பாதைகளும் பயணங்களும்: சொற்களின் வலிமை?

By செய்திப்பிரிவு

தனக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது சுலபமல்ல. தொழில் வாழ்க்கை என்று வரும்போது பல கேள்விகள் மனதில் எழும். ஒரு குறிப்பிட்ட துறையில் நல்ல வேலை கிடைத்து வசதியான வாழ்க்கையை வாழ்ந்துவருபவர்கள் பலர் கண்ணெதிரில் தென்படுவார்கள். குறிப்பிட்ட ஒரு துறையில் வேலை நிச்சயம் என்று சொல்வார்கள். சில படிப்புகளுக்கு மட்டும் பெரிய கிராக்கி இருக்கும். அந்தப் பாடங்களை எடுப்பவர்களுக்கு மரியாதை இருக்கும். பிற பாடங்களை எடுப்பவர்கள் ‘ஐயோ பாவம்’ என்ற ரீதியில் பார்க்கப்படுவார்கள்.

கண்மணியின் நிலை அப்படித்தான். அவள் ப்ளஸ் டூ அறிவியல் பிரிவில் படித்தாள். ப்ளஸ் டூவுக்குப் பிறகு அவள் மருத்துவம் அல்லது பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கணிதம், அறிவியல் இரண்டிலும் அவள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. அவளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

கண்மணிக்குப் படிப்பின் மீதே கோபம் வருகிறது. தான் எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று தன் மீதே வெறுப்பு ஏற்படுகிறது.

ஆனால் கண்மணி மக்கு அல்ல. பத்தாம் வகுப்பில் வரலாறு, புவியியல் மற்றும் மொழிப் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். ஆனால் ப்ளஸ் டூவில் வரலாறு, புவியியல் பாடங்களை எடுத்துப் படித்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று எல்லோரும் சொன்னதால் அறிவியலைத் தேர்ந்தெடுத்தாள். இப்போது மதிப்பெண் போதுமானதாக இல்லை. மருத்துவம் இல்லாவிட்டாலும் அறிவியல் சார்ந்து பட்டப் படிப்பு படிக்கலாம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அதில் அவளுக்கு விருப்பம் இல்லை. கல்லூரியிலும் அறிவியல் பாடத்தில் தன்னால் நல்ல மதிப்பெண் வாங்க முடியாது என்று அவள் நினைக்கிறாள்.

கண்மணி என்ன செய்ய வேண்டும்? அவள் லாயக்கில்லாதவளா? அவளுக்கான பாதை எதுவும் இல்லையா?

பயனற்றவர் என இந்த உலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. கண்மணிக்கு அறிவியல் வராது. ஆனால் ஆங்கிலம் நன்றாக வருகிறது. தமிழும் நன்றாக வருகிறது. நிறைய நூல்களை வேகமாகப் படித்து முடிக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. கதைப் புத்தகங்கள், அறிவு சார் நூல்கள் என அவள் எக்கச்சக்கமாகப் படிப்பாள். தினசரிச் செய்தித்தாளை ஆழமாகப் படிக்கும் பழக்கமும் அவளிடம் உண்டு.

அது மட்டுமல்ல. அவளுக்கு அழகாகப் பேச வரும். பேச்சுப் போட்டிகளில் பரிசுகளைக் குவித்திருக்கிறாள். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் நன்றாகப் பேசுவாள்.

கண்மணி லாயக்கில்லாதவளா?

கண்மணியின் திறமை என்ன? மொழி. அதில்தான் அவளுக்கு இயல்பான தேர்ச்சி இருக்கிறது.

மொழித் திறமையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

மொழித் திறமை என்பது என்ன? மொழியைச் சரளமாகக் கையாளும் திறமை. சொற்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தும் திறமை.

மொழித் திறமை பேச்சில் வெளிப்படலாம். பேச்சுத் திறமை என்பது மேடையோடு மட்டும் தொடர்புடையதல்ல. விற்பனை, மக்கள் தொடர்பு, தொழில் ஆலோசனை முதலானவற்றுக்கும் மொழித் திறமை தேவை. அலுவலகக் கலந்தாலோசனைக் கூட்டங்களிலும் தேவை.

உரையாடுவதற்கான தேவை அதிகம் உள்ள எல்லாத் தொழில்களுக்கும் பேச்சுத் திறமை அவசியம். உளவியல், சட்டம், சமூகப் பணி, ஊழியர் நிர்வாகம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

மொழித் திறமை எழுத்தில் வெளிப்படலாம். சக்தி வாய்ந்த எழுத்துக்கள் வரலாற்றையே மாற்றியிருக்கின்றன.

எழுத்துத் திறமை உள்ளவர்கள் விளம்பரத் துறை, இதழியல், நூல் வெளியீடு, கவிதை, கதை, கட்டுரை என்று பல துறைகளில் பிரகாசிக்கலாம்.

‘கறை நல்லது’ என்ற ஒரு வாசகம் ஒரு தயாரிப்பை எவ்வளவு பிரபலமாக்கி யிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

‘ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்’ என்ற வாசகமும் அப்படியே.

ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் ஆகிய வாசகங்கள் எத்தகைய எழுச்சியை ஏற்படுத்துகின்றன என்று யோசித்துப் பாருங்கள்.

பத்திரிகைகளில் வார்த்தைகளின் வலிமையை நாம் உணர்கிறோம். திரைப்படங்களில் ஒலிக்கும் பாடல்களிலும் வசனங்களிலும் உணர்கிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளிலும் சொற்களின் வலிமையைப் புரிந்துகொள்ள முடியும்.

சொற்களின் வலிமை மகத்தானது. மொழித் திறமை கொண்டவர்களால்தான் சொற்களை வலுவான முறையில் பயன்படுத்த முடியும்.

இப்போது சொல்லுங்கள். கண்மணி லாயக்கில்லாதவளா? மருத்துவம், பொறியியல், கணிப்பொறி அறிவியல் போன்றவற்றைப் பற்றியெல்லாம் அவள் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டுமா?

கண்மணி கல்லூரியில் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படிக்கலாம். அதிலேயே பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு படிக்கலாம். ஆசிரியர் , விரிவுரையாளர், பேராசிரியர் என்று மேலே செல்லலாம். பத்திரிகைகள் அல்லது தொலைக்காட்சிகளிலும் வேலை செய்யலாம்.

ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் (Mass Communication) பட்டம் படிக்கலாம். விளம்பரத் துறை, மக்கள் தொடர்பு, ஊடகப் பணிகள், திரைப்படம் என்று பல வழிகளில் கம்பீரமாக நடை போடலாம்.

கண்மணி நாளை ஒரு பெரிய எழுத்தாளராகலாம். அல்லது பத்திரிகையில் பணிபுரியலாம். பெரிய விளம்பர நிறுவனத்தில் பிரகாசிக்கலாம். சினிமா, தொலைக்காட்சி ஆகியவற்றில் தன் மொழித் திறன் மூலம் பெரும் புகழ் அடையலாம்.

அறிவியலிலும் கணிதத்திலும் மதிப்பெண் இல்லை என்ற கவலை கண்மணிக்கு வேண்டாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்