைச்சுருக்கேன். திருமணத்துக்குப் பிறகு மாலை 6 மணிக்கு வீட்டுக்குப் போயிடுவேன். அங்கே சினிமா பத்தி பேசக் கூடாது என்று நாக சைதன்யா சொல்லியிருக்கார். ஆனால், அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்க சண்டை போடுறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது.

சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுப்போம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. திருமணமான நாயகியாகவும் வெற்றிகரமாக இருக்க முடியும் என்று நாக சைதன்யா நம்புகிறார். இதை ஒரு வேலையாக மட்டுமே பாவித்துக் கொள் என்று அவர் சொன்னதுதான் சிறந்த ஆலோசனை.

திருமணத்துக்குப் பிறகு எந்த மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்?

வலுவான கதை இருக்கும் படத்தை எதிர்நோக்குகிறேன். வெறும் நாயகியாக மட்டும் நடிக்க அல்ல. ‘நடிகையர் திலகம்’ படத்தில் நான் நாயகி அல்ல. ஆனால், எனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை என்னால் தொடர்புபடுத்தி உணர முடிந்தது. போஸ்டரில் இருக்க வேண்டும், ஐந்து பாடல்களிலும் ஆட வேண்டும் என்பதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை.

தமிழைவிடத் தெலுங்கில், நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் அதிகமாக நடித்துள்ளேன். எதிர்காலத்தில் இது மாறும் என நம்புகிறேன். ஆனால், சில இயக்குநர்கள் மட்டுமே பெண்ணின் பார்வையில் இருந்து எழுதுகிறார்கள். பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் இங்கு ஆணுடைய பார்வையிலிருந்தே எழுதப்படுகின்றன.

திருமணத்துக்குப் பிறகும் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியானப் புகைப்படங்களைப் பகிர்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே...

கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தால் கண்டிப்பாக என்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள் என்று தெரியும். ஆனால், கடற்கரையில் புடவையா கட்ட முடியும்? நான் கவனத்தை ஈர்ப்பதற்காக அதைப் பகிரவில்லை. ஆனால், நான் எதைப் பகிர வேண்டும் என்பதைச் சொல்ல யாருக்கு உரிமைஉள்ளது? நான் திருமணமான பெண் என்ற காரணத்தாலேயே அவதூறாகப் பேசுகிறார்கள். என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை. நான் பயப்படவுமில்லை, இந்தப் பிரச்சினைக்குள் சிக்கவும் விரும்பவில்லை.

தெலுங்குத் திரையுலகில் ‘காஸ்டிங் கவுச்’ பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளதே...

தெலுங்கு சினிமா அல்லது சினிமாவில் மட்டும்தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா என்பதே பெரிய கேள்வி. இது அனைத்துத் துறைகளிலும், அனைத்துப் பணியிடங்களிலும் உள்ளது. நான் 8 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். இங்கே சில கறுப்பு ஆடுகள் உள்ளன. ஆனால் அவர்களைவிட அதிகமாக, நிறைய நல்ல, நேர்மையான, அழகான மனிதர்கள் இங்கு உள்ளனர். அந்தச் சில கறுப்பு ஆடுகளை அடையாளம் காண ஒரு அமைப்பைத் தொடங்கவுள்ளோம். இதனால் யாரும் இனி பயம் கொள்ளக் கூடாது. சரியான பாதையை நோக்கி எடுத்து வைக்கப்படும் முதல் அடி இது. கார்ப்பரேட் நிறுவனங்கள் போல சினிமா துறையிலும் சில கடுமையான விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

திருமணமானவுடன் சென்னையை மறந்து விட்டீர்களே...

யார் சொன்னது, சென்னை எப்போதுமே எனக்கு மிக நெருக்கம். இங்கு வந்தாலே பழைய ஞாபகங்கள் வர ஆரம்பிச்சிடும். இங்கிருக்கும் பல்லாவரம் தொடங்கி ஒவ்வொரு ரோட்டுக்கும் எனக்கு ஒரு கதையிருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்