நேற்று தொழிலாளி; இன்று தொழிலாளர் ஆணையர்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

மெஸ்ஸில் அம்மாவுக்கு உதவியாக தொழிலாளி போல் இருந்த ஒருவர், மத்திய அரசின் தொழிலாளர் உதவி ஆணையராக இன்tறைக்கு உயர்ந்திருப்பது வழக்கமான ஒரு வெற்றிக் கதையல்ல.

மணிகண்டனின் (32) ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு. அவரது தாய் ஓட்டல் சரஸ்வதி மெஸ் என்ற பெயரில் சிறிய உணவகத்தை நடத்தி வந்தார். தாய் நடத்திய ஓட்டலில் அவருக்கு ஒத்தாசையாக இருந்துவந்தார். மளிகைப் பொருட்களையும் காய் கறிகளையும் வாங்கி வருவது, ஓட்டலில் சப்ளை செய்வது எனப் பம்பரமாகச் சுழன்ற அவர் ஒரு தொழிலாளியாகவே தனது நாள்களை நகர்த்தினார். கணவனால் கைவிடப்பட்ட தாய்க்கு உதவிவந்த அவருக்கு ஒருநாள் தான் தொழிலாளர் கமிஷனர் ஆவோம் என்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் அவர் மேலே வந்தார். அவரை உயர்த்தியது அவரது கல்வியும் தளராத முயற்சியும்.

மணிகண்டன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் வெற்றிபெற்று மத்திய தொழிலாளர் உதவி கமிஷனர் பணிக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பணிக்கு இந்திய அளவில் மொத்தம் 57 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஐந்து பேரில் மணிகண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மணிகண்டன் செய்யாறு ஆர்.சி.எம். பள்ளியிலும், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். முடித்தார். சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தபோதே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானார். குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றார்; பணி கிடைத்தது. ஆனால் அப்பணியில் சேர அவர் விரும்பவில்லை, அதைவிடப் பெரிய பணி அவரது கனவாக இருந்தது.

கடந்த 2013-ல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வில் அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்தார். டி.என்.பி.எஸ்.சி. கைநழுவிய வேளையில் மத்திய உதவி தொழிலாளர் கமிஷனர் காலிப் பணியிடத்தை நிரப்ப யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவித்ததை அறிந்து விண்ணப்பித்தார்.

காலை முதல் மாலைவரை கன்னிமாரா நூலகமே கதி எனக் கிடந்தார். அயராத உழைப்பு அவரை அகில இந்திய அளவில் 10-ம் இடம் பிடிக்கச் செய்தது.

வெற்றிபெற்ற மணிகண்டனிடம் பேசியபோது, பள்ளியில் படிக்கும் பருவத்தில் தாய்க்கு உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை ஆர்வத்துடன் படித்துள்ளார் மணிகண்டன்.

“சிறு வயதில் இருந்தே தினமும் காலையில் தியானம், யோகா, பிராணாயாமம் செய்து வருகிறேன், எனது வெற்றியில் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு” என்று சொல்லும் மணிகண்டன், படிப்பிற்கு உறுதுணையாக இருந்த தன் அண்ணன் செந்தில்குமாரை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்கிறார் நன்றிப் பெருக்குடன்.

நேரடியாக மத்திய உதவி தொழிலாளர் கமிஷனர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மணிகண்டன், மண்டல தொழிலாளர் கமிஷனர், துணை தொழிலாளர் கமிஷனர் என அடுத்தடுத்து உயர் பதவிக்குச் செல்ல முடியும். பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளை மத்திய தொழிலாளர் அதிகாரிகள் கவனிக்கிறார்கள்.

“திட்டமிட்ட கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்” என்று சொல்லும் மணிகண்டன், “எந்தப் போட்டித் தேர்வு என்றாலும், படிக்க வேண்டிய பாடங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் காலஅட்டவணை போட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்” என்று அடித்துக் கூறுகிறார். “நேர்முகத்தேர்வில் நமது ஆளுமைத் திறனைப் பார்க்கிறார்களே தவிர நமது தோற்றத்தையோ கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்கிறோமா என்பதையோ அல்ல” என்று சொல்லும் மணிகண்டன் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்