இயேசுவின் உருவகக் கதைகள் 12: மன்னிக்க மறுத்தால்...

By எம்.ஏ. ஜோ

‘நமக்கு எதிராக தீங்கு இழைத்தோரை நாம் எப்போதும் மன்னிக்க வேண்டுமா?’ என்ற கேள்விக்கு ஒரு கதையின் மூலம் இயேசு பதில் சொன்னார். அதை ‘மன்னிக்க மறுத்த பணியாள்’ கதை என்கின்றனர்.

தலைவர் தம் பணியாளர்களிடம் கணக்கு கேட்கத் தொடங்க, அவரிடம் பத்து லட்சம் ரூபாய் கடன்பட்டிருந்த ஒருவனைக் கொண்டுவந்து நிறுத்தினர். இயேசு சொன்னது பத்தாயிரம் தாலந்து. நாம் பத்து லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் அவன் இருந்ததால், அவனையும் அவன் மனைவி, மக்கள், உடைமைகள் யாவற்றையும் விற்றுக் கடனை அடைக்கத் தலைவர் ஆணையிட்டார். அந்தப் பணியாள் பாதத்தில் விழுந்து பணிந்து, “என்னைப் பொறுத்தருள்க. எல்லாவற்றையும் உமக்கு திருப்பித் தந்துவிடுகிறேன்” என்று மன்றாடினான். அவர் மீது இரக்கப்பட்ட தலைவர், அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து அவனை விடுவித்தார்.

மன்னிக்கப்பட்ட பணியாள் வெளியே சென்றபோது, அவனிடம் பத்தாயிரம் ரூபாய் (நூறு தெனாரியம்) கடன் வாங்கி இருந்த சக பணியாளரைக் கண்டு, அவன் கழுத்தைப் பிடித்து நெரித்து கடனைத் திருப்பித் தருமாறு கத்தினான். இவன் காலில் விழுந்து அவன் மன்றாடியும், இவன் மனம் இரங்காமல் அவனைச் சிறையில் அடைக்கச் செய்தான். இதனைப் பார்த்த மற்ற பணியாளர்கள் போய் தலைவரிடம் நடந்ததைச் சொல்ல, அவர் அந்தப் பணி யாளரை அழைத்து, “பொல்லாதவனே, நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல், நீ உன் சக பணியாளனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?” என்று கேட்டு அவனைச் சிறையில் அடைக்கச் செய்தார்.

என்னை மன்னிப்பாயா?

“நான் மன்னித்து இருக்க வேண்டுமா?” என்ற கேள்வியுடன் பல்லாண்டு காலம் போராடியவர் எழுத்தாளர் சைமன் வீசென்தல். அவர் ஆஸ்திரியாவில் வாழ்ந்த யூதர். யூதர்களைக் கொன்று அழிப்பதை முக்கிய கொள்கையாகக்கொண்டு செயல்பட்ட ஹிட்லரின் நாஜிப் படைகளால் கைது செய்யப்பட்ட அவர், பல வதை முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். 1943-ம் ஆண்டு ஒரு வதை முகாமில் அவர் இருந்தபோது, அருகில் இருந்த ஒரு ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய தாதிப் பெண் ஒருத்தி அந்த முகாமுக்கு வந்து, சைமனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

மருத்துவமனையில் இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு நாஜிப் படைவீரன், ‘யாராவது யூதரிடம் தன் பாவத்தைத் தெரிவித்து மன்னிப்புப் பெற விரும்புகிறான்’ என்றாள். கார்ல் செயிடி என்ற நாஜிப் படைவீரன், தனது சாவு அண்மையில் இருப்பதை உணர்ந்து, சாவதற்கு முன் பாவமன்னிப்புப் பெற விரும்பினான். தான் செய்த குற்றங்களிலேயே மிகப்பெரிய குற்றமாகக் கருதிய ஒரு கொடிய செயலை விவரமாகச் சொன்னான். ஏறத்தாழ முன்னூறு யூதர்கள் தஞ்சம் புகுந்திருந்த ஒரு வீட்டைப் பூட்டி, அதற்கு நெருப்பிட்டு, பிறகு சொல்வதற்கே கூசக்கூடிய பயங்கரச் செயல்களையும் சொன்னான். கடைசியாக “என்னை மன்னிப்பாயா?” என்று கேட்டான்.

சைமன் அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டே நின்றார். பிறகு ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியேறினார். மறுநாள் அந்த வீரன் இறந்த செய்தியை தாதிப் பெண் அவரிடம் சொன்னாள்.

என்ன செய்திருக்கலாம்?

ஜெர்மனியையும் அதன் கூட்டாளி களையும் தோற்கடித்து இரண்டாம் உலகப் போரில் வென்ற நேசப் படையினரால் சைமன் மீட்கப்பட்டார். அதன்பின் பல நாள்கள் அவர் இந்தக் கேள்வியோடு போராடினார். ‘அந்த வீரன் தனது குற்றத்தைச் சொல்லி, சாகும் முன் மன்னிப்புக் கேட்ட பிறகும், நான் அமைதியாய் வெளியேறியது சரி தானா அல்லது அவனை நான் மன்னித்திருக்க வேண்டுமா?’ இது பற்றிய அவரது எண்ணங்களையும் இந்தக் கேள்விக்கு தலாய் லாமா உட்பட பல்வேறு ஆன்றோர்கள், அறிஞர்கள் சொன்ன பதில்களையும் சேர்த்து ஒரு நூல் ஆக்கினார் வீசென்தல்.

அந்நூலின் பெயர் ‘தி சன்ஃபிளவர்’. எல்லா சந்தர்ப்பங்களிலும் மன்னிக்க வேண்டுமா, மன்னிக்க இயலுமா என்ற கேள்வியை அறிஞர்கள் அந்த நூலில் எழுப்புகின்றனர்.

இயேசு என்ன செய்தார்?

இயேசுவுக்கோ இது பற்றி எந்த ஐயமும் இல்லை. முதலில் கூறப்பட்ட கதையைக் கூறி முடித்தபின் கூட்டத்தினரைப் பார்த்து, “உங்களில் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்றார் இயேசு.

இப்படிச் சொல்வது எளிது, ஆனால் செய்வது கடினம் என்போர் ஒன்றை நினைவுகூர வேண்டும். சிலுவையில் துன்புற்று இறந்துகொண்டிருந்த வேளையிலும், அவரைச் சிலுவையில் அறைந்த மனிதர்களுக்காக தன் இறைத்தந்தையிடம் இயேசு மன்றாடினார்: “தந்தையே, இவர்களை மன்னியும். இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.”

ஏன் மன்னிக்க வேண்டும்?

மன்னிக்க மறுக்கும் மனிதரை, கடவுள் தண்டிப்பது இருக்கட்டும். நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலில் இவர்கள் தங்களைத்தான் தண்டித்துக் கொள்கிறார்கள். பகைவர்களை நாம் மன்னிக்கும்போது, பெரும்பயன் பெறுவது பகைவர்கள் அல்ல. நாம்தான். எப்படி? மன்னிக்கும்போது கோபம், வருத்தம், பழிவாங்கும் வெறி போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த எதிர்மறை உணர்வுகளை எல்லாம் மனத்திலிருந்து வெளியேற்றி விடுகிறோம். மாறாக, நாம் மன்னிக்க மறுத்தால், இந்த நஞ்சுகள் யாவும் நம் மனத்துக்குள்ளேயே தங்கி, நம் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதித்து, நம்மை மெல்ல மெல்ல அழிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கின்றன.

அதனால் மன்னிப்போம்.

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்