ராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவச எம்.பி.பி.எஸ்.!

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்தான், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று சொல்லும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் சேரக் கடுமையான போட்டி நிலவுகிறது. 0.5இல் எம்பி.பி.எஸ். வாய்ப்பைத் தவறவிடும் மாணவ-மாணவிகள் அநேகம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சங்களைக் கொட்டிச் சேருவது என்பது எல்லா மாணவர்களாலும் இயலாத காரியம்.

இலவசப் படிப்பு

இப்படிப்பட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பை இலவசமாக வழங்கி, கையோடு ராணுவத்தில் டாக்டர் வேலையையும் வழங்குகிறது. மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 130 இடங்கள் உள்ளன. 105 இடங்கள் மாணவர்களுக்கும், 25 இடங்கள் மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு, ராணுவ மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வைச் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. 2014ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

அடிப்படைத் தகுதி

ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேரப் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் தேவை. வயது 17 முதல் 22க்குள் இருக்க வேண்டும். ராணுவ மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானதும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆன்லைன் தேர்வில் ஆங்கிலம், லாஜிக்-ரீசனிங் பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்வி கேட்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக 130 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களின் படிப்புக்கான அனைத்துச் செலவையும் பாதுகாப்பு அமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது. டியூஷன் கட்டணம், விடுதி, உணவு வசதி, புத்தகம், சீருடை அனைத்தும் இலவசம். படிப்பு செலவுகளுக்காகத் தனியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.

4 அரை ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மராட்டிய மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கும். ராணுவ மருத்துவமனைகளில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் முடித்ததும் ராணுவ மருத்துவப் பிரிவில் அதிகாரி அந்தஸ்துடன் மருத்துவர் பணியில் நியமிக்கப்படுவார்கள்.

ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வு, அனைத்து வசதிகளும் உண்டு. ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து பணியாற்ற விரும்பினால் பணியைத் தொடரலாம்.

2014ஆம் ஆண்டுக்கான ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். இதுதொடர்பான முழு விவரங்களை அக்கல்லூரியின் இணையதளத்தில் (www.afmc.nic.in) மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 min ago

ஜோதிடம்

43 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்