வியூகம் 06: கனவின் கதவைத் திறக்கும் தாள்!

By செல்வ புவியரசன்

கு

டிமைப் பணித் தேர்வுகளில் முதன்மைத் தேர்வு முக்கியமான ஒரு கட்டம். அடுத்தடுத்த இரண்டு நாட்களில் காலையும் மாலையும் எனத் தொடர்ந்து நான்கு பொது அறிவுத் தாள்களை எழுத வேண்டும். ஒவ்வொரு விடையாய் எழுதி மதிப்பெண்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொள்ள வேண்டும். முதன்மைத் தேர்வின் கடைசி நாளன்று நடக்கும் விருப்பப் பாடத் தேர்வு, மதிப்பெண் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும். ஆனால், அதைவிடவும் முதன்மைத் தேர்வுகளின் முதல் நாள் நடக்கும் கட்டுரைத் தாளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். குடிமைப் பணித் தேர்வுகளில் பெரும்பாலானவர்களின் வெற்றிக்குக் கட்டுரைத் தாள் மதிப்பெண்களும் ஒரு முக்கியக் காரணம்.

இரண்டு பகுதிகள் இரண்டு கட்டுரைகள்

முன்பு, முதன்மைத் தேர்வில் நான்கு அல்லது ஐந்து கட்டுரைகளுக்கான தலைப்புகள் வழங்கப்பட்டு அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுதும்வகையில் வினாத்தாள்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வினாத்தாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கட்டுரை என இரண்டு தலைப்புகளில் இப்போது கட்டுரை எழுத வேண்டும். பழைய வினாத்தாள் அமைப்பில் ஒரே கட்டுரை எனும்போது மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் போலவே சரியாக எழுத முடியாத சூழலில் மதிப்பெண்கள் பெருமளவு குறைந்துபோவதற்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில் கட்டுரைத் தாளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் மாணவர்களுக்கு முன்பிருந்த வினாத்தாள் அமைப்பைக் காட்டிலும் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு வினாத்தாள்

முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் எளிதில் பதிலளிக்கும் வகையிலேயே கட்டுரைத் தாளின் தலைப்புகள் அமைந்துள்ளன. உதாரணத்துக்கு, 2016-ம் ஆண்டில் முதல் பகுதியில் சுற்றுச்சூழலுடன் இசைந்த பொருளாதார வளர்ச்சி, தேவைகளின் மிதமிஞ்சிய வளர்ச்சி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீடு, பொருளாதார வளர்ச்சியிலும் சமூக வளர்ச்சித் திட்டங்களிலும் புதுமைகளின் தேவை தொடர்பாக நான்கு தலைப்புகள் கேட்கப்பட்டிருந்தன. இரண்டாம் பகுதியில் கூட்டுறவுக் கூட்டாட்சி, இணையவெளி, வேலைவாய்ப்புப் பெருகாத பொருளாதார வளர்ச்சி, இணையவழிப் பொருளாதாரம் தொடர்பான நான்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

பொது அறிவுத் தாளுக்குப் படிக்கும் அரசியலமைப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், நடப்புச் சம்பவங்கள் தொடர்பான கட்டுரைகளே கட்டுரைத் தாளிலும் பொதுவாக இடம்பெறுகின்றன. கட்டுரைத் தாளில் கொடுக்கப்படும் சில தலைப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளின் பொது அறிவுத் தாள்களின் வினாக்களின் அடிப்படையிலும் அமைந்திருக்கும். பழைய வினாத்தாள்களை ஒருமுறை திருப்பிப் பார்த்துக்கொள்வதும் நல்லது. எனவே, கட்டுரைகளின் தலைப்புகளைக் கண்டு தேர்வு எழுதுபவர்கள் அஞ்சத் தேவையில்லை. ஆனால், கட்டுரைகளை எழுதும் முறையில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

தெளிவான தகவல்கள் தேவையான மேற்கோள்கள்

முக்கியமாக, கட்டுரையில் தகவல்களை வரிசைக் கிரமமாக எழுத வேண்டும். கட்டுரையின் எந்தப் பகுதியில் ஒரு தகவல் இடம்பெற வேண்டும் என்பதைத் தேர்வை எழுதத் தொடங்கும் முன்பே முடிவு செய்துகொள்ள வேண்டும். எழுதும்போது மறந்த தகவல் மீண்டும் நினைவுக்கு வந்தால், அதைச் சேர்க்கும்போது கட்டுரையிலிருந்து துருத்திக்கொண்டிருக்கும்படி இருக்கக் கூடாது. உள்ளடக்கத்துக்குத் தேவையான தகவல்களை மட்டுமே எழுத வேண்டும். அது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியும் என்பதற்காக அனைத்துத் தகவல்களையும் அள்ளித் தெளிக்கக் கூடாது.

மேற்கோள்களைப் பொறுத்தவரை தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். சரியான மேற்கோள்கள் கட்டுரையின் தரத்தை உயர்த்தி மதிப்பெண்களையும் அள்ளித் தரும். தொடர்பில்லாத மேற்கோள்களைத் தவிர்ப்பது நலம்.

மொழிநடையில் எளிமையும் தெளிவும் இருக்க வேண்டும். இயன்றவரைக்கும் கையெழுத்து நேர்த்தியாக இருக்க வேண்டும். 1,000 வார்த்தைகளிலிருந்து 1,200 வார்த்தைகள் வரைக்கும் அனுமதிக்கப்படுகிறது. எனவே, எழுதத் தொடங்கும் முன்பே ஒவ்வொரு துணைத் தலைப்புக்கும் எவ்வளவு வார்த்தைகள் என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

கட்டுரைத் தாளைப் பொறுத்தவரை, அது வெறும் கேள்வி-பதில் மட்டுல் அல்ல. ஒரு விஷயம் பற்றித் தெரியுமா என்று சோதித்துப் பார்ப்பதல்ல இந்தத் தாளின் நோக்கம். ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்த நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதுதான். அரசின் உயர்பதவிகளுக்கான பொறுப்புணர்வு இருக்கிறதா என்று அறிய நடத்தப்படும் எழுத்துச் சோதனை இது. எனவே, அரசுக் கொள்கைகளை விமர்சிக்கும்போது நிதானம் அவசியம். ஒரு பக்கச் சார்புகளைத் தவிர்க்க வேண்டும். உரத்த குரலில் முழக்கமிடுவது, காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எழுதப்படும் கட்டுரை ஒரு எழுத்தாளரைப் போலப் படைப்பூக்கம் கொண்ட மொழியிலும் ஒரு ஆய்வாளரைப் போல நிதானமும் நேர்மையும் கொண்ட கண்ணோட்டத்திலும் அமைந்திருக்க வேண்டும். அதுவே கட்டுரைத் தாள் எழுதுபவரின் இலக்காக இருக்கட்டும்.

தேர்வு வந்தாச்சு

சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை

கட்டுரை தாள்: அக்டோபர் 28

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

55 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

21 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்