தெய்வத்தின் குரல்: கிருஷ்ணர் ஆதிசங்கரர்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணரில்லாமல் ஆச்சார்யாள் இல்லை. ‘பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்’ என்று லோகம் முழுக்கப் பரப்பியவர் அவர். அவருடைய பிறந்த ஊரில் குல தெய்வமாக இருந்த ஆலய மூர்த்தியே கிருஷ்ணன்தானென்று சொல்வதுண்டு. இன்றைக்கு ‘ஜகத்குரு’ என்று சொன்னால் நம்முடைய ஆசார்யாள்தான் என்று ஆகியிருக்கிறதென்றால் இவருக்கு முந்தி அந்த விருதைப் பெற்றிருந்தவர் கிருஷ்ண பரமாத்மாதான். ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ஸ்தோத்திரம் இருக்கிறது. அந்த ஜகத்குரு உபதேசித்த கீதைக்கு இந்த ஜகத்குரு பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தர்மம் ரொம்பவும் க்ஷீணித்து, அதர்மம் மேலோங்கி எழுந்த ஒரு சமயத்தில் நம்முடைய ஆசார்யாளின் அவதாரம் ஏற்பட்டு, இன்றைக்கும் நாம் அவருடைய சரித்திரத்தைக் கேட்டு கேட்டு மகிழ்கிறோமென்றால், இந்த மாதிரி சூழ்நிலையில் இப்படியொரு அவதாரம் ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும் என்று முன்னாடியே வாக்குக் கொடுத்தவர் கிருஷ்ண பரமாத்மாதான். எல்லாருக்கும் காதில் விழுந்திருக்கக் கூடும் அவர் கொடுத்த வாக்கு:

தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே |
இதற்கு முந்தின சுலோகமாக அவர் சொன்னது:
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் – பவதி பாரத |
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ||
அதாவது,“எப்பொழுதெப்பொழுது தர்மத்துக்கு ஹானியும், அதர்மத்துக்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் நான் என்னையே அவதாரமாகப் படைத்துக்கொண்டு வருவேன்” என்று சத்தியம் பண்ணிக் கொடுத்தார். அதைக் காப்பாற்றத்தான் சங்கராவதாரம் பிற்பாடு ஏற்பட்டது. இதனாலெல்லாம் அந்த அவதாரத்தைச் சொல்லிவிட்டு இந்த அவதாரத்தைச் சொல்வதுதான் பொருத்தம்.

அவதாரங்களின் காரணம்

கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தியும் மத்ஸ்யத்திலிருந்து ராமர்வரை ஏழு அவதாரங்கள் ஏற்பட்டிருந்தன. எட்டாவது அவதாரமான பலராமரும் க்ருஷ்ணரின் சம காலத்தவரேயானதால் ராமரோடு நிறுத்திக்கொண்டேன். அந்த அவதாரங்கள் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளை உபதேசிப்பதற்காக ஏற்பட்டவையல்ல. ஏதோ கொஞ்சம் அவ்வப்போது உபதேசித்தால்கூட அது அந்த அவதாரங்களின் முக்கிய நோக்கமில்லை.

ஏனென்றால் அந்தக் காலங்களில் உபதேசத்துக்காக பகவானே அவதரிக்கவேண்டும் என்னும்படியான சூழ்நிலை இருக்கவில்லை. சூரியன்-மனு-இக்ஷ்வாகு-அப்புறம் அவன் வம்சம் என்று கர்மயோகம் அது பாட்டுக்கு தொடர்ச்சியாக நல்ல முறையில் போய்க்கொண்டிருந்தது என்று பகவான் சொன்னது போலவே ஞானயோகம், பக்தியோகம் ஆகியனவும் ஞான பரம்பரை, பக்தி பரம்பரை வழியாக குரு-சிஷ்யாளென்று சீராக அந்தக் காலங்களிலெல்லாம் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தன.

ஜனங்களெல்லாம் பொதுவாக நல்ல வழிகளிலேயே போய்க்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் அவதாரங்கள் ஏன் ஏற்பட்டனவென்றால் அசுரர், ராட்சஷர் என்ற இனங்கள் ஆதிக்கத்துக்கு வந்து கொடுமைப்படுத்திய சமயங்களில் அவர்களை அழிப்பதற்காகத்தான். ஞானத்தின் பெருமை தெரிவதற்காகவே அவ்வப்போது பகவானும் தத்தர், ஹம்ஸர் முதலான அவதாரங்களின் மூலம் உபதேசங்கள் செய்தாலும் இதற்காக ஈஸ்வர சக்தியை விசேஷமாகக் கைக்கொள்ள வேண்டியிருக்கவில்லை.

ஏதோ ஒன்று ரொம்பவும் சிதிலமானால் தானே அவற்றைத் தூக்கி நிறுத்திப் பழையபடி பலமாக நிறுத்துவதற்கு நிரம்பவும் சக்தியைச் செலவழிக்கவேண்டும்? இதனால்தான் அசுர, ராட்சஷர்களின் சம்ஹாரத்துக்காக ஏற்பட்ட அவதாரங்களையே பகவானின் சாட்சாத் சக்தி வாய்ந்த தசாவதாரங்கள் என்று சிறப்பாகப் பாகுபடுத்திவிட்டு உபதேசகர்களாக கபிலர், தத்தர், வியாசர் முதலானவர்களை அம்சாவதாரங்கள் என்று வைத்தார்கள். இருபத்து
நாலு அவதாரம் என்று ஒரு கணக்கு. அதில் தசாவதாரங்களும்
அதோடு இந்த ஞானோபதேச அவதாரங்களும், இன்னம் தன்வந்தரி, மோஹினி போன்றவர்களும் அடங்குவார்கள்.

மனித சாதியில் பிறந்த அசுரர்கள்

ராமாவதாரத்திற்கு அப்புறம் கிருஷ்ணாவதாரத்துக்கு முன் என்ன ஆயிற்று என்றால் அசுர-ராட்சஷர்கள் தனியாக அப்படியிருப்பதைவிட மனுஷ ரூபத்திலுள்ள பல ராஜாக்களிலேயே அதிகம் ஆவேசித்தார்கள். கம்ஸன், ஜராஸந்தன், கௌரவர்கள் ஆகியவர்கள் மனுஷ ஜாதியிலேயே பிறந்தவர்கள், ஆனாலும் அசுர குணத்தோடு இருந்தார்கள்.
ராஜாக்களின் வேஷத்திலிருந்த அசுரர்களின் அதிக்ரமத்தால் பூமி கஷ்டப்பட்டது; பூமாதேவி பிரம்மாவிடம் போய் முறையிட்டாள்; அவர் அவளையும், தேவ சமூகத்தையும் அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டார்; மஹாவிஷ்ணு அதைக் கேட்டே கிருஷ்ணாவதாரம் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது.

அரச ரூப அசுரர்களை அழித்து பூபாரம் தீர்ப்பது, நல்ல வழிகளை உபதேசம் செய்வது என்ற இரண்டோடு, இன்னும் தெய்வமாகவும் மனுஷனாகவும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து காட்டித் தீர்ந்துவிடுவது என்றே அந்த அவதாரத்தில் பூர்ண சக்தியோடு வந்தார். நரலீலை முடித்துப் பரமபதத்திற்குத் திரும்புவதற்குத் முன் உத்தவ சுவாமி என்ற பரம பக்தருக்கு இன்னொரு உபதேசம் செய்தார். ‘உத்தவ கீதை’ என்று அதற்குப் பெயர். அர்ஜுனனுக்குப் பண்ணிய உபதேசத்துக்கு உபதேசம் செய்தவரை வைத்து ‘பகவத் கீதை’ என்று பேர் ஏற்பட்டது. அவதாரத்தில் கடைசிக் காரியமாக பண்ணிய உபதேசத்துக்கோ அதைக் கேட்டுக் கொண்டவரை வைத்து ‘உத்தவ கீதை‘ என்று பேர் ஏற்பட்டது.

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்