பொறியியல் பலவிதம்: சுவாரசியமான தனித்துவப் பொறியியல்!

By எஸ்.எஸ்.லெனின்

 

பொ

றியியல் உயர்கல்வி என்பது ஒருவரின் பொருளாதார எதிர்காலத்தை அமைத்துத் தருவது மட்டுமல்ல. அவரது கனவு, லட்சியம் ஆகியவற்றை ஈடேற்றுவதும்கூட. அப்படிச் சுவாரசியமும் சவாலும் நிரம்பிய தனித்துவமானவர்களுக்கான சில பொறியியல் படிப்புகள் உள்ளன.

வான், விண் ஊர்திகளுக்கு

வானூர்திகள் முதல் விண்கலங்கள்வரையிலான படிப்புகள் தற்போதைய தலைமுறையினர் மத்தியில் சிறுவயதுக் கனவாக உள்ளன. இவை குறித்தான படிப்புகள் ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் என இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுபோலவே தோன்றலாம். ஆனால், ஏரோநாட்டிகல் என்பது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வகை வானூர்திகளைப் பற்றிய படிப்பு. ஏரோஸ்பேஸ் என்பதில் ஏரோநாட்டிகல் பாடங்களுடன், ஏவுகணை, ராக்கெட், விண்வெளி மையம், விண்வெளி ஓடம் உள்ளிட்டவற்றையப் பற்றியும் படிக்கலாம். இவற்றில் விண்வெளியை மட்டுமே மையமாகக் கொண்ட அஸ்ட்ரோநாட்டிகல் பொறியியல் துறையும் தனியாக உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்துவருவதால் அடுத்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை இந்தத் துறைகள் ஏற்படுத்துமெனக் கணிக்கப்படுகிறது. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., ஏர் இந்தியா என விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பயணிகள் விமான சேவை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் தனியாக உள்ளன. தற்போதைக்கு இங்கு ஏரோஸ்பேஸ் அரசு வசமே இருந்தாலும், 49 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு வரவிருப்பதால் இத்துறையில் பணிவாய்ப்புகள் அதிகரிக்கும். பன்னாட்டு விமான நிறுவனங்களுக்கான மென்பொருள் சேவை வழங்கும் இந்திய மென்பொருள் சந்தையிலும் உயர்பதவிகள் காத்திருக்கின்றன.

இளநிலைப் பொறியியல் பட்டத்துடன், முதுநிலையில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்., அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலையில் பி.ஹெச்டி. வரை படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. சிறு வானூர்தி ரகங்களான ‘ட்ரோன்’, வேவுப் பணிக்கான ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது, வான்/விண் வாகனங்களுக்கான மின்னணுக் கட்டுப்பாட்டுச் சாதனங்களைத் தயாரிக்கும் ஏவியானிக்ஸ் துறை என வேலைவாய்ப்புகள் ஏறுமுகத்தில் உள்ளன.

கப்பல் கட்டலாம்

வானில் உயரப் பறப்பதுபோலவே கப்பலில் பணிபுரிவதும் சுவாரசியமானதே! கடந்த சில ஆண்டுகளில் கப்பல் கட்டுமானத்தில் இந்தியா முன்னேறி இருப்பதும் இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதும் கப்பல் சார் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன. பயணிகள் கப்பல், சரக்குக் கப்பல், அதிவேகப் படகு, உல்லாசப் படகு, நவீன மீன்பிடி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் எனக் கப்பல் கட்டுமானத் துறை பரந்துவிரிந்தது. போக்குவரத்து மட்டுமன்றிப் பாதுகாப்பு சார்ந்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கப்பல்களும் படகுகளும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

கடலில் மிதக்கும் இந்தக் கலன்களுக்காக நீரிலும், நிலத்திலும் அதிக எண்ணிக்கையில் பணிபுரிய பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மட்டுமன்றி மரைன் இன்ஜினீயரிங் துறை மூலம் திறன் வாய்ந்த பொறியாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். கப்பல் கட்டுமானத் துறை ஐரோப்பாவிலிருந்து ஆசியாவின் துறைமுக நகரங்களுக்கு நகர்ந்திருக்கிறது. வடிவமைத்தல், கட்டுமானம் மட்டுமன்றி, பழுது நீக்கல், பராமரிப்பு, ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றிலும் மரைன் பொறியாளர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கிறது.

சுற்றுச்சூழல் காக்கும் பொறியியல்

சூழலியல் பொறியியல் என்பது ஒரு தனித்துவமானத் துறை. சிவில் பொறியியலில் ஒரு பகுதியாக மட்டுமே முன்பு அது இருந்தது, தற்போது காலத்தின் கட்டாயத்தால் தனித் துறையாக வளர்ந்திருக்கிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல் எனப் அறிவியலில் இருந்தும், சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல், கெமிக்கல் இன்ஜினீயரிங் எனப் பொறியியல் துறைகளில் இருந்தும் கலவையான பாடத்திட்டத்தில் இந்தச் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உருவாகி உள்ளது.

மேற்கண்ட அறிவியல்,பொறியியல் படிப்புகளை இளநிலையாகப் பயின்றவர்கள், முதுநிலையாகச் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து வந்தனர். தற்போது சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகள், திட்டங்கள், புதிய சட்டங்கள், விழிப்புணர்வு காரணமாகவும் அத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஊதியத்துக்கு அப்பால் மனத் திருப்தியையும் த்ும் இந்தப் படிப்புக்கான பணியில் பெறலாம்.

கட்டுமானம், மருந்து ஆராய்ச்சி, வேதிப்பொருள் தயாரிப்பு எனத் தொழிற்துறைகள் எதுவானாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு இன்றித் தங்கள் பணிகளை அவர்கள் மேற்கொண்டாக வேண்டும். இவற்றுக்கு ஆலோசகர்கள், அரசு, அரசுசாரா நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், தொழிற்துறை, கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சுரங்கம், மாசுக் கட்டுப்பாடு, நீர் மற்றும் கனிம வளம் போன்றவை சார்ந்த துறைகளிலும் தனியார், அரசுப் பணியிடங்களில் சேரலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக்கொண்டு செயல்படும் அரசு சாரா தொண்டு, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் உண்டு.

இன்னும் பல...

இந்த வரிசையில் வேளாண்மை, உணவுப் பொருள் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அக்ரிகல்சுரல் இன்ஜினீயரிங், டெய்ரி டெக்னாலஜி, அக்ரிகல்சர் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஃபுட் பிராசஸ் இன்ஜினீயரிங் போன்றவற்றில் உரியதைத் தேர்வு செய்யலாம். மருத்துவம் படிக்க விரும்பி அவை கிடைக்காததால் பொறியியல் துறையில் கரை ஒதுங்கியவர்கள் மருத்துவம்+பொறியியல் என இரண்டு துறைகளின் கலவையான பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, ஜெனிடிக் இன்ஜினீயரிங், நானோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேடிக்ஸ் உள்ளிட்டவற்றில் சேரலாம். ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் பிரிண்ட் அண்ட் மீடியா டெக்னாலஜியில் சேரலாம்.

கல்லூரித் தேர்வில் கவனம்

இந்த நவீனப் பொறியியல் படிப்புகள் அனைத்துக்கும் தொழிற் துறை சார்ந்த செய்முறைப் பயிற்சியும் அறிவும் ஆய்வு அனுபவமும் அவசியம். அதற்கான வசதிகள் கொண்ட கல்லூரிகளைக் கலந்தாய்வில் கவனமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. அப்படித் தகுதியான கல்லூரி கிடைக்காவிட்டால் இளநிலையில் பாரம்பரிய பொறியியல் படிப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உகந்த கல்லூரியை அடையாளம் கண்டு படிக்கலாம். பின்னர் எம்.டெக்.,/ எம்.இ., என முதுநிலைப் படிப்புகளை, மேற்கண்ட தனித்துவப் பொறியியல் துறைகளைச் சிறப்பான கல்வி நிறுவனங்களில் தேடிச் சேர்ந்து படித்து முன்னேறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்