வேலையைக் காதலி!- 3

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ஆளுக்கு ஏற்ற வேலையா அல்லது வேலைக்கு ஏற்ற ஆளா?

இந்த கேள்வியை புறக் கணித்து விட்டு வேலை தேடலையோ அல்லது கல்வித் தேர்வையோ செய்ய முடியாது.

வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும், அதிகம் பணம் சம்பாதிக்கக் கூடிய வேலைக்குச் செல்ல எப்படி தன்னை தயார் செய்ய வேண்டும் என்கிற சிந்தனைதான் இங்கு பலருக்கு.

இது ஏன்? வேலைகள் குறைவு. ஆட்கள் அதிகம். ஒரு வேலையை உருவாக்கி விட்டு அதை செய்ய ஆட்களை தேடுவது தான் வழக்கம். காலம் காலமாக வேலை கிடைக்க போட்டா போட்டி இருப்பதால் மற்றவர்களைவிட தான் அதிக தகுதியும் திறமையும் பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அதுதான் நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

இதுதான் வேலைக்கு ஆள் எனும் வாதத்தின் சாரம். ஐ.டி துறை வேண்டும் என பலர் நினைப்பது (அது பற்றி எதுவும் தெரியாத போதும்) அதில் நல்ல வாய்ப்புகள் தெரிவதனால்தானே?

இதற்கு எதிரான வாதம் ஆளுக்கான வேலை. “என் விருப்பத்திற்கு ஏற்ற வேலை எது என்று கண்டறிந்து பெறுவது”தான் அது. மீடியாவில் வரணும், கேமிங் டிசைன் தான் என் வாழ்க்கைஎன்று பேசுபவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

வேலையை செருப்புடன் ஒப்பிட்டால், மனிதனை காலுடன் ஒப்பிடலாம். செருப்புக் கேற்ற காலா? காலுக்கேற்ற செருப்பா?

வேலை வாய்ப்பு எதில் இருக்கிறதோ அதில் சேர் என்பவர்கள் செருப்புக்கேற்ற வாறு காலை மாற்றிக் கொள்ளச் சொல்கிறார்கள்.

உன் விருப்பத்திற்கேற்ற வேலையை தேர்ந்தெடு; அதில் வெற்றி பெறும் வாய்ப்பு கண்டிப்பாக வரும் என்பவர்கள் காலுக்கேற்ற செருப்பைத் தேடுபவர்கள்.

சென்ற தலைமுறையின் மனோபாவம் கிடைக்கின்ற செருப்பில் காலை அட்ஜஸ்ட் பண்ணி போட்டு பழகிக்கொள்வது. இந்த தலைமுறையின் மனோபாவம் காலின் வசதி முக்கியம்; ஒத்துவராத செருப்பை கடனே என்று போட்டுக் கொள்ள முடியாது என்பதே.

ட்ரிபிள் ஈ முடிக்கையில் கூத்துபட்டறை சேரலாமா, எம்.பி.ஏ வேண்டாம் சார்; ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கணும் என்றெல்லாம் கேட்டு என்னிடம் கவுன்சலிங் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

சரி, வசதியான வேலை தன் இஷ்டம் போல எத்தனை பேருக்கு வாய்க்கும்? கிடைக்கின்ற நல்ல கோர்ஸை, நல்ல வேலையை இதற்காக தவற விடலாமா? இதுதான் பெற்றோர்கள் பலர் முன் வைக்கும் கேள்விகள். இதற்கு விடை அளித்தால் கட்டுரையின் முதல் வரிக்கு விடை அளித்தது போலத்தான்.

காலுக்கு ஏற்ற செருப்பு என்பதுதான் முறையானது. ஆனால் பொருத்தமான செருப்பு கிடைக்க பல கடைகள் ஏறி இறங்கணும். நல்ல விலையில் தரமான செருப்புகள் தேடணும். மாற்று ரகங்கள், சந்தையில் புது வகைகள் எல்லாம் பார்த்த வண்ணம் இருக்கணும். வெறும் ஆசை மட்டும் போதாது.

அதுபோல உங்களிடம் வேலைக்கான தீர்மானமான எண்ணங்கள் இருந்தாலும் வெளி உலகின் வாய்ப்புகளையும், தொழில் துறை முன்னேற்றங்களையும், சந்தை போக்குகளையும் கவனிக்கத் தவறாதீர்கள். குறிப்பாக உங்கள் பெற்றோர்களிடம் இது பற்றி கலந்துரையாடுங்கள்.

உங்கள் ஆசை, ஆர்வம் இவற்றுக்கேற்ற தேடல் நியாயமானது. ஆனால் அதற்கான நேரம், பணம், முயற்சி இவைகளை சரியானபடி முதலீடு செய்து உங்கள் வேலைத் தேர்வை செய்ய வேண்டும். முப்பது வயதில் முதல் வீடு, நாப்பது வயதில் ஓய்வு எனப் பேசும் இந்த தலை முறையினர் அதற்கான “ஹோம் ஒர்க்” செய்ய வேண்டும். இதற்கு வெறும் துணிவும் தன்னம்பிக்கை யும் மட்டுமின்றி வெளியுலகத் தொடர்புகள், சந்தை செய்திகள் என எல்லாம் தேவைப் படும்.

மனித வள உளவியலில் Performance Enjoyment Theory என்று ஒன்று உண்டு. அதாவது எந்த வேலை உங்கள் மனதிற்கு மிகவும் பிடிக்கிறதோ அதில் நீங்கள் திறமை பெற்றிருக்கிறீர்கள் என்று பொருள். அதேபோல எட்டிக்காயாக கசக்கும் வேலையில் உங்கள் திறமை கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும்.

எனக்கு கணக்கு ரொம்ப பிடிக்கும் என்றால் அதில் திறமை இருக்கிறது என்று தான் பொருள். சங்கீதம் பிடிக்காது என்றால் கண்டிப்பாக உங்களுக்கு அதில் திறமை குறைவு என்றுதான் பொருள்.

தங்கள் விருப்பத்திற்கேற்ப தொழிலை தேர்ந்தெடுத்தவர்கள் தொழில் பற்றி அங்கலாய்ப்பது குறைவு. காதலித்து கல்யாணம் செய்துகொண்டது போல அது.

பல்லாயிரம் பேருக்கு அறிவியல் பூர்வமான உளவியல் ஆய்வுகள் மேற் கொண்டவன் என்கிற தகுதியில் கூறுகிறேன். ஒருவரின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டு கொள்ளுதல் எளிது. ஆய்வுகள் போவதற்கு முன் ஒரு நல்ல உரையாடல் பல உண்மைகளை உணர்த்தும்.

உங்கள் பிள்ளை எந்தெந்த வேலைகள் செய்யும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறான் என்று கவனியுங்கள். அவற்றில் ஏதோ ஒன்றில்தான் அவன் எதிர்காலம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

திங்கள்தோறும்- gemba.karthikeyan@gmail.com

வேலை கிடச்சிருச்சு!

அந்த இளைஞன் காதல் வசப்பட்டிருந்தான். காதலி வசதி மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவள். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை. இளைஞனோ மிகச் சாதாரண நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவன். ஐ.ஐ.டி படிக்கும் அளவிற்கு அறிவும் மதிப்பெண் இருந்தும், அருகாமையிலேயே எம்.எஸ்.ஸி தான் படிக்க முடிந்தது. வருங்காலத்தைத் தீர்மானிக்கும் நேரத்தில் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கதவைத் தட்டின.

ஒன்று ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை. மற்றொன்று ஐ.ஐ.எம். மில் ஆராய்ச்சியாளர் வேலை. பணம், பெயர், அந்தஸ்து அனைத்தும் கார்ப்பரேட் வேலையில் இருந்தது. தவிர, அவருக்கு பெண் வீட்டில் பெருமை சேர்க்க, காதலில் ஜெயிக்க அது மிகவும் உதவி செய்யும்.ஆராய்ச்சியாளர் பதவி நிரந்தரமில்லாதது. ஸ்டைபெண்ட் வருமானம்தான். அந்த துறை வருங்காலம் யாரும் அறியாதது.

மேலதிகாரியான வெளி நாட்டவரும் சில காலம்தான் இங்கு தங்கப் போகிறார். இத்தனை இருந்தும் அவர் விருப்பம் அதுவாக இருந்ததால் அதையே தேர்ந்தெடுத்தார். பின் அந்தத் துறையின் முதல் இந்திய பெருந் தொழிலகத்தை பிற்காலத்தில் நிறுவினார். அவர் வேறு யாருமல்ல இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

48 mins ago

சுற்றுச்சூழல்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்