கற்றதை மறந்துவிடுங்கள்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

“எப்பவும் சின்னஞ் சிறுசுகளுக்கே எழுதுகிறீர்கள்! வேலை அறிவுரைகள் எங்களுக்குக் கிடையாதா?” என்று வயதான இளைஞர்கள் பலர் செல்லமாகக் கோபித்துக் கொள்வதால் இந்த வாரம் அவர்களுக்கு.

முதல் வேலையைவிடப் பாதி வாழ்க்கையிலோ ஓய்விற்குப் பிறகோ வேலை தேடுவது சிரமம். புதிய வீடு கட்டுவதைவிடப் பழைய வீட்டைச் சீரமைப்பது போல இது. ஆனால் என்னிடம் வேலை ஆலோசனை கேட்பவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய பேர் உண்டு.

பலர் 20 அல்லது 25 வருடங்கள் ஒரே பணியைச் செய்துவிட்டு, புதிய வேலை தேடுபவர்கள். அதற்கு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம், தொழில் வழக்கொழிந்து போதல், நோய் வாய்ப்படுதல் போன்ற பல காரணங்கள் உண்டு. கல்யாணம், குழந்தைகள் என நாற்பதுகள்வரை குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, அதன் பின்னர் ஒரு வெறுமையை உணர்ந்து “ஏதாவது வேலைக்கு போகணும்” என்பார்கள் பெண்களில் பலர்.

இன்னும் ஒரு பிரிவினர், ஓய்வுக்குப் பின் திடமான ஆரோக்கியமும் சிந்தனையும் உள்ளதால் வீட்டில் உட்காரக் கூடாது; தகுந்த வேலை இருந்தால் பார்க்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள்.

இவர்கள் எல்லாருக்குள்ள தயக்கம்: “இனி புது வேலை கிடைக்குமா? நமக்கு ஒத்து வருமா?”

இன்னொரு குழப்பமும் உண்டு. “இனிமேல் வேலைக்குப் போவதற்குப் பதில் நாமாக ஏதாவது செய்தால் என்ன? பிறரிடம் வேலை பார்க்கணுமா இனிமேலும்?”

பலருக்குக் கையில் கொஞ்சம் பணம் இருக்கும். அதனால் ஏதாவது தனியாகத் தொழில் செய்யத் தோன்றும். சிலர் அதற்காக ஒரு வேலை பார்த்துக் கற்றுக்கொண்டு அந்தத் தொழிலையே தனியாகச் செய்யலாமா என்று எண்ணுவர். இப்படிப் பல சிந்தனைகளில் சிக்கி சிலர் எதுவும் செய்ய முடியாமல் முடங்கிப் போவதும் உண்டு.

என் முதல் ஆலோசனை: கற்றதை மறக்கத் தயாராகுங்கள். பழைய பணி, பழைய அதிகாரம், பழைய அறிவு, பழைய சம்பளம், பழைய சௌகர்யங்கள் இப்படிப் பல பழைய விஷயங்களை மறப்பது நல்லது.

உங்கள் தகுதிகள் பணித்திறன்கள் மட்டும்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அனுபவம் என்பது எல்லா நேரங்களிலும் உதவாது. நாம் தேடும் வேலைக்கு அது எந்த அளவு சம்பந்தப்பட்டது என்பதைப் பொறுத்துத் தான் அது.

அதனால் ஒரு புது ஆள் வேலை தேடுவதைப் போலத் தேட ஆரம்பியுங்கள். மன அளவில் ஒரு மாணவனைப் போல உணர்வது முக்கியம்.

பலருக்கு மிகச் சிறிய இடர்ப்பாடுகள் மிகப் பெரும் மனத்தடைகளாக மாறிவிடுகின்றன.

உதாரணத்திற்கு ஆங்கிலம் தெரியாதது, கம்ப்யூட்டர் தெரியாதது, மற்ற துறைகள் தெரியாதது என்பவை. வயது ஏறும்போது கற்பது சிரமமான விஷயமாகத் தோன்றும். உண்மையில் கற்றலுக்கு வயதில்லை. மனத்தடைகள்தான் நிஜத்தடைகள்.

தங்கள் சொகுசுப் பாதையை விட்டுச் சற்று வெளியே வரத் தயாராக இருக்க வேண்டும். இத்தனை நாட்கள் நன்றாகச் செய்த விஷயத்தைவிட ஒன்றும் தெரியாத விஷயங்களைக் கற்க முன் வர வேண்டும்.

வாய்ப்புகள் எங்கு உள்ளனவோ அங்கு உங்களைப் பொருத்திக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். சொந்தத் தொழில் செய்யக்கூட அந்தத் தொழிலில் சில காலம் பணிபுரிந்து அத்தொழிலைப் புரிந்து கொள்வதுதான் நல்லது.

அடுத்து, உங்களைவிட மிகவும் வயது குறைந்தோரிடம் கற்கவோ பணி புரியவோ தயக்கம் கூடாது. இந்தத் தயக்கத்தை முழுவதுமாக விட்டொழித்தாலே வாய்ப்புகள் தேடி வரும்.

இன்று பொறுப்பாக வேலை செய்யவும், உணர்வு முதிர்ச்சியுடன் பிரச்சினைகளைத் தீர்க்கவும், வேறு வேலைக்குத் தாவாமல் இருக்கவும் வயதானவர்களை வேலைக்கு எடுக்க நினைக்கிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி எதிர்பார்ப்பது, அதிக வேலைத் தாவல் செய்வது என இளைஞர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகள்தான் உங்கள் வாய்ப்புகள்.

தவிர, நடுத்தர வயதினருக்கு நல்ல தொடர்புகள் இருக்கும். அது புது வேலைக்குப் பயன்படலாம்.

முதல் காரியமாக, உங்களைப் பற்றி ஒரு நல்ல ரெஸ்யுமே தயாரித்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் தகுதிகள், சிறப்பு அனுபவங்கள், முக்கிய திறன்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுக் காட்டுங்கள். உங்களைப் பரிந்துரை செய்பவர்களும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பது போலப் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் நேர்காணல்கள் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் தேர்வுக்குச் செல்லும் மன நிலையில் இல்லாமல், ஒரு அனுபவப் பகிர்தலுக்குச் செல்லும் மன நிலையுடன் செல்லுங்கள்.

உங்கள் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் சொல்லப் பழகுங்கள். உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெளிவாக விளக்குங்கள்.

வயதான அனுபவசாலிகளிடம் நான் பார்க்கின்ற குறை அளவுக்கு அதிகமாகப் பேசுவது. தங்கள் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என அஞ்சி அளவுக்கு அதிகமாகத் தகவல்கள் தரும்போது அந்த உரையாடல் சுவாரசியம் கெட்டு விடுகிறது.

நீங்கள் சொல்ல வேண்டியதை அவர்கள் கேள்விகளால் கேட்கும் அளவிற்குச் சுவாரசியமாக

ஆனால் சுருக்கமாக சொல்லுங்கள்.

உங்கள் மதிப்பை உங்கள் பேச்சு கெடுத்துவிடக் கூடாது.

தொழிலோ வேலையோ புது இடத்தில் கற்பதற்கு நிறைய உள்ளன. அதனால் புது செல்போன் வாங்கினால் என்ன செய்வீர்கள்? உங்கள் மகனையோ பேத்தியையோதானே சொல்லிக் கொடுக்கச் சொல்வீர்கள்? அதையே முழு மனதாகப் பிறருடன் கேட்டுச் செய்யத் தயாராகுங்கள்.

வயதாவதைத் தடுக்க ஒரே வழி புதிய விஷயங்களைச் செய்வதுதான். உங்கள் வேலை மற்றும் தொழில் மாறுதல்களும் புதிய கற்றல்கள் எனக் கொண்டால் வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்கும்; நிலையான பொருளாதார பலன்களும் கிட்டும்.

மனித மூளை புது வேலைகளில்தான் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்கிறது. இளமை என்பதும் புதுமை என்பதும் ஒன்றுதானே?

டாக்டர்ஆர். கார்த்திகேயன் - தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்