புதுத் தொழில் பழகு 07: ஆர்கானிக் சந்தையில் அழகூட்டுபவர்

By ஆர்.ஜெய்குமார்

 

சு

த்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், விதை நீக்கப்பட்ட பழங்கள் எனச் செயற்கையான தயாரிப்புகள் சந்தையைப் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன. இப்போது அதற்கு மாற்றாக ஆர்கானிக் பொருட்களுக்கு மவுசு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மூலிகை அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியவர் ரம்யா.

திருச்செங்கோடைச் சொந்த ஊராகக் கொண்ட ரம்யா, மென்பொருள் பொறியாளர். படித்தது கணினி அறிவியல் என்றாலும் ஆர்வமோ சொந்தத் தொழிலாகத்தான் இருந்தது. திருமணம் முடித்து சென்னையில் குடியேறிய பிறகு சொந்தத் தொழில் தொடங்குவதற்காகக் காலம் பார்த்து இருந்திருக்கிறார். அப்போது உருவான ஆர்கானிக் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி ‘Grandma's Love’ (பாட்டியின் அன்பு) என்ற பெயரில் மூலிகை அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியிருக்கிறார்.

என் வீட்டுத் தோட்டத்தில்...

“முன்பெல்லாம் வீட்டில் தயாரித்த சிகைக்காயைத்தான் தலைக்குத் தேய்த்துக் குளித்தோம். பயறு மாவைத்தான் முகத்துக்குத் தேய்த்தோம். கடந்த இருவது, முப்பது ஆண்டுகளில்தான் ரசாயன அழகு சாதனப் பொருட்கள் பயன்பாடு பரவலானது. வீட்டில் தயாரித்துப் பயன்படுத்திய பொருட்களின்தான் ஆரோக்கியமானவை. அதனால் பலரும் அம்மாதிரியான குளியல் பொடி, சிகைக்காய் போன்றவற்றைப் பயன்படுத்த விரும்புகின்றனர். இன்றைக்குள்ள வாழ்க்கை நெருக்கடியில் இதற்காக நேரம் ஒதுக்கித் தயாரிக்க முடிவதில்லை. அதனால் இதை நாமே தயாரித்துக்கொடுக்கலாம் என முடிவெடுத்தேன்” என்கிறார் ரம்யா.

அன்றாடப் பயன்பாட்டுக்காக வீட்டுத் தோட்டத்திலேயே மூலிகைச் செடிகளை வளர்க்கும் அம்மா, பாட்டியைப் பார்த்து வளர்ந்தவர் ரம்யா. தங்களுக்குத் தேவையான அழகுசாதனப் பொருட்களை வீட்டிலேயே அவர்கள் எளிதில் தயாரித்து பயன்படுத்தி னார்கள். அன்று கிடைத்த அனுபவமும் அதனால் உண்டான ஆர்வமும்தான் ரம்யாவின் இந்த முடிவுக்குப் பின்னாலுள்ள காரணம்.

சவாலே சமாளி

முதலில் ரம்யா, நண்பர்கள் சிலருக்காக மட்டும் மூன்று, நான்கு குடுவைகள் குளியல் பொடி மட்டும்தான் தயாரித்துக் கொடுத்துள்ளார். அவரது வீட்டில் பாட்டி செய்து தந்த தயாரிப்பு முறையை வைத்தே அவரால் இதைத் தயாரிக்க முடிந்தது. நாளாக நாளாக இவரது குளியல் பொடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

“இதை உடனடியாகத் தொழிலாக ஆரம்பித்துவிடவில்லை. 2011-ல்தான் இந்தத் தொழிலைத் தொடங்கலாம் என முடிவெடுத்தேன். அதிலிருந்து மூன்றரை வருடங்கள் மூலிகைப் பொருட்கள் குறித்துத் தேடித் தேடிப் படித்தேன். அத பற்றி முறையாகத் தெரிந்து கொண்டவர்களைச் சென்று பார்த்தும் தகவல் சேகரித்தேன்” என்று சொல்லும் ரம்யா, முதலில் பலவிதமான சவால்களை இந்தத் தொழிலில் எதிர்கொண்டிருக்கிறார்.

பொதுவாக அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் அது கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தும் ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று ரம்யா நினைத்தால் பதப்படுத்தும் ரசாயனத்தைத் தவிர்த்தார். அதனால் அவரது தயாரிப்புப் பொருட்களில் சிலவற்றை நாட்கணக்கில் வைத்துப் பயன்படுத்த முடியாது.

Ramya ரம்யா

இதை ஒரு பாதகமான அம்சமாகச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், தளராமல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால் சில பொருட்களை மருந்துப் பொருட்களைப் போல குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்த வாடிக்கையாளர்களிடம் பரிந்துரைக்கிறார்.

மேலும் தன்னுடைய பொருட்களை விற்கக் கடைகளை அவர் நாடவில்லை. விளம்பரமும் செய்யவில்லை. வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வாய்மொழியே மிகச் சிறந்த விளம்பரமாக ரம்யாவுக்குக் கைகொடுத்துள்ளது. அவரும் அதைப் பயன்படுத்தித் தனது பொருட்களைப் பலரிடம் கொண்டுசேர்த்தார்.

நான்கு வாடிக்கையாளர்கள், எட்டாகி, 16 ஆகி, இன்றைக்கும் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம் குளியல் பொடி தயாரிப்பில் தொடங்கிய தொழில், இப்போது 48 விதமான அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலாக விரிந்துள்ளது.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்