தொழில் தொடங்கலாம் வாங்க! 25: இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ன்று தொழில் உலகில் மிகப் பெரிய மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர் என்பதால் மட்டுமே தலைமைப் பதவி, நிர்வாகம் செய்யும் அதிகாரம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை; தொழில் முறை நிர்வாகம் படித்து அனுபவம் பெற்றவரை நிர்வாகம் செய்யச் சொல்கிறார்கள். புரொஃபெஷனல் மேனேஜ்மெண்ட் அவசியம் என்று எல்லாத் தொழில் குடும்பங்களும் நம்ப ஆரம்பித்துள்ளன.

நியாயமான சிந்தனைதான்

“குடும்பத்தில் உள்ளவர் நிர்வாகம் செய்தால் என்ன குறை? வெளியாளுக்கு நம் அளவுக்கு ஈடுபாடும் விசுவாசமும் இருக்குமா? படித்தால் மட்டும் அனுபவம் வந்துவிடுமா? நம் தொழிலில் நமக்குத் தெரியாததையா வெளி ஆள் வந்து சொல்லித்தரப் போகிறார்? எல்லா முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் வெளியாளுக்குக் கொடுத்துவிட்டால் நம் மரியாதை என்னாவது? என்ன இருந்தாலும் வெளி ஆள் என்றைக்கு வேண்டுமானாலும் வெளியே போகலாம்; அதனால் இது சரியாக வருமா?” இப்படி நிறையப் பயங்களும் சந்தேகங்களும் உள்ளன தொழில் செய்யும் குடும்பங்களிடம். குறிப்பாக இரண்டு, மூன்று தலைமுறை கண்ட தொழில்களில் வெளியாட்களிடம் பொறுப்பு கொடுக்க நிறையவே யோசிப்பார்கள். தான் ஆரம்பித்த தொழிலை மகளோ மகனோ கையில் எடுப்பதுதான் சிறந்தது என்று நினைப்பதில் எந்தப் பிழையுமில்லை. அது மிகவும் நியாயமான, ஆரோக்கியமான, நடைமுறைக்கு ஏற்ற சிந்தனையும்கூட.

ஆனால், சந்தை வாய்ப்பு வளரும் அளவு நம் சொந்தத் தொழில் வளராமல் தேங்கிப் போவதுண்டு. அதற்கு முக்கியக் காரணம் குடும்ப நிர்வாகிகள் பெரும்பாலும் விசுவாசமான பழைய ஆட்களை மட்டுமே நம்ப ஆரம்பிப்பதுதான். இந்தச் சிக்கல் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அதிகாரம் போகையிலேயே ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

நடந்தது என்ன?

எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் தன் இருபத்தைந்து வயதில் தோற்றுவித்த நிறுவனத்தை லாபகரமாக நடத்திவந்தார். 50-களின் கடைசியில் உள்ளபோதே தன் மகனைத் தொழிலுக்குக் கொண்டுவர நினைத்தார். அமெரிக்காவில் படித்துத் திரும்பிய மகன் தந்தையின் தொழிலை மேலும் வளர்த்தெடுக்க ஏகப்பட்ட கனவுகளுடன்தான் வந்தார். தந்தையும் படிப்பு மட்டும் போதாதென்று சொந்தத் தொழிலிலேயே அனைத்துத் துறைகளிலும் பயிற்சி எடுத்த பின்தான் தலைமைச் செயலகத்தில் மகனுக்குப் பொறுப்புக் கொடுத்தார்.

ஆனால், மூன்று ஆண்டுகள்கூட மகனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தனக்கு மட்டுமே என்று ஒரு ‘ஸ்டார்ட் அப்’ ஆரம்பிக்க பெங்களூரு பக்கம் போய்விட்டார். நடந்தது என்ன?

பெரிய முதலாளியைச் சுற்றியுள்ள வட்டம் மிகப் பழையது. பலர் நிறுவனம் ஆரம்பித்த காலம்முதல் இருந்தவர்கள். கடைநிலைப் பணியாளர்முதல் துறைத் தலைவர்வரை அவர் தேர்ந்தெடுத்த ஆட்கள்தான் அனைவரும். எதையும் அவர் விருப்பம்போலச் செய்யத் தெரிந்தவர்கள். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் பார்க்காதவர்கள். தரமான உற்பத்தியாலும் வாடிக்கையாளர் சேவையாலும் ஸ்திரமான ஆர்டர்கள் உள்ளதால் தொடர்ந்து லாபம் சம்பாதிக்க முடிந்தாலும் பல புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றவே இல்லை. ‘நல்லாப் போகும் எதையும் கை வைக்கக் கூடாது!’ என்ற எண்ணத்தில் பெரும்பாலான புதிய முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள்.

இது வேலைக்கு ஆகாது!

மகன் சொன்ன பல யோசனைகள் சாதகமாகத் தோன்றினாலும், அனைத்துத் துறைத் தலைவர்களும் நம்பிக்கை கொள்ளாது இருக்கையில், அவராலும் எதையும் மீறிச் செய்ய முடியவில்லை. “இங்கே அதெல்லாம் சரிப்பட்டு வராது. எம்.டி. விரும்ப மாட்டார். நம்ம ஆட்களை வைத்துக்கொண்டு இதெல்லாம் பண்ண முடியாது. இன்னும் சற்றுக் காலம் போகட்டும். பொறுங்க சார்!” என்று ஒரே மாதிரி பல்லவி பாடினார்கள். ஒரு கட்டத்தில் ‘இது வேலைக்கு ஆகாது’ என்று உணர்ந்த மகன், வேறு திசையில் பறக்க ஆயத்தமானார்.

தீர ஆராய்ந்தால், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. விசுவாசமில்லாமல் இல்லை. ஆனால், புதிய செயல்பாட்டுக்கான ஆட்கள் அங்கு இல்லை. ஓய்வுபெற்றவர்கள் மட்டும்தான் உயர் பதவிகளில் வெளியேறுவதால், புதிய கருத்துகளுடன் வேறு நிறுவனங்களிலிருந்து வரும் புதியவர்கள் என்று யாருமே இல்லை. ஒற்றை ஆளாய் இருந்து திடீரென்று அத்தனை ஆட்களையும் மாற்றி புது ஆட்கள் கொண்டுவருவதும் ஆபத்தானது. தந்தை இடம் கொடுத்தும், திட்டங்கள் பல இருந்தும் மகன் தோல்வியுற்றதற்குக் காரணம், நிறுவனம் பழைய தலைமுறையின் அலைவரிசையில் இன்னமும் இயங்கிவருகிறது. இந்தத் தலைமுறைத் தலைமையுடன் இசைந்துவருவது கடினம்.

இதுவே இவ்வளவு கடினம் என்றால், முதலாளி வெறும் கார்ப்பரேட் போர்டின் தலைவராக மட்டும் பொறுப்பு வகித்துக்கொண்டு வெளி ஆளை அழைத்து நிர்வாகம் செய்யச் சொல்வது எவ்வளவு கடினம்? ஒரு பரிமாண வளர்ச்சி இல்லாமல், தொழில் வல்லுநர்களின் ஆலோசனைகள் இல்லாமல் இந்த மாற்றத்தைச் செய்வது மிகவும் கடினம்.

பதில் தேடுங்கள்

குடும்ப நிர்வாகத்திலிருந்து தொழில்முறை நிர்வாகத்துக்கு மாற நீங்கள் செய்ய வேண்டியவை பல உள்ளன. முதல் கட்டமாகக் கீழ் நிலைகளுக்கு வெளியிலிருந்து ஆட்களை எடுங்கள். இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். விசுவாசத்தைக் கொண்டு மட்டும் நோக்காமல், தொழில் முடிவுகளை வைத்து உங்கள் ஆட்களைப் பரிசீலியுங்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. “கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன புதுமைகள் செய்துள்ளோம் நம் தொழிலில்?” இந்தக் கேள்விக்குப் பதில் தேடுங்கள். வளர்ச்சி வரும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்