எங்கேயும் எப்போதும் 11: தோலில் உள்ளது தீர்வு

By செய்திப்பிரிவு

ஹாலாஸ்யன்

மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் இடையேயான மோதல் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் போர்களுக்கு அடுத்து மிகப்பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகள், நோய்க்கிருமிகளால் உருவான கொள்ளை நோய்களால் ஏற்பட்டவையே!

நோய்க்கிருமிகளை எதிர்ப்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தடுப்புகளான கிருமிநாசினிகள், ஆண்டிபயாட்டிக்குகள் ஆகியவற்றை எதிர்க்கும் திறனை நோய்க்கிருமிகள் வளர்த்துக்கொண்டுவிடுகின்றன. இன்று பரவலாக புழக்கத்திலுள்ள ஆண்டிபயாட்டிக் மருந்துகள் அனைத்துக்கும் எதிர்ப்புத் திறன் கொண்ட நோய்க்கிருமிகள் இருக்கின்றன; அவை அந்த மருந்துகளால் பாதிக்கப்பட மாட்டா. அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்த எதிர்ப்புத் திறன் பெற்ற நோய்க்கிருமிகள் பெரும் சவாலாக இருக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

சுவாரசியத் தீர்வு

பள்ளி, மருத்துவமனை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஒருவர் பயன்படுத்திய அதே பொருளைப் பயன்படுத்தும்போது நோய்க்கிருமிகள் பரவ அதிக வாய்ப்புண்டு. முக்கியமாக படிக்கட்டுகளின் பக்கவாட்டுக் கைப்பிடிகள், கதவுகளின் கைப்பிடிகள் ஆகியவற்றின் மூலம் அதிக நோய்க்கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. எனவே, அவற்றைத் தொடர்ச்சியாகச் சுத்தபடுத்த வேண்டும்.

ஆனால், அதற்கானத் தீர்வு இன்னொரு சுவாரசியமான இடத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கான ஆண்டுகளாய் வெற்றிகரமான வேட்டை விலங்குகளாகச் சுறாக்கள் கடலில் கோலோச்சுகின்றன. தோல் முழுவதும் பரவியிருக்கும் கூர்மையான டெண்டிகிள்ஸ் (Denticles) என்ற சிறப்பான ஒரு அமைப்பைச் சுறாக்கள் கொண்டிருக்கின்றன.

பொதுவாக ஒரு நோய்க்கிருமி வளர வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிரிகள் அதன் பரப்பில் வளர வேண்டும். சுறாக்களின் தோல் பரப்பில் உள்ள டெண்டிகிள்ஸ், நோய்க்கிருமிகள் வளர்வதை மொத்தமாகத் தடுக்கின்றன. கிட்டத்தட்ட செங்குத்தான பாறையின் அமைப்பை இவை கொண்டுள்ளதால், நோய்க்கிருமிகள் சுறாக்களின் தோலின் மீது நிற்க, வளர முடிவதில்லை. இதுவே சுறாக்களை பெரும்பாலான நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

நாமும் இதைப் பயன்படுத்த முடியும். உடனடியாக சுறாத் தோல் உறை வாங்கித் தைக்கிற எண்ணத்துக்குப் போக வேண்டாம். சுறாக்களின் தோலில் இருக்கிற டெண்டிகிள்ஸ் அமைப்பை, நவீன தொழில்நுட்பம் கொண்டு நம்மால் சில பொருட்களின் பரப்பில் உருவாக்க முடியும். அப்படி வடிவமைத்த பொருட்களை வைத்துச் சோதித்தபோது அவற்றின் பரப்பில் ஈ. கோலி (E. coli), எஸ். ஆரியஸ் (S. aureus) ஆகிய நோய்க்கிருமிகள் காலனிகள் உருவாக்க முடியாமல் போனதைக் கண்டறிந்தார்கள்.

இவ்வகையான பொருட்களை மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பயன்படுத்தினால் அது நோய்க்கிருமிகள் பரவுவதை வெகுவாகக் குறைக்கும். இதில் இன்னொரு நன்மையும் உண்டு. அவற்றைக் கொல்லக் கூடிய மருந்துகளுக்கே எதிர்ப்புத் திறனை நோய்க்கிருமிகள் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. சுறாத்தோல் போல் பரப்பு அமைப்பு கொண்ட இந்த பொருட்கள் நோய்க்கிருமிகளைக் கொல்வதில்லை என்பதால் இதற்கான எதிர்ப்புத் திறனை அவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் குறைவு.

உயிரிப் போலச் செய்தல்

சுறாக்களின் தோலுக்கு இன்னொரு பண்பும் உண்டு. நீரில் நீந்துகையில் பரப்பு வடிவமைப்பு முகவும் முக்கியம். அவை நீருடன் தேவையற்ற மோதல்களையோ எதிர்விசைகளையோ உருவாக்கக் கூடாது. அப்படி உருவாக்குதல் அவற்றின் வேகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எதிர்வினைகள் உருவாவதை, டெண்டிகிள்ஸ் அமைப்பு பெருமளவு கட்டுப்படுத்துவதால், நீந்தும்போது ஆற்றல் வீணாவது தடுக்கப்படுகிறது. அதே பரப்பு அமைப்பு ஆடைகள் கொண்ட நீச்சல் வீரர் உடைகள் அணிபவர்களுக்கு கூடுதல் திறனைத் தரும்.

இது போன்று இயற்கையை நகலெடுத்து நாம் வடிவமைப்பதை ‘உயிரிப் போலச் செய்தல்’ (Biomimicry) என்று அழைக்கிறார்கள். சுறாக்கள் இதுபோல இன்னும் பல அதிசயங்களைத் தம்முள்ளே வைத்திருக்கலாம். ஆகவே, அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. சுறாத் துடுப்பு சூப் (Shark Fin Soup) ஆண்களுக்குப் புத்துணர்வைத் தரும் என்ற தவறான நம்பிக்கையின் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பது கவலைதரும் செய்தி.

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்