மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 02: சட்டாம்பிள்ளையைச் சமாளிப்பது எப்படி?

By ஆர்த்தி சி.ராஜரத்தினம்

பதின்பருவத்தினரை பெரிதும் அச்சுறுத்தும் உளவியல் ரீதியான சிக்கல்களில் ஒன்று, ‘சட்டாம்பிள்ளைத்தனம்’.  வம்பிழுத்தல், சீண்டல் போன்றவை இதற்குள் அடக்கம். என்றாலும் ஆங்கிலத்தில் ‘புல்லியிங்’ என்று சொல்லப்படும் சட்டாம்பிள்ளைத்தனம் என்பது பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்காகும். இதனால் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகுதல், பள்ளிக்குச் செல்ல மறுத்தல், படிப்பில் இருந்து இடைநிற்றல் உள்ளிட்ட சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டுவருகிறார்கள்.

இத்தனை பிரச்சினைக்குரிய சட்டாம்பிள்ளைத்தனம் பல வகையில் நிகழ்த்தப்படுகிறது. அவற்றைப் புரிந்துகொண்டால் மட்டுமே அவற்றைக் கையாள்வதற்கான வழிகளையும் கண்டடைய முடியும்.

அதட்டல் மிரட்டல்

பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடுதல், முரட்டுத்தனமான பேச்சு, திட்டுதல், அதட்டுதல் உள்ளிட்ட பேச்சுரீதியான அதட்டல் மிரட்டல் ஒரு வகை சட்டாம்பிள்ளைத்தனம். மூன்றாம் நபருக்கு இவை வெறும் கேலிப் பேச்சாகத் தோன்றலாம்.

ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே புரியும் இதன் தீவிரம். இதனால் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவரும் வாக்குவாதத்தில் இறங்கும்பட்சத்தில் தவறிழைப்பவர் தப்பித்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்துவிடுவதுண்டு. “நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேலி செஞ்சேன். ஆனா, அவள் பிரச்சினையைப் பெரிசாக்கிட்டா” என்பதுபோல.

சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துதல்:

சமூகத்தில் இருந்து அல்லது குழுவினரிடம்  இருந்து ஒருவரைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தில் அவரைப் பற்றிப் புறம்பேசுதல், குழுவாகச் சேர்ந்து தூற்றுதல், பொது இடங்களில் வைத்துச் சங்கடப்படுத்துதல்.

உடல்ரீதியான தாக்குதல்:

ஏதோ விபத்து நிகழ்ந்துவிட்டது என்ற அபிப்பிராயத்தைப் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் குறிவைத்தவரை அடித்தல், உதைத்தல். பலநேரத்தில் இத்தகைய சம்பவங்களைப் பொது மக்கள் கண்டும் காணாமல் இருப்பதால் மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தாக்குதல்களும் ஒரு சேர நிகழ்த்தப்படுவதும் உண்டு.

சட்டாம்பிள்ளையின் குணங்கள்

1. நான் மற்றவர்களைக் காட்டிலும் பலசாலி, பணம் படைத்தவன் போன்ற அதிகாரத் திமிர் கொண்டவர் சட்டாம் பிள்ளையாக மாறுவதுண்டு. பலசமயங்களில் தன்னம்பிக்கை அற்றவர்களும் தன்னைப் பெரும்புள்ளியாகக் காட்டிக்கொள்ளும் தன்முனைப்பு கொண்டவர்களும் சட்டாம்பிள்ளைகளாக வலம் வருவதுண்டு.

2. சட்டாம்பிள்ளைகளால் விமர்சனத்தை ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது.

3. அவர்களுக்கு மற்றவர்களின் வலி புரியாது.

4. தன்னை எல்லோரும் அண்ணாந்து பார்க்க வேண்டும் பாராட்டித் தீர்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுதி அவர்களிடம் காணப்படும்.

5. அனேகமாக சட்டாம்பிள்ளைகள் கூட்டமாகத்தான் திரிவார்கள்.

என் கிட்ட மோதாதே!

தங்களுடைய வீட்டிலோ சுற்றுப்புறத்திலோ மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் நபர்களைப் பார்த்துப் பழகியே பெருவாரியான சட்டாம்பிள்ளைகள் உருவாகுகிறார்கள். இப்படி மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தத் துடிக்கும் இளைஞர்கள் பெற்றோர் கவனிப்பாரின்றி இருப்பவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். தன்னுடைய போதாமையைப் பாதுகாப்பின்மையைச் சமாளிக்கத்தான் பலர் மற்றவர்களை அச்சுறுத்தத் தொடங்குகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் சமூக அந்தஸ்து மிக்க பல பெரும்புள்ளிகள் இப்படிப்பட்ட சட்டாம்பிள்ளைகளாகத்தான் நடந்துகொள்கிறார்கள். அவர்களைத்தான் நம் குழந்தைகள் முன்மாதிரியாக வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டி இருக்கிறது.

அதற்கு முன்னதாகப் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் சட்டாம்பிள்ளைகளைக் கையாளச் சில யோசனைகள்:

# உங்களிடம் யாரேனும் சட்டாம்பிள்ளைத்தனத்தை வெளிப்படுத்தினால் முதல் கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது, “நான் தனி ஆள் இல்லை” என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதுதான். உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள், நண்பர்களோடு நேரம் செலவழிக்கத் தொடங்குங்கள். அக்கம்பக்கத்தாரோடு இருப்பவர்களை நெருங்கச் சட்டாம்பிள்ளைகள் தயங்குவார்கள்.

# தன்னம்பிக்கையோடு அமைதிகாத்து இருக்கப் பழகுங்கள். நேர்மறையானவர்களைச் சட்டாம்பிள்ளைகளால் எதுவும் செய்ய முடியாது. பயத்தில், கோபத்தில் உடனடியாக எதிர்வினையாற்றுபவர்களைத்தான் சட்டாம்பிள்ளைகள் குறிவைப்பார்கள்.

# நம்பத்தகுந்த வயதில் மூத்தவர்களிடம் புகார் அளியுங்கள். அதேநேரத்தில் பெரியவர்களைத் துணைக்குத்தான் கூப்பிட வேண்டுமே தவிர அவர்களை வைத்துச் சட்டாம்பிள்ளையைக் கையாள வேண்டாம். ஏனென்றால், இதன்மூலம் நீங்கள் பலவீனமானவர்கள் என்று சட்டாம்பிள்ளை நினைக்கக்கூடும். அதனால் உங்களைச் சீண்ட வேறு வழிகளைத் தேடத் தொடங்குவார்.

# துரிதமாகவும் சீராகவும் செயலாற்றுவது அவசியம். பொதுவாக, வம்பிழுப்பதில்தான் தங்களுடைய கைவரிசையைச் சட்டாம்பிள்ளைகள் காட்டத் தொடங்குவார்கள். அத்தகைய சூழலைவிட்டு உடனடியாக வெளியேறுவது ஆரம்பத்திலேயே அவர்களின் கொட்டத்தை அடக்க உதவும்.

# நிலைமை கைமீறிப் போவதாகத் தோன்றினால் மனநல ஆலோசகரை அணுகுங்கள்.

தொகுப்பு: ம.சுசித்ரா

‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ்,
கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை,
சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்