ஆங்கிலம் அறிவோமே- 60: தலைக்கு மேல கத்தி!

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர் “Inspite of என்றாலும் despite of என்றாலும் அர்த்தம் ஒன்றுதானே”என்று கேட்டிருக் கிறார்.

அப்படிச் சொல்லிவிட முடியாது. முதலில், inspite என்பது தவறு. நடுவில் இடைவெளி வேண்டும் in spite.

தவிர, despite என்ற வார்த்தைக்குப் பிறகு of வரக் கூடாது. அதே சமயம் in spite என்ற வார்த்தைகளுக்குப் பிறகு of என்ற வார்த்தை கட்டாயம் இடம் பெறும்.

மற்றபடி, பொதுவாக இரண்டும் ஒரே அர்த்தத்தைக் கொடுப்பவைதான்.

He was forced to step down despite his fame.

In spite of his best efforts, he could not succeed.

ஆக in spite of மற்றும் despite ஆகியவை தோராயமாக ‘இருந்தபோதிலும்’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றன.

Spite என்றால் வேறு பொருள். யாரையாவது கோபப்படுத்த வேண்டும் அல்லது காயப்படுத்த வேண்டும் என்ற வெறி. He is criticizing me out of spite.

Malice, animosity போன்றவற்றை spite என்பதன் சம வார்த்தைகளாகச் சொல்லலாம்.

SWORD

‘Pen is mightier than sword” என்பது நமக்குத் தெரியும். பெண் கவிஞர் பொன்முடியார் ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே’ என்று தொடங்கும் தனது பாடலில் ‘‘ஒளிர்கின்ற வாளால் கடும் போரிலே யானையை வெட்டி மீள்வது என் மகனின் கடமை’’ என்கிறார். யானையை வெல்லும் வாள்! ஆனால், மேற்படி ஆங்கிலப் பொன்மொழியின்படி அந்த வாளைவிட வலிமை வாய்ந்தது பேனா.

Sword of Damocles என்றால் அதற்குப் பொருள் உங்கள் தலைக்கு மேல் கத்தி. அதாவது எந்த நொடியிலும் உங்களுக்கு ஆபத்து நேரலாம். ‘தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழமென்ன?’ என்று ஒரு பாடல் வரி உண்டு. (அது சுனாமியை நாம் அறியாத காலம்). அதற்காகத் தலைக்கு மேலே கத்தி இருந்தால் எப்படி? Damocles என்பவர் Dionysius என்பவரின் ராஜ வாழ்க்கையைப் பார்த்துப் பொறாமைப்பட, முக்கியமான பதவியை வகிப்பவர்களின் தலைக்கு மேல் ஒரே ஒரு குதிரை வால் ரோமத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள கத்தி இருக்கும் என்பதை உணர்ந்ததும் மனம் மாறினாராம்.

Double edged sword என்றால் என்ன தெரியுமா? ‘தீப்பந்தத்தின் உதவியால் திருக்குறளும் படிக்கலாம், குடிசையையும் கொளுத்தலாம்’ என்பதுபோல. அதாவது, ஒரு விஷயத்தில் (அல்லது விஷயத்தால்) நல்லதும் இருக்கிறது, கெடுதலும் இருக்கிறது என்பதுபோல.

You are crossing swords with someone என்றால் நீங்கள் ராஜா உடையில் போர்க்களத்தில் நிற்கிறீர்கள் என்பதில்லை. யாருடனோ கருத்து வேறுபாடு கொண்டு கடுமையாக விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

PARTICIPLES

முன்பு, இந்தப் பகுதியில் குறிப்பிட்டதன் தொடர்ச்சியாக, participles குறித்து மேலும் சில விவரங்கள் இதோ.

சில சமயம் nouns ஆகவே verbs பயன்படுத்தப்படும்போதும் அவை participle என்றே அழைக்கப்படுகின்றன. Sleeping relieves Kasim என்பதில் உள்ள sleeping என்ற வார்த்தை ஓர் எடுத்துக்காட்டு.

Auxiliary verb குறித்து இந்தப் பகுதியில் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். அவற்றை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். Auxiliary verb என்பது tense, voice போன்றவற்றைச் சுட்டிக் காட்டி வாக்கியத்தை இலக்கணப்படி அமைக்க உதவுபவை. He is coming என்பதில் coming என்பது main verb. Is என்பது auxiliary verb. Auxiliary verbக்குச் சில உதாரணங்கள்:- Has, have, am, are, is, can, may, does, do, will.

Auxiliary verb-ஐ இங்கே மீண்டும் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. இவற்றையும் past participle-ஐயும் இணைத்துப் பயன்படுத்துவது மிகவும் சகஜம். He has been standing for a long time. இதில் has என்பது auxiliary verb. Been என்பது past participle (be (is) was been). Standing என்பது present participle.

He should have been playing in the main playground.

இந்த வாக்கியத்தில் should, have ஆகியவை auxiliary verbs. Been என்பது past participle. Playing என்பது present participle.

WEATHER - CLIMATE

ஒரு வாசகர் “இன்னிக்கு weather சரியில்லே”, “இன்னிக்கு climate சரியில்லே” ஆகிய இரண்டும் ஒரே அர்த்தத்தைக் கொடுப்பவைதானே?” என்று கேட்டுள்ளார். அர்த்தங்கள் இருக்கட்டும், அவற்றில் ஒரு வாக்கியமே தவறானது. ஏனென்று பார்ப்போம்.

Climate என்பது அதிக காலத்துக்கானது. Weather என்பது குறைந்த காலத்துக்கானது.

“எங்கள் காலத்தில் இவ்வளவு வெயில் அடித்ததில்லை”, “பனிக்கட்டிகள் உருகுவதால் உலகின் வெப்பநிலையே மாறிவருகிறது” போன்ற வாக்கியங்களில் நீங்கள் climate என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

Weather என்பது நிமிடத்துக்கு நிமிடம்கூட மாறக் கூடியது. “காலையிலே நல்ல மழை. இப்ப என்னடானா weather அப்படியே மாறிடுச்சு”. வானிலை மையத்தில் விடும் அறிக்கைகளைக்கூட Weather Report என்று சொல்வது வழக்கம்.

இந்த இடத்தில் whether என்ற வார்த்தையோடு weatherஐக் குழப்பிக் கொள்ளாதீர்கள். Whether என்பது சந்தேகத்துக்கு இடமான ஒன்று. கிட்டத்தட்ட irrespective of என்பதற்குச் சமமமானது. I will go to the movie whether you come with me or not.

WHO WHOM

இலக்கணப்படி Who, Whom ஆகிய இரண்டுமே pronounகள். இரண்டுமே கேள்விச் சொற்களும்கூட. இந்த ஒற்றுமை காரணமாகவோ என்னவோ இவற்றை மாற்றிப் பயன்படுத்தும் இயல்பு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

Who are you? என்றால் நீங்கள் யார்?

Jayshankar is the one who wants to dance என்றால் ஆட விரும்புபவர் ஜெய்சங்கர்தான்.

ஒரு வாக்கியத்தின் subject ஆக who இருக்கும். Whom என்பது ஒரு கேள்வியின் object.

With whom are you going? என்றால் நீ யாருடன் போகிறாய் என்று அர்த்தம்.

அதாவது who என்றால் யார். Whom என்றால் யார் என்பதுடன் ஒரு வால் சேர்ந்தது. With whom என்றால் யாருடன். To whom என்றால் யாருக்கு. By whom என்றால் யாரால்.

பொதுவாக ஒரு prepositionக்குப் பிறகு (இந்த இரண்டில்) இடம் பெறுவது whom.

John is the person with whom I am travelling to Delhi.

The girls, one of whom is staying in the hostel, died today.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

52 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

18 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்