இயற்கை மீது காதல்

By ம.சுசித்ரா

ஒரு நாள் அறிவியல் அறிஞர்கள் கூடியிருந்த அமர்வு ஒன்றில் ஹார்வர்ட் கார்டனர் தன்னுடைய பன்முக அறிவு கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருந்தார்.

உரை முடிந்ததும் ஒரு முதியவர் கார்டனரைப் பார்த்து ’நீங்கள் முன்வைத்த கோட்பாட்டைக் கொண்டு சார்லஸ் டார்வினை உங்களால் என்றுமே விளக்கவே முடியாது’ என்றார். அவ்வாறு கார்டனரிடம் பேசியவர் 20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த பரிணாம வளர்ச்சி விஞ்ஞானியான ஏர்னஸ்ட் மேயர்.

1983-ல் “தி ஃபிரேம்ஸ் ஆஃப் மைண்ட்” புத்தகத்தில் ஏழு வகைப்பட்ட அறிவுத்திறன்களை மட்டுமே கார்டனர் உறுதிப்படுத்தினார். அதன் பின் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக அதாவது 1993-ல் இத்தகைய எதிர்வினை எழும்வரை அவர் பன்முக அறிவுத்திறன் கோட்பாட்டை மேலும் விரிக்க முடியும் எனச் சிந்தித்திருக்கவில்லை.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் கார்டனர் மீண்டும் ஆய்வில் இறங்கினார். உயிரியல் மேதைகளான சார்லஸ் டார்வின், இ.ஓ.வில்சன், பறவையியலாளர்களான ஜான் ஜேம்ஸ் ஆடுபன், ரோகர் டோரி பீட்டர்சன் உள்ளிட்டவர்களின் அறிவுத்திறனை ஆராயத் தொடங்கினார். இறுதியாக, 1999-ல் அறிவியல் ரீதியாக இயற்கை ரீதியான அறிவுத் திறனை கண்டறிந்தார் கார்டனர்.

நிரூபிக்க முடியுமா?

இயற்கை ரீதியான அறிவுத்திறன் உடையவர்கள் வெவ்வேறு வகைப்பட்ட செடி, கொடிகள், விலங்குகள், மலைகள், காடுகள் எனச் சூழலியல் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பிரித்து அறியும் புத்திக்கூர்மை கொண்டிருப்பார்கள். அது மட்டுமின்றிப் பறவைகள் எழுப்பும் சப்தம், சுறா மீன்களின் ஒலி இவற்றைக்கூட இவர்களால் துல்லியமாக அடையாளம் காண முடியும் என்கிறார் கார்டனர்.

முதலில் சொல்லப்பட்ட விஷயங்கள் காட்சி ரீதியான அறிவுத் திறனோடு சம்பந்தப்பட்டதல்லவா? ஒலி தொடர்பாகக் கூறப்பட்ட விஷயம் கேட்கும் திறனோடு சம்பந்தப்பட்டதல்லவா? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் மட்டுமல்ல அறிவியல் நிபுணர்கள் பலரும் இயற்கை ரீதியான அறிவுத்திறனை ஒரு தன்னிச்சை திறனாக ஏற்றுக்கொள்ள முடியாது என வாதாடினார்கள்.

ஆனால் இயற்கை சார்ந்த அறிவுத்திறன் ஒரு தனித்துவமான திறன் என்பதை நிரூபிக்க ஒரு அடிப்படை அம்சம் உள்ளது என்கிறார் கார்டனர். இத்திறன் கொண்டவர்களால் மிகச் சரியாக ஓர் உயிரினத்தை மற்றொரு உயிரினத்திடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும். உயிரினங்களுக்கு இடையே உள்ள நுட்பமான வித்தியாசங்களைக் கூடப் பிரித்தறிவார்கள்.

இதில் என்ன ஆச்சரியம்? உயிரியலின் கிளைகளான தாவரவியல், விலங்கியலை ஆழமாகப் படித்து, அலசி ஆராய்பவர்களால் இது போன்ற விஷயங்களைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்தானே! இங்குதான் அதிசயமான சில அறிவியல் உண்மைகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் கார்டனர்.

எது இயற்கை? எது செயற்கை?

பல மனிதர்களின் மனவோட்டம் மற்றும் மூளையை ஆய்வுக்கு உட்படுத்தினார் கார்டனர். அதிலும் மூளையில் பாதிப்பு ஏற்பட்ட மனிதர்களை ஆராய்ந்தபோது, சிலரால் வாகனம், தொலைபேசி, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற உயிரற்ற பொருள்களை அடையாளம் காண முடிந்திருக்கிறது. ஆனால் உயிருள்ள ஜீவன்களின் பெயர்களைச் சொல்ல முடியவில்லை.

மறு முனையில், இதற்கு நேர் மாறாகச் சிலர் உயிரினங்களைச் சரியாக அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள்களைச் சுட்டிக் காட்ட முடியவில்லை. இயற்கை ரீதியான அறிவுத்திறன் தன்னிச்சையாக இயங்கும் அறிவுத் திறன் என்பதை நிரூபிக்கும் முக்கியமான அறிகுறி இது என்கிறார் கார்டனர்.

கடவுளில்லை குரங்குதான்!

இருப்பினும் இயற்கை சார்ந்த அறிவு பிறப்பிலேயே இருக்குமா? குழந்தை பருவத்திலேயே அதை அடையாளம் காண முடியுமா? போன்ற கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுக்கான விடை பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வினின் வாழ்க்கை சரித்திரத்தில் உள்ளது. மனித குலத்தின் தொடக்கப் புள்ளியை அறிவியல் ரீதியாகக் கண்டறிந்து ஒட்டு மொத்த மனிதக் குலத்துக்கு மாபெரும் பங்களிப்பைச் செய்தவர் சார்லஸ் டார்வின் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுவரை மனிதன் படைக்கப்பட்டான் என்று நம்பிவந்த உலகை, இல்லை! இல்லை! கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன். மனித குலத்தின் மூதாதையர் குரங்குகள்தான் என்றார் டார்வின். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் இடம்பெற்ற இக்கூற்று ஒட்டுமொத்தமாக அறிவுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

வண்டை இழக்க மனம் இல்லையே!

இதில் முரண் என்னவென்றால் தன் மகனை கிறிஸ்தவ மதப் போதகராக்க நினைத்தவர் டார்வினின் தந்தை. ஆகையால், விளையாட்டுத்தனமாகத் திரியும் டார்வினை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரைஸ்ட் கல்லூரியில் இறையியல் படிக்க வைத்தார். ஆனால் அங்கு டார்வின் என்ன செய்தார் தெரியுமா? பின் வருபவை டார்வின் தன்னுடைய சுயசரிதையில் எழுதியவை.

“கேம்பிரிட்ஜில் எனக்கு மிகவும் பிடித்தவை வண்டுகள் சேகரிப்புதான். வண்டுகளைக் கண்டால் நான் பரவசம் ஆகிவிடுவேன். ஆனால் அவற்றைக் கொன்று, கூறுபோட்டு ஆராயமாட்டேன். அவற்றின் தோற்றத்தை பார்த்தே அடையாளம் காண முயல்வேன். ஏற்கனவே படித்த தகவல்களோடு ஒப்பிட்டு கூர்ந்து பார்ப்பேன். வண்டுகளின் மீதான என் அபரிமிதமான ஆர்வத்தை நிரூபிக்கும் சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு நாள், கல்லூரி தோட்டத்தில் ஒரு மரத்தின் உலர்ந்த மரப்பட்டையில் இரு அரிய வகை வண்டுகளைப் பார்த்தேன். உடனே எடுத்து இரண்டு உள்ளங்கைகளிலும் பத்திரமாக வைத்துக் கொண்டேன். ஆனால் ஆச்சரியம் பாருங்கள், இவை இரண்டைக் காட்டிலும் அரியதொரு வண்டை மீண்டும் கண்டேன். அதை இழக்க மனமில்லை. அதனால் என் வலது கையில் வைத்திருந்த வண்டை என் வாயில் பத்திரமாகப் போட்டுக் கொண்டேன்.

சட்டென அந்த மூன்றாவது வண்டை லாவகமாக கையில் எடுத்தேன். அய்யோ! காட்டமான விஷ நீரை உமிழ்ந்தது என் வாயில் இருந்த வண்டு. என் நாக்கு பற்றி எரிந்தது. வேறுவழியின்றி அதைத் துப்பிவிட்டேன். இதில் சோகம் என்னவென்றால் பதற்றத்தில் மூன்றாவதாகப் பிடித்த வண்டையும் கை தவறி விட்டுவிட்டேன்.”

இயற்கையின் மீது அளவு கடந்த ஈர்ப்பும், இயற்கை ரீதியான அறிவுத்திறனும் ஒருவரின் உயிர் நாடியாக இருக்க முடியும் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் சொல்லுங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

51 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்