ஸ்ரீ வேதாந்த தேசிகர் திரைப்படம்; நனவான கனவு: இயக்குநர் ஏ.பி.என். சுவாமி பேட்டி

By கே.சுந்தரராமன்

வாசஸ்பதி டாக்டர் உ.வே. முகுந்தகிரி வங்கீபுரம் அனந்த பத்மநாபாசாரியார் என்கிற ஏ.பி.என். சுவாமி சிறந்த உபன்யாசகர். வைணவ மாத இதழான ஸ்ரீ நரசிம்மப்ரியாவின் (தமிழ் பதிப்பு) ஆசிரியர். வைணவ ஆச்சாரியரான ஸ்ரீ வேதாந்த தேசிகரின் வாழ்க்கை சரித்திரத்தை ‘கண்டாவதாரம்’ என்கிற பெயரில் தன்னுடைய யூடியூப் சேனலில் (APN SWAMI) ஜன. 26-ம் தேதி திரைப்படமாக இவர் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரமான ஸ்ரீ வேதாந்த தேசிகர் வேடத்தை ஏற்று நடித்திருப்பதுடன், திரைக்கதை, வசனம், இயக்குநர் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார் ஏ.பி.என். சுவாமி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்காக அளித்த பேட்டி…

ஸ்ரீ வேதாந்த தேசிகர் மீது உங்களுக்கு எப்படி ஈர்ப்பு வந்தது?

சிறு வயதில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வைணவ சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தேசிகரை நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

என்னுடைய 25-வது வயதில் ‘வேதாந்த தேசிகர் விஜயம்’ என்கிற 3 மணி நேர சம்ஸ்கிருத நாடகத்தை எழுதி, இயக்கினேன். அப்போதே இதை திரைப்படமாக / காவியமாக எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. என் நெடுநாளையக் கனவு இப்போது நனவாகியுள்ளது. திரைப்படம் வெளியிடப்பட்ட நான்கு நாள்களுக்குள்ளாகவே 1.25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

உபன்யாசகரான உங்களுக்கு படங்கள் / குறும்படங்கள் இயக்கும் ஆர்வம் எப்படி வந்தது?

இரண்டு மணி நேரம் அல்லது ஒரு மாதம் முழுவதும் செய்யும் உபன்யாசத்தை 25 நிமிடக் குறும்படத்தில் காட்சிப்படுத்திவிட முடியும். அது பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்கிறது. இப்போது வாசிப்பு பழக்கமும் குறைந்துவருகிறது. அதனால் என்னுடைய புத்தகங்களை ஆடியோ வடிவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இப்போதுள்ள தொழில்நுட்பம் மூலம் மக்களிடம் சென்று சேர வேண்டும்.

இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் பொருத்தமானவர் என்று எப்படித் தேர்வு செய்தீர்கள்?

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஓரிருவர் தவிர அனைவருக்கும் நடிப்பு, டயலாக் டெலிவரி, பாடி லாங்க்வேஜ், கேமரா, சூட்டிங் ஆகியவை புதிது. தேசிகர் மீதான பக்தி, என் மீது கொண்ட அன்பு காரணமாக அவர்கள் நடிக்க முன்வந்தனர்.

மூன்று கதாபாத்திரங்களுக்கு மட்டும் இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவுசெய்தோம். சுதர்சன சூரி, நடாதூர் அம்மாள், அப்புள்ளார் கதாபாத்திரங்களுக்கு கிருஷ்ணமாச்சாரியார், ராம், சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற கதாபாத்திரங்களுக்கு இப்படி முடிவுசெய்யவில்லை. நானும் தேசிகர் வேடம் ஏற்று நடிக்க வேண்டுமென முதலில் நினைக்கவில்லை. வேறு யாரும் கிடைக்கவில்லை என்பதால், நானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியதாயிற்று.

இசை, கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடை அமைப்பு ஆகியவை குறித்து...

முதலில் எளிமையில் கவனம் செலுத்தினோம். உடை அமைப்பிலும் செட் அமைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தினோம். ஆர்ட் டைரக்டர் யாரும் வேலை பார்க்கவில்லை. நாங்களே பார்த்துப்பார்த்துச் செய்தோம். வயலின் வித்வான் சதீஷும் கதையின் போக்குக்கு ஏற்ற வகையில் திறம்பட இசையமைத்திருக்கிறார்.

திரைப்படத்தில் உபன்யாசத்துக்கும் காலட்சேபத்துக்கும் இடையிலான வேறுபாடு குறித்த வசனங்கள் அருமையாக இருந்தன. இது போன்ற வசனங்களை, மக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் அமைத்தது எப்படி?

பலருக்கு உபன்யாசத்துக்கும் காலட்சேபத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஹரிகதா காலட்சேபம் என்கிறார்கள். காலட்சேபம் என்பது பல பாரம்பரிய விஷயங்களை உள்ளடக்கியது. இதைப் பொதுவாக அனைவர் முன்னிலையிலும் கூற முடியாது. தேசிகரின் ரஹஸ்ய த்ரயசாரம், ராமானுஜரின் பிரம்ம சூத்திர வியாக்கியானம், கீதை உரை வியாக்கியானம் எல்லாம் காலட்சேப கிரந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முறையாக, சம்பிரதாயப்படி இவற்றில் உள்ள தத்துவார்த்த விஷயங்களைக் கற்றறிந்து கொள்ள வேண்டும். உபன்யாசம் என்பது நிறைய கிளைக் கதைகள் கூறி, ஜனரஞ்சகமாக மக்கள் ரசிக்கும்படி கூறப்படுகிறது.

நடாதூர் அம்மாள் பற்றி..

தேசிகரை அனுக்கிரஹம் செய்த ஆச்சாரியர் என்கிற விதத்தில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஓர் ஆச்சாரியரே ஒரு மாணாக்கருக்கு அனைத்து விஷயங்களையும் முறையாகக் கற்றுத் தருகிறார். எனது ஆச்சாரியர் புரசை சுவாமி மூலமாகத்தான் மகான்களின் சரித்திரத்தை நான் அறிந்துகொண்டேன். தேசிகரின் வாழ்வில் நடாதூர் அம்மாள், சிறந்த ஆச்சாரியராக இருப்பதால், இந்தத் திரைப்படம் நடாதூர் அம்மாள் கதாபாத்திரத்துடனேயே தொடங்குகிறது.

வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து…

வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியருக்கே முதல் இடம். பெருமாளுக்கு அடுத்த இடம்தான். ஆச்சாரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஆச்சாரியனின் பங்கு அளப்பறியது. ஒருவர் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துபவர்கள் ஆச்சாரியர்தான். இதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கால இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

இளைஞர்கள், ஓர் ஆச்சாரியர் மூலமாக மகான்களின் சரித்திரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியத்தை அறிய வேண்டும். இல்லையென்றால் சனாதன தர்மம் குறித்து அவர்களுக்குத் தெரியாமலே போய்விடும். தேசிகரின் உபதேசங்களை மக்களிடத்தே கொண்டு செல்ல அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.

உங்கள் அடுத்த முயற்சி என்ன?

250 குறும்படங்களுக்கும் 15 நெடுந்தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் கையில் உள்ளது. குருபக்தி கதைகள் வரிசையில் - உபநிஷத் தொடர்பான கதைகள், மகான்களில் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், திவ்ய தேசங்கள், அபிமானத் தலங்களில் நிகழ்ந்த அற்புத சம்பவங்களை 30 நிமிடக் குறும்படங்களாகத் தயாரிக்க உத்தேசித்துள்ளேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்