என்னைச் செதுக்கிய மாணவர்கள் 26: மாலைநேர ஆசிரியர் புகழேந்தி

By ஆயிஷா இரா.நடராசன்

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் ஒரு பள்ளியில் இப்படி மயான அமைதி நிலவுவதை என்னால் ஏற்க முடியாது. இது மோசமான சிறைச்சாலை

- அமெரிக்கக் கல்வியாளர் ஹெர்பர்ட் கோஹ்ல்

சரியான விடை அல்லது தவறான விடை இரண்டை மட்டுமே மையமாகக் கொண்டு நம் கல்விமுறை இயங்குகிறது. இதனால் குழந்தைகளின் புத்திக்கூர்மையை அளந்தறிந்து அதனை மேம்படவைக்கும் அமைப்பாக அதனால் செயல்படமுடிவதில்லை. 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் புத்திக்கூர்மை உள்ளவர்கள் என்றுதான் ஆசிரியர்கள் முடிவுக்கு வருகிறார்கள். புத்திக்கூர்மையை மேம்படுத்துவதை மதிப்பெண்களை உயர்த்துவதாகவே நமது கல்வி அமைப்புமுறை புரிந்துகொள்கிறது. 35 (பாஸ் மார்க்) வாங்கியவர்கள் அறிவு படைத்த வெற்றியாளர்கள். 34 (ஃபெயில் மார்க்) வாங்கியவர்கள் முட்டாள்கள் என்கிறோம்.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகள் மட்டும் அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளை நோக்கி இருக்கின்றன. அவற்றைத் தவிர ஏனைய வகுப்புகள் நடப்பதாகக்கூடக் கவனத்தில் கொள்ளாத அதிகார அமைப்பாகப் பள்ளிக் கல்வித்துறை மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.

புத்திக்கூர்மைக்கான கல்வி

கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் (NCERT) தேசியக் கல்விநிலை தரப்பட்டியல் ஒன்றைச் சென்ற மாதம் வெளியிட்டது. தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் அடிப்படைத் திறன்களின் தரம் கடைக்கோடிக்குப் போய்விட்டதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ‘எட்டாம் வகுப்பு வரை எல்லாரும் பாஸ்’என்று குழந்தைகள் கல்வி உரிமை சட்டம் (RTE) சொல்வதால்தான் இப்படியாகிவிட்டது என்பது சில ஆசிரியர்களின் வாதம். அப்படி என்றால் அதே சட்டம் அமலில் இருக்கும் கேரளம் பல படிநிலைகளில் முன்னேறியது எப்படி என யாருமே கேட்பது இல்லை. பாஸ்-ஃபெயில் எனும் அமைப்பைக் கடந்து மாணவர்களின் புத்திக்கூர்மைக்கான உண்மையான கல்விக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குக் காட்டியவர் மாணவர் புகழேந்தி.

ஒப்பீடுகளும் விடை வழிகாட்டிகளும்

நமது குழந்தைகள் ஒருவகையான ஓட்டப் பந்தயத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறார்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டே நாம் அவர்களைச் சுயமற்றவர்களாக ஆக்கிவிடுகிறோம். ‘‘யார் முதலில் சாப்பிடுகிறார்கள் பார்க்கலாமா’’ என அது வீட்டிலேயே தொடங்கிவிடுகிறது’. ‘‘ வேகமாய் எழுது… இல்லையேல் அவன் உன்னை விட முதலில் முடித்து விடுவான்” என வகுப்பில் அது தொடர்கிறது. அதுதான் விடைத்தாள் மதிப்பெண்களாய் மாறுகிறது.

நியூசிலாந்தின் குழந்தை நல உளவியல் அறிஞர் மேரி-க்ளே ( Marie Clay) “மதிப்பெண்கள் என்பவை ஒப்பீடுகளே” என்கிறார். குழந்தைகளது புத்தி கூர்மைக்கும் அவர்களது தேர்வு மதிப்பெண்களுக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்தவர் அவர். ஒரு விடைத்தாளுக்கும் மற்றொரு விடைத்தாளுக்கும் இடையே தாள் திருத்தம் செய்யும் ஆசிரியரின் மனதில் தோன்றும் ஒப்பீடுகள்தான் மதிப்பெண் பட்டியலாக மாறுகின்றன என்பதை மேரி க்ளே நிரூபித்தார்.

அதன்பிறகுதான் ‘விடை வழிகாட்டிகள்’ ( Answer-Key) என்பதையே 1979 ல் முதல் முறையாக இங்கிலாந்தில் பொதுவான முறையில் வழங்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு என்ன பெரிய மாற்றம் நடந்துவிட்டது? புத்திக்கூர்மை என்றால் ‘‘இந்த ‘விடை- வழிகாட்டியில்’ இருப்பதை அப்படியே விடைத்தாளில் நகல் எடுப்பது’’ என்பதாய்த் தற்போது மாறிவிட்டது.

புத்திக்கூர்மையின் பகுதிகள்

கற்றதைத் தக்கவைத்துக்கொண்டே, அதை பகுத்தாய்தல், படைப்பாக்கம் செய்தல் என்ற முறையில் பயன்படுத்துதல்தான் புத்திக்கூர்மை என்று மேரி-க்ளே அறிவித்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் தரச் சான்று ( Grade and Rank) அவர்களது புத்திக்கூர்மையின் அளவு அல்ல. தனக்குக் கிடைத்தத் தகவலைச் சுயச் சிந்தனையாய் மாற்றுதல், சொல்வளம், ஒப்புமை, பொதுக் கணக்கீட்டில் சிறத்தல், படைப்பாற்றல் திறன், பிரச்சினைகளை அணுகும்- தீர்க்கும் ஆற்றல் பெறுதல் என்று குழந்தைகளின் புத்திக்கூர்மையை நாம் புரிந்துகொள்ளக்கூடிய அடிப்படை அலகுகளாகப் பிரித்துப் பிரித்து ஆய்வு செய்தார் மேரி-க்ளே. அவற்றில் கடைசியாக ‘சமூகப் பயன்பாடு’ என்பதையும் இணைத்தார்.

இந்த அடிப்படைகளில் ஒன்றிரண்டைக்கூடப் பள்ளிக்கல்வியால் தேர்வு-மதிப்பெண் முறையில் தக்கவைக்க முடியாது என அவர் நிரூபித்தார். ஒரே வயதுடைய மாணவர்களது கல்வித்திறன் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆனால் பொதுக்கல்வி இந்தக் கோட்பாட்டை ஏற்பது கிடையாது. இதனால் நடப்பது என்ன? மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர் அன்று ஒருநாள் கதாநாயக அந்தஸ்தோடு ஊடகங்களால் கொண்டாடப்படுவார். பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போகும் அவலம் நடக்கிறது.

பாஸ் - ஃபெயில் அமைப்பைக் கடந்து புத்திக் கூர்மையைச் சமூகப் பயன்பாடாய் மாணவர்களிடம் எடுத்துச்செல்ல என்ன செய்ய வேண்டும் என எனக்கு வழிகாட்டியவர் மாணவர் புகழேந்திதான்.

மாலை நேர ஆசிரியர் புகழேந்தி

எனக்கு 11-ம் வகுப்பு மாணவராக அறிமுகம் ஆனவர் புகழேந்தி. நமது கல்வி அமைப்பில் மேல்நிலை எனப்படும் 11, 12 வகுப்புகளின் கல்வியானது பள்ளியோடு மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. சிறப்பு வகுப்பு (Tuition) கலாச்சாரத்தில் அந்த வளரிளம் பருவத்தை நாம் முழுக்க சிதைத்துவிடுகிறோம்.

ஒரு பள்ளியில் நான் 11வது வகுப்பு ஆசிரியராக இருந்தேன். பள்ளியில் மதிப்பெண் பட்டியல் தந்த நாள். என் வகுப்பறை வாசலில் ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர். அவர்களோடு பெற்றோர்களும் நின்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “புகழைப் பார்க்கணும்’’என்றார் ஒரு மாணவர். வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்களில் ஒருவர்தான் புகழேந்தி. என்னிடம் அனுமதி பெற்று வெளியே சென்றார். அவர்கள் தங்களது குழந்தைகளின் மதிப்பெண் பட்டியல்களைப் பணிவோடு அவரிடம் காட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் முடிந்து அவர் திரும்பியபோது ‘‘யாரு தம்பி அவங்க .. தெரிஞ்சவங்களா?’’என்றேன். அவர் பதில் சொல்லும்முன்பே ‘‘இதெல்லாம் புகழோட மாணவர்கள் சார்…’’ என்று வகுப்பில் நிறைய குரல்கள் எழுந்தன. நான் வியந்துபோனேன்.

பிறகுதான் அவரைப் பற்றி விசாரித்தேன். சராசரி மதிப்பெண் பெறும் புகழேந்தி பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்று மறுமுறை எழுதித் தேறியவர். ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் ஏழைக் குழந்தைகளுக்காக மாலை நேரத்தில் இலவசமாக ‘திண்ணைப் பள்ளி’ நடத்துகிறார் என அறிந்தேன். மனம் நெகிழ்ந்தது. ‘‘என்கிட்ட 48 பேர் படிக்கிறாங்க சார்” என்றார் அடக்கமாக. அவரது வகுப்பு மாணவர்கள் எல்லாரும் சிறப்பு வகுப்பு எனும் பெயரில் மதிப்பெண்கள் மேல் பைத்தியமாக அலையும்போது, தனது கல்வியைத் கற்பித்தல் திறனாக, தலைமைப் பண்பாக மாற்றி ஊருக்கே அறிவொளி ஏற்றினார் அவர். ‘‘நீங்கதான் தம்பி உண்மையான ‘ஸ்டேட் பர்ஸ்ட்’ மாணவர்” என்று கைகுலுக்கினேன்.

கல்விக்கான உண்மையான பயன்பாடே அது சமூகத்துக்காக பயன்படுவதுதான் என்று எனக்குப் புரிய வைத்தவர் புகழேந்தி. இன்று அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். ஆனாலும் அரசு வேலைகள் தேடுவோருக்காக ‘போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி சேவை மையம்’ ஒன்றை ஓய்வு நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து நடத்திவருகிறார்.



தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்