உயிர் வளர்க்கும் திருமந்திரம் 101: நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல்

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

‘நமக்கு இழப்பு உண்டாக்குவன நான்கு’ என்று வள்ளுவர் ஒரு பட்டியல் தருகிறார்: ஒரு காரியத்தைச் செய்வதில் காலதாமதம், மறதி, சோம்பல், உறக்கம் ஆகியன. இவை இருந்தால் ஒருவன் கெடுவான் என்பது வள்ளுவம்.

நெடுநீர், மறவி, மடி,துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
(குறள் 605)

வள்ளுவரைப் போலவே வள்ளலாரும் கேடுசூழும் நான்கின் பட்டியல் தருகிறார். ஆனால் இது வேறு. திருவருட்பாவின் ‘நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல்’ என்ற உரைநடைப் பகுதியில் உடம்பைப் போற்றி வைத்துக்கொள்வதற்காக வள்ளலார் வழங்கும் விசேடக் குறிப்பு இது: நமக்கு இழப்பை உண்டாக்குவன நான்கு. அவை: ஆகாரம், மைதுனம் (கலவி/ஆண்-பெண் கூடல்), நித்திரை, பயம் ஆகியன. ஆதலால், இந்த நான்கிலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

இந்த நான்கிலும் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் மைதுனத்தைக் குறித்து அதிகக் கவனத்தோடு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உடம்பு விரைவில் வீணாய்ப் போகும். முழுமை அடைவதற்கு இந்த மனித உடம்பே தகுந்த கருவியாக இருப்பதால், உடம்பைப் பொன்னேபோலப் பாதுகாக்க வேண்டும்.

என்ன சொல்கிறார் வள்ளலார்? ‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்’ என்பதைத்தான் சொல்கிறார். சொன்னது விளங்காமல் போய்விடுமோ என்று விளக்கை எடுத்துக்காட்டாக்கி விளக்கியும் சொல்கிறார்:

உடம்புதான் விளக்கின் அகல்; ரத்தம்தான் எண்ணெய்; விந்துதான் திரி; உயிர்தான் ஒளி. விளக்கேற்றுவது ஒளிக்காகத்தான் என்பதை நினைவில் இருத்துக. இனி, திரியைத் தேவைக்குக் கூடுதலாகத் தூண்டிவிட்டால் என்னாகும்? திரி பரபரவென்று எரிந்து விளக்கு விரைவில் அவிந்துவிடும்; ஒளி இருளாகும்.

உடம்பாகிய விளக்கு

அறிவில்லாதவன்தான் திரியைத் தூண்டி விளக்கை அவிப்பான். அறிவுள்ளவனோ திரியை அளவாகத் தூண்டி விளக்கின் வாழ்நாளைக் கூட்டி ஒளியை நீடித்து இருக்கச் செய்வான். ஆகவே உடம்பு என்னும் அகலில் உள்ள விந்து என்னும் திரியை பெண் வழியிலோ, அல்லது வேறு வழியிலோ அடிக்கடி தூண்டி வீணாக்கினால் உடம்பாகிய விளக்கு விரைவில் அவிந்துபோய் உயிராகிய ஒளி அற்றுப்போகும்.

சுக்கிலம் (விந்து) விட்டால் சுவர் (உடம்பு) கெடும்; சுவர் கெட்டால் சித்திரம் (உயிர்) கிடையாது என்னும் இந்தக் கீழைக் கருத்தை மேலைப் பார்வை ஏற்பதில்லை. இறைக்கிற கேணிதான் நன்றாக ஊறும் என்று ஊற்றுக்கேணி நியாயம் சொல்லித் தள்ளிவிட்டுப் போவார்கள். இந்த ஊற்றுக்கேணி நியாயத்தைப் பற்றி வள்ளலார் சொல்வது இது: ஊற்றுக்கேணியைத் தொடர்ந்து இறைத்தால் வருவாய் குறைந்து நீர் வற்றிப் போகும்; இறைக்கவே இல்லை என்றால் நீரில் அழுக்கேறி ஊற்று அடைபட்டுப் போகும். ஆகவே உலகியலில் வாழ்வோர் ஊற்று வற்றிவிடாமலும் தூர்ந்துவிடாமலும் அளவாக இறைத்துண்டு வாழ்க என்று விதிக்கிறார் வள்ளல்.

முன்னோடி திருமூலர்

இவற்றிலெல்லாம் வள்ளலாருக்கு முன்னோடி திருமூலர். பக்திமான்கள் கண்மூடிக்கொண்டு கடக்க நினைக்கிற இடங்களையெல்லாம் கருத்தூன்றிப் பார்த்து, பேச வேண்டியவற்றைக் கூசாமல் பேசிய வித்தகச் சித்தர் அவர். வள்ளலார் வைக்கும் கருதுகோளைத் தமிழில் முதலில் வைத்தவர் திருமூலர்தாம் போலிருக்கிறது.

அழிகின்ற விந்து அளவை அறியார்;
கழிகின்ற தன்னைஉள்
காக்கலும் தேரார்;
அழிகின்ற காயத்து
அழிந்துஅயர்வு உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்துஒழி யாரே.
(திருமந்திரம் 1936)

கழிபெருங் காமத்தினால் அழிகின்ற விந்தின் அளவை உலகத்தார் அறிய மாட்டார்கள்; கீழ்நோக்கிக் கழியும் விந்தை அவ்வாறு கழியாமல் உள்ளேயே தேக்கிக் காக்கும் வகையையும் அறியமாட்டார்கள்; அழியும்தன்மை உடைய உடம்புக்குள் குடிகொண்டிருக்கும் உயிரார், தாம் குடியிருக்கும் வீடாகிய உடம்பைக் காக்கும் வழி தெரியாமல் தாங்களும் அழிந்து தொலைகிறார்களே! எனில் இயற்கைக் காமம் மறுக்கிறாரா திருமூலர்? விசாரிக்க வேண்டியிருக்கிறது.

(விசாரணை தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்