பயனுள்ள விடுமுறை: வாழ்க்கைக்கு உதவும் வன் திறன்

By எஸ்.எஸ்.லெனின்

இன்றைய காலகட்டத்தில் வேலைக்குத் தேவை மென் திறன் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால், என்றென்றும் பணிவாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கும் கைகொடுப்பது வன் திறன். கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக்க, கணினி மென்பொருட்களைக் கற்றறிவதில் காட்டும் முனைப்பை வன் திறன்களைக் கற்றுக்கொள்வதிலும் காட்டலாம்.

கணினி வன்பொருட்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, பழுது நீக்குதல் குறித்து அறிந்துகொள்ளலாம். இந்தப் பயனுள்ள தொழிற்பயிற்சி அனுபவம் பிற்காலத்தில் வருமான வாய்ப்புகளை வழங்குவதுடன், நமது வீட்டிலிருக்கும் மின் சாதனங்களை முறையாகப் பராமரிக்கவும் பிறர் உதவியின்றிச் சிறு பழுதுகளைச் சுயமாகக் களையவும் உதவும்.

கணினி வன் பொருள்கள்

கணினி சார் அறிவு என்றால் கணினி தொடர்பான மென்பொருட்கள், செயலிகள், இயங்கு பொருட்கள் ஆகியவற்றைக் கற்பதாகவே பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால், கணினியின் வன்பொருள் துறை சார்ந்த பெரும் படிப்புகளும், பணித் துறைகளும் உள்ளன. அவற்றுக்கான அடிப்படையாக ‘கம்ப்யூட்டர் ஹார்டுவேர்’, ‘நெட்வொர்க்கிங்’ குறித்துப் பயில்வதும் பயிற்சி பெறுவதும் அவசியமாகிறது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கணினியின் பாகங்கள் செயல்படும் விதம் குறித்தும், அடிப்படை ‘ஹார்டுவேர்’ குறித்தும், கணினியின் தலைமுறைகள், புதிய வளர்ச்சிகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கணினி சார்ந்த சிறு பழுதுகள், அவற்றைச் சரிசெய்வது குறித்து அறிந்துகொள்ளலாம். இவற்றைச் செய்முறை சார்ந்த பயிற்சியாகப் பெறுவது கூடுதல் நன்மை.

ஏற்கெனவே இவை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருப்பவர்கள், முறையான சான்றிதழ், பட்டயப் பயிற்சியாகவும் பெறலாம். 6 மாதப் பட்டயப் பயிற்சிகளாகப் பெறுவது பின்னாளில் வருமான வாய்ப்புக்கும் உதவும். ஹார்டுவேர் பயிலும் மாணவர்கள் அவற்றுடன் இணைந்த நெட்வொர்க்கிங், கணினிப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பயில்வது சிறப்பு. ஹார்டுவேரில் அடிப்படை அறிந்தவர்கள், ‘கார்ட் லெவல்’, ‘சிப் லெவல்’ பயிற்சிகளில் சேரலாம்.

வீட்டு மின் சாதனங்கள்

வீட்டில் உள்ள செல்ஃபோன், டி.வி., ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றைப் பராமரிப்பது, பழுதுபார்த்தல் குறித்துக் கற்றுக்கொள்ளலாம். இதற்கெனத் தனியாகப் பயிற்சி நிறுவனம் சென்று பணம் கட்டி பயிற்சி பெறுவதைக் காட்டிலும், பழுது நீக்கும் பணியாளர்களில் நமக்குத் தெரிந்தவர்களிடமே கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் நேரடியாகச் செய்முறை அனுபவம் கிடைக்கும். எது ஒன்றையும் பாடமாகப் படிப்பதைவிட அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளும்போது தொழில் திறமைக்கான தன்னம்பிக்கை கிடைக்கும்.

இந்த வரிசையில் இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அனுபவ அறிவைப் பெறலாம். இதுவும் சொந்தமாக வாகனப் பராமரிப்பு, பழுது நீக்குவதற்குப் பின்னாளில் வெகுவாய் உதவும். பொறியியல் துறை சார்ந்த மேற்படிப்புக்கும், அது குறித்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதற்கும் இந்தப் பயிற்சிகள் கைகொடுக்கும். இன்வெர்டர்கள், மோட்டார்கள், சி.சி.டி.வி., சோலார் பேனல்கள் நிறுவுதல்-பராமரித்தல் சார்ந்தும் கற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு கிடைக்கும் அனுபவத்துடன் நூலகம், இணையம் வாயிலாக வீட்டு மின் சாதனங்கள் செயல்படும் விதம், அவற்றின் அடிப்படை அறிவியல் குறித்தும் குறிப்பெடுத்துக்கொள்ளலாம். உயர்கல்வியில் அவை குறித்த பாடங்கள் வரும்போது ஏனைய மாணவர்களைவிட ஈடுபாட்டுடன் கற்பதும் தேர்வெழுதுவதும் செய்முறைப் பயிற்சிகளைச் செய்வதும் எளிதாக இருக்கும்.

அனுபவ அறிவுக்கு மரியாதை

கணினி, மின்னணு சார்ந்த சேவைத் துறையில் சான்றிதழ்களைவிட அனுபவ அறிவுக்கே முதலிடம் தரப்படுகிறது. எனவே, முறையான அனுபவ அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் எளிதிலும் சுயமாகவும் வருமானம் ஈட்ட முடியும். தொடரும் மேற்படிப்பு வாயிலாக முழுமையான தகுதிகளை வளர்த்துக்கொண்ட பிறகு, எவரிடமும் கைகட்டி வேலை பார்க்காது வங்கி உதவியுடன் கடன்பெற்றுச் சொந்த முயற்சியில் தொழில்முனைவோராகவும் வெற்றிபெற முடியும்.

பொதுத்துறை வங்கிகள் சார்பில் செயல்படும் கிராமப்புறச் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள், உதவித்தொகை, மதிய உணவுடன் இலவசத் தொழில் பயிற்சிகள் பலவற்றை வழங்குகின்றன. பயிற்சியைச் சிறப்பாக முடிப்பவர்களுக்கு வங்கிக் கடனில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்பபு கிடைக்கிறது. இவை தவிர்த்துக் கல்வி அறக்கட்டளைகள், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகச் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான சிறப்புப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

எச்சரிக்கை

மின் சாதன உபகரணங்கள், மோட்டார் சாதனங்களை இயக்குவது, பழுதுபார்ப்பது, பராமரிப்பது ஆகியவற்றில் முன்னெச்சரிக்கையும், அனுபவமும் அவசியம். இத்துறைச் சார்ந்த நிபுணர்களின் மேற்பார்வையோ உதவியோ இல்லாமல் பயிற்சியற்றவர்களும் வயதில் சிறியவர்களும் அவற்றை ஆராய்வதோ, பழுதுநீக்க முற்படுவதோ கூடாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

12 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்