தொழில் தொடங்கலாம் வாங்க! 30: சிக்கனம் அவசியமா?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ற்பத்தி நிறுவனங்கள் நம் ஆதாரத் தொழில் கூடங்கள். பெரிய உற்பத்தி நிலையத்துக்கு ஆட்கள் பெரும் திரளாக வேலைக்குச் செல்வதும் ஒரு ராணுவ ஒழுங்கில் அனைத்தும் திட்டமிட்டபடி நடப்பதும் கண்ணுக்கு இதமான காட்சிகள். நான் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் பணி புரிந்ததாலும், பல உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராக இருப்பதாலும் அனுபவப்பூர்வமாக இதை என்னால் உணர முடியும். மூலப்பொருள் ஒவ்வொரு நிலையிலும் மதிப்புக் கூட்டப்பட்டுக் கடைசியில் வாடிக்கையாளருக்குச் செல்லத் தயாராவதைக் காண்பது ஒரு பெரிய வாய்ப்பு.

படிப்பது பார்ப்பது

இன்று பன்னாட்டுப் போட்டியால் பெரும்பாலும் எல்லா வளர்ந்த நிறுவனங்களும் மிகவும் திறமையான உற்பத்தி முறைகளைக் கையாள்வதைப் பார்க்க முடிகிறது. வாசல் முதல் ஒரு ஒழுங்கு தென்படும். மஞ்சள் கோடுகள், வேகத் தடைகள், தெளிவான அறிவிப்புப் பலகைகள், வரைபடங்களுடன் கூடிய தகவல்கள், நிறுவன லட்சியத்தைப் பறைசாற்றும் பலகைகள், உற்பத்தி மற்றும் தரம் பற்றிய இலக்குகள் எனப் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் நிறைய உண்டு. உணவகம்கூட உற்பத்திக் கூடம் போலச் சீராக இயங்கும். வரிசையில் பணியாளர்கள்.

தேவைக்கேற்ப உணவு எடுத்துக்கொள்ளும் வசதி. பல இடங்களில் தட்டைக் கழுவி வைத்துச் செல்ல வேண்டும். உணவு வீணாவதைத் தடுக்க, தினசரி வீணாகும் உணவின் அளவைக் குறிப்பிட்டுச் சொல்லும் விழிப்புணர்வுச் செய்திகள் போன்றவற்றைப் பல உற்பத்தி நிறுவனத்தின் உணவகங்களில் காண முடியும்.

ஏன் எல்லாவற்றிலும் சிக்கனம், சிக்கனம் எனக் கிடுக்கிப் பிடி போடுகிறார்கள் என்று தோன்றலாம். காரணம் உள்ளது. அது உற்பத்தி சித்தாந்தத்தில் கலந்துள்ளது. ஒரு பொருளை இந்த விலைக்கு உற்பத்தி செய்தால் இந்த விலைக்குத்தான் விற்க முடியும் என்ற கணக்கு உள்ளது. இந்த லாப விகிதம் பொதுவாக 5-15% இருக்கலாம். இது பொருளுக்குப் பொருள் மாறும். சந்தையில் பொருளின் விலையை உற்பத்தியாளர் பெரிதும் ஏற்ற முடியாது. லாப விகிதத்தை ஏற்ற உற்பத்திக் கூடங்கள் மேற்கொள்ளும் ஒரே வழி செலவைக் குறைப்பதுதான்.

அதனால் என்ன செய்து மூலப்பொருளைக் குறைந்த விலைக்கு வாங்கலாம், எப்படி அதைச் சரியான நேரத்தில் பெற்று அதை முடக்காமல் பயன்படுத்தலாம், உற்பத்தி வழிமுறைகள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி எடுப்பது எப்படி, குறைந்த ஆட்களைக் கொண்டு அதிக உற்பத்தி செய்வது எப்படி, உள்ளே செய்யாமல் வெளியே செய்தால் விலை குறையுமென்றால் எப்படியெல்லாம் அவுட்சோர்சிங் செய்யலாம் என ஒவ்வொரு வளத்தையும் கணக்குப் போட்டு உற்பத்தித் திறனைக் கூட்டலாம் என்ற எண்ணம் நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் விதைக்கப்படும். அதனால் தான் உற்பத்திக் கூடங்கள் கல்விக் கூடங்கள் போல ஒரு ஒழுங்குடன் காட்சியளிக்கின்றன.

ஏன் இவ்வளவு விலை?

சேவை நிறுவனங்கள் சித்தாந்தத்தில் வேறுபட்டவை. வாடிக்கையாளரிடம் பெறும் வருமானத்தை எப்படிக் கூட்டலாம் என்ற எண்ணம்தான் அங்குப் பிரதானம். லாப விகிதம் அதிகம். சந்தை மாறுதல்களும் அதிகம். பொருளை ஒப்பிட்டுப் பார்ப்பதைப் போல ஒரு சேவையை மற்றொன்றுடன் ஒப்பிட்டு விலை நிர்ணயிப்பது கடினம். ஒரு மென்பொருளுக்கு விலை நிர்ணயிப்பது என்பது ஒரு நடிகரின் வருமானத்தை நிர்ணயிப்பது போல.

மூலப்பொருள், நேரம், மனித உழைப்பு என்பதைவிட வாடிக்கையாளரின் தேவையும் வசதியும்தான் அதைப் பெரிதும் முடிவுசெய்யும். இளநீர் விற்பவரிடம் ஐந்து ரூபாய்க்குப் பேரம் பேசுபவர்கள் மருத்துவமனையில் குடும்பத்தினரைச் சேர்க்கச் செல்கையில் கட்டச் சொல்கிற கட்டணத்தை ரொக்கமாக வாய் பேசாமல் கட்டுவார்கள். “இது என்ன சேவை, இதற்கு ஏன் இவ்வளவு விலை, இதை அளிக்க நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள்?” என எல்லா இடங்களிலும் கேட்க முடியாது.

ஆனால், திடப்பொருளுக்கு ஒப்பீட்டுத் தன்மை எளிது. “இந்த தோசைக்கு இவ்வளவு ரூபாய் அதிகம். பக்கத்து ஹோட்டலில் இதைவிட டேஸ்டா நாலு சட்னியோட இதைவிடக் குறைந்த விலைதான்!” ஆனால், ஒரு சேவையை இப்படிப் பிரித்து ஒப்பிட்டு அலசுவது கொஞ்சம் கடினம். அதனால்தான் சேவை நிறுவனங்களின் லாப விகிதம் அதிகம்.

முற்றிலும் பிரிக்கவும் முடியாது!

அதனால்தான் சேவை நிறுவனங்களில் உற்பத்தி நிறுவனங்களைப் போலச் சிக்கனம், ஒழுங்கு போன்ற கட்டுப்பாடுகள் குறைவு. “எங்க வீட்டுக்காரர் காலையில வேலைக்குக் கிளம்பினா கரெக்டா மணி 6:15 என்று வாட்சைச் சரி செஞ்சுக்கலாம்” என்று உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிபவரின் மனைவி சொல்லலாம். ஆனால், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் பற்றி இப்படிச் சொல்லத்தான் கேட்டிருக்கிறோம்: “ பத்து மணிக்குப் போகணும். ஆனால் கண்டிப்பு இல்ல. எப்ப லாக் இன் பண்ணினாலும் எட்டு மணி நேரம் செய்யலாம்!”

இந்த வேறுபாடுதான் அனைத்துக் கலாச்சாரக் கூறுகளுக்கும் காரணம். யூனிஃபார்ம் உடைகள், நேரந்தவறாமை, சிக்கனம் போன்றவை உற்பத்தித் துறையில் உண்டு என்றால் தனி நபர் பணி சுதந்திரம், வாடிக்கையாளர் சேவை, படைப்பாற்றலுடன் மதிப்புக் கூட்டல் எனச் சேவை நிறுவனங்கள் வேறு கூறுகளை வலியுறுத்துகின்றன.

ஆனால், இரண்டையும் முற்றிலும் தனித்தனியாகப் பிரிக்கவும் முடியாது. உற்பத்தி நிறுவனத்திலும் சேவை உள்ளது. சேவை நிறுவனத்திலும் உற்பத்தி உள்ளது. ஆனால், உங்கள் கம்பெனி எதை அதிகம் சார்ந்தது என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் பணி கலாச்சாரம் அமையும்.

தொடர்புக்கு:

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்