மாற்றுக் களம்: எதனால் தடைபடுகிறது இவர்களின் அரசியல்?

By செய்திப்பிரிவு

மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி களத்தில் இறங்கிச் செயல்பட முடியாத நிலை ஒருபக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான தமிழக அரசியல் சூழ்நிலை இன்னொரு பக்கம். இவ்விரு வெற்றிடங்களுக்கு மத்தியில் பல புதிய அரசியல் குரல்கள் தமிழகத்தில் எழுச்சி பெற்றுவருவதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இந்த இரண்டு தலைவர்களும் முழு வீச்சில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், மாற்று அரசியலுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது ஒரு மாணவர் இயக்கம். அவர்கள் யார்? அவர்களின் முன்னெடுப்பு ஏன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது? மாணவர்களாக வீறுகொண்டு எழும் இளைஞர்களின் அரசியல் பிறகு எங்கே தடைபடுகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஆவணப்படம்தான் ‘இளைஞர்கள் என்னும் நாம்’.

ஆவணப்படம் என்றாலே அது சுவாரசியமற்றது; உண்மைகளை எந்தப் பூச்சும் இன்றி முன்வைப்பதால் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டக்கூடியது போன்ற எண்ணங்கள் பரவலாக உள்ளன. ஆனால், ‘இளைஞர்கள் என்னும் நாம்’ உணர்வுபூர்வமான ஒரு திரைப்படம்போல் நகர்கிறது. பல இடங்களில் எழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சில இடங்களில் வருத்தமும் வேதனையும் தருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு விதை

13chrcj_documentry pster100 

‘கவண்’ படத்தில் ஊடக அரசியலையும் ‘விவேகம்’ படத்தில் உலக அரசியலையும் தன் வசனங்கள் மூலம் பதிவுசெய்த இன்றைய கபிலன் வைரமுத்து, 10 ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவராக இருந்தபோது சக மாணவர்களை அணிசேர்த்துக்கொண்டு மாணவர் இயக்கம் தொடங்கியது பரபரப்பான செய்தியானது. பல்வேறு சமூகப்பணிகளை செய்துவந்த இந்த மாணவர் இயக்கம், தனது முக்கியக் குறிக்கோளாக ‘மாணவர்களின் அரசியல் பங்கேற்பு’ பற்றிய அவசரம், அவசியம் பற்றிய தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைப் பல்வேறு வடிவங்களில் செய்துவந்தது. ஒரு கட்டத்தில் ‘மக்கள் அணுக்கப் பேரவை’ என்ற அரசியல் அமைப்பாகவும் மாறியது. ஆனால், அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாதபடி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதையும் அந்த அமைப்புக்காகப் பயணித்தபோது, களப்பணி கொடுத்த அனுபவப் பாடத்தையும் இளைஞர்கள் நேரடி அரசியலில் இறங்கும்போது எதிர்படும் அறைகூவல்களையும் உண்மைகள் பளிச்சிடப் பிரதிபலிக்கிறது இந்த ஆவணப்படம்.

தங்களது பத்து வருட முயற்சிகளைப் பற்றிக் கூற நிறையவே இருந்தும் நீட்டி முழக்காமல் 37 நிமிடப் படமாக்கியிருக்கிறார்கள். கபிலன் வைரமுத்து, பிரசாந்த், இம்தியாஸ், ராஜபாண்டியன், நித்யா, நவீன், விஜய், ஜகன் என்று எட்டு பேர் சேர்ந்து தங்கள் அனுபவங்களைக் கோர்வையாகச் சொல்லியிருக்கிறார்கள். சுய அனுபவத்தில் இருந்து சமூக அனுபவமாக விரியும் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திகேயன்.ர.

பின்வாங்கியதன் பின்னணி

‘அரசியல் பேச நினைக்கும் இளைஞர்களுக்கு முதல் எதிர்ப்பு குடும்பத்தில் இருந்துதான் வருகிறது’ என்பதற்கு ஆதாரங்களோடு இவர்கள் சொல்லும் சமூக உளவியல் காரணம் நம்மைச் சிந்திக்க வைப்பது மட்டுமல்ல; பொதுப்புத்தியில் நிகழ வேண்டிய மாற்றத்தை எடுத்துச் சொல்கிறது. ‘எதிரிகள் யார் என்ற தெளிவு முக்கியம்’ என்று பேசுகிறவர்கள், தங்களை எதிர்த்தவர்கள் யார் என்று நேரடியாகச் சொல்லாமல் அதைப் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார்கள். அதேபோல, ‘நாம் கனவு காணும் அரசியல் நடக்க வேண்டும் என்றால் முதலில் நிகழ்கால அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’என்று சொல்லும் இடத்தில் இவர்களது தற்போதைய அரசியல் பார்வை வெளிப்படுகிறது.

எதிர்கால அரசியல் களம் குறித்த கனவோடு பயணிக்கத் தயாராக இருந்த சூழ்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதையும் கட்சி, தேர்தல் என்கிற முயற்சிகளைக் கைவிட வேண்டிய நிலை உருவானதையும் ஆதங்கத்தோடு பதிவுசெய்திருக்கும் இடங்கள் வலியுடன் வெளிப்பட்டிருக்கின்றன.

மாற்று அரசியலுக்கு ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும் தமிழகச் சூழலை வெளிப்படையாகப் பதிவு செய்திருப்பதன் மூலம், இந்த ஆவணப்படம் இளைஞர்கள் மத்தியில் ஓர் அவநம்பிக்கையை விதைக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து புதிய அரசியல் உருவாக என்ன தேவைப்படுகிறது என்கிற இடத்துக்கு இவர்கள் வந்திருப்பதை இறுதி நிமிடங்கள் உணர்த்துகின்றன.

நிர்வாகவியலைப் பயில பிசினஸ் ஸ்கூல் இருப்பதுபோல, இளைஞர்களுக்கு அரசியலைப் பயிற்றுவிக்க ஒரு மையத்தை (Political School) உருவாக்குவதே எங்கள் கனவு என்று சொல்கிறார்கள் நேரடிக் கள அரசியலைத் துறந்திருக்கும் இந்த இளைஞர்கள். பன்னாட்டுச் சக்திகளின் ஆதிக்கத்துக்கு நடுவே ஒரு அரசியல் மையம் என்ன செய்துவிட முடியும்?

‘வெற்றிக்கதைகள்தான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை - முயற்சிக் கதைகளும் சொல்லப்படலாம்’ என்ற குரலுடன் தொடங்கும் இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் வளர்ந்து வருபவர்களுக்கு மட்டுமல்ல; வழிவிட மறுப்பவர்களும் காண வேண்டிய முக்கியப் பதிவு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

42 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்