பாட்டு வருது, படிப்பு வரலயா?

By ம.சுசித்ரா

உங்கள் வீட்டுக் குளியல் அறைக்குள் நீங்கள் நுழைந்ததும், குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுமோ இல்லையோ, உங்கள் வாயிலிருந்து பாட்டு அருவி மாதிரிக் கொட்டுமா? இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ் தொடங்கி அனிருத், இமான், சந்தோஷ் நாராயண் ஹிட்ஸ் வரை எக்கசக்கப் பாடல்கள் உங்களுக்கு அத்துப்படியா? பேருந்தோ, கல்லூரி மதில் சுவரோ ஏறிய அடுத்த நொடியிலிருந்து ‘ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாளே குயிலு குப்பம் குருவியப் போல’னு சொந்தமா பாட்டுக்கட்டும் கானா குயிலா மாறிடுவீங்களா? அப்ப நீங்கள் அறிவாளிதான்.

இசைத் திறனும் ஒரு வித அறிவுத் திறன் என்கிறார் கார்ட்னர். “அடப் போங்க நீங்க வேற, நான் சினிமா பாட்டுப் பாடினாலே? இதை எல்லாம் மறக்காமல் பாடு, ஆனால் படிப்பில மட்டும் கோட்டை விட்டிரு என்று என்னை எனது பெற்றோரும் ஆசிரியரும் திட்டுறாங்க” அப்படீனு நீங்கள் நினைப்பது புரிகிறது.

தொழில்நுட்ப அறிவு, கணிதத் திறன், ஆங்கிலப் புலமை ஆகியவை எப்படி அறிவுத் திறன்களாகப் பார்க்கப்படுகிறதோ அதே போலப் பாடும் திறன், இசைக் கருவி இசைத்தல், நடனம் ஆடுதல், ஓவியம் வரைதல் போன்றவையும் அதே தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கத்தக்கவைதான். எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் என்ற பெயரில் அவற்றைப் படிப்புக்கு ஒரு படி கீழே இறக்கிப் பார்ப்பது மிகத் தவறான அணுகுமுறை.

இசை மீது சவாரி

அப்படியானால் வழக்கமான கல்வித் திட்டத்தில் உள்ள பாடங்களைப் படிக்கத் தேவை இல்லையா? நீங்கள் ஒன்றை யோசித்துப் பாருங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களின் வரிகள் உங்கள் நினைவில் நிற்கும் பொழுது ஏன் பாடப் புத்தகத்தின் வரிகள் நிற்க மறுக்கின்றன?

உளவியல் நிபுணரான கார்ட்னர் அறிவு ஜீவிகள், மேதைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆடிஸம் குறைபாடு உடையவர்கள், முட்டாள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் இப்படி நூற்றுக்கணக்கான மனிதர்களின் மூளைகளை ஆராய்ந்து முடிவில் பன்முக அறிவுத் திறன் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். தன் ஆய்வின் முடிவில் கார்ட்னர் முன்வைத்த ஒரு கருத்து, ஒருவருடைய திறன் எதுவோ அதன் மேலே சவாரி செய்யும் போது அவரால் மற்ற திறன்களையும் சுலபமாக வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுதான்.

குறும்பாடம்

இசை உங்கள் பலமாக இருக்கையில் இசை மூலமாக நீங்கள் வழக்கமான பாடங்களைக் கற்கும்போது நீங்கள் கல்வியிலும் ஜொலிக்க முடியும். இதை கார்ட்னர் மட்டும் நமக்குச் சொல்ல வில்லை பாலிவுட் இளம் நடிகை ஆலியா பட் வைத்துக் குறும்படம் இயக்கிய ஷாகுன் பத்ராவும் சொல்லுகிறார்.

சென்ற மாதம் யூடியூபில் சக்கைப்போடு போட்ட குறும் படம் ‘ஆலியா பட் ஜீனியஸ் ஆஃப் தி இயர்’. கிட்டத்தட்ட 6 ½ கோடி இணைய வாசிகள் ரசித்துப் பார்த்த 10 நிமிடக் குறும்படம். காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ‘இந்திய குடியரசுத்தலைவர் யார்’ என்று கரன் ஜோஹர் கேட்டதற்குத் மகாராஷ்ட்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவுகான் பெயரைச் சொல்லிக் கேலிப்பொருள் ஆகிறார் நடிகை ஆலியா பட். அதன் பின் பொது அறிவைப் பயிற்றுவிக்கும் மையம் ஒன்றில் சேர்ந்து கடும் பயிற்சிகளை மேற்கொள்கிறார். கடைசியில் அவர் அறிவாளியாக மாறினாரா இல்லையா என்பதுதான் படம்.

சதுரங்கமா? கேரம் போர்டா?

கேலி, கிண்டல் கலந்த மிக சுவாரஸ்யமான குறும்படம். இதில் என்னைக் கவர்ந்த காட்சி, ஆலியாவுக்கு அறிவுத்திறன் பயிற்சியாளர் சதுரங்க விளையாட்டைக் கற்றுத்தர முயல்கிறார். ஆனால் ஆலியாவோ கேரம் போர்டில் விளையாடுவதுபோலச் சதுரங்கக் காய்களை விரல் மடக்கி அடிக்கிறார். அவரின் முட்டாள்தனத்தால் எரிச்சல்படும் பயிற்சியாளர், கோபத்தில் சதுரங்கப் பலகையைத் தள்ளிவிட அருகிலிருக்கும் ஆலியாவின் கைப்பை தரையில் விழுகிறது. உடனே மின்னல் வேகத்தில் அந்தக் கைப்பையின் விலை மற்றும் வரி விவரங்களைப் படபடவெனச் சர வெடியாகச் சொல்கிறார் ஆலியா. திகைத்துப் போய் நிற்கிறார் பயிற்சியாளர்.

ஃபாரடே பாட்டு

அந்தக் கணத்தில் அவருக்கு ஒரு விஷயம் புரிகிறது. பத்து நாட்களாக எவ்வளவு முயன்றும் வழக்கமானப் பயிற்சி முறைகளில் ஆலியாவின் பொது அறிவை இம்மி அளவும் வளர்க்க முடியவில்லை. ஆனால் அவருக்குப் பிடித்த விஷயத்தில் அத்துப்படியாக இருக்கிறார். அவர் பலம் எதுவோ அதுதான் அவருக்குப் பயிற்றுவிக்கும் ஊடகம். அந்தத் தனித்திறனை முதலில் கண்டறிய வேண்டும். நடனம் மீது நாட்டம் கொண்டவர் ஆலியா என்பதால் பொது அறிவை இசைக் கோவை வாயிலாகக் கற்றுத்தர ஆரம்பிக்கிறார். இப்படி மின் காந்தத் தூண்டல் கண்டுபிடித்த ‘மைக்கேல் ஃபாரடே’ பற்றிய டிஸ்கோ பாடல்,’ சோடியம் ஆன் தி டான்ஸ் ஃபிளோர்’ எனப் பல அறிவியல் தகவல்களைக் குதூகலம் நிறைந்த நடனத்தோடு கரைத்துக் குடிக்கிறார் ஆலியா.

இப்படித்தான் வழக்கமான கல்விப் பாடங்களையே இசையாக, ஓவிய வடிவங்களாக, திரைப்படக் காட்சிப் பதிவுகளாக, ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப சொல்லிக் கொடுக்க முடியும் என்கிறார் கார்டனர். உங்களுக்கு இஷ்டமான இசை மூலம் குதூகலமாகக் கல்வி கற்கலாம் என்றால் கொண்டாட்டம் தானே! இசை மூலம் மற்ற விஷயங்களை எளிமையாகக் கற்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டோம். ஆனால் இசைத் திறனாளியாக எப்படி மாறுவது? தொடர்ந்து இசைப்போம் வாருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்