அக்கினிக்குஞ்சு: எங்கே உள்ளது உங்களுக்கான விடுதலை?

By ம.சுசித்ரா

ம்பிக்கை ஒளி ஏற்றுவதற்கு ஒரு உத்வேகம் தேவை. அந்த உத்வேகத்தை ஒரு உண்மைக் கதை அளிக்கலாம். ஒருவருக்கு நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் அளிக்கலாம். சாதித்த ஆளுமை ஒருவரின் அனுபவப் பகிர்வுக்குத் துவண்டு போன ஒரு நபரை, ஏன் ஒரு சமூகத்தையே உயிர்ப்பிக்கும் ஆற்றல் உண்டு. அதுதான் வாழ்க்கை அனுபவம் தோய்த்தெடுத்த சொற்களின் ஆற்றல். வரலாற்று போக்கையே மாற்றி அமைத்த உரைவீச்சுகள் வரலாற்றில் அனேகம். அப்படி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளின் சிறந்த உரைகளை முன்வைக்கும் பகுதி இது.

சாதியத்தையும் ஏற்றத்தாழ்வுகளையும் களையும் தொலைநோக்குப் பார்வையுடன், சமத்துவத்தை அரசியல் சாசனமாக்கிய சட்ட மேதை, ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓயாமல் இயங்கிய செயல்பாட்டாளர் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம் சில நாட்களுக்கு முன்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

தன்னுடைய மரணத்துக்கு எட்டு மாதங்களுக்கு முன்பாக ஆக்ரா நகரத்தில் 1956-ம் ஆண்டு மார்ச் 18 அன்று அம்பேத்கர் ஆற்றிய உரை சரித்திரப் புகழ் வாய்ந்தது. தன்னுடைய உரையைப் பொதுமக்கள், தலைவர்கள், மாணவர்கள், அரசாங்க ஊழியர்கள் என ஏழு தரப்பினருக்காக அன்று பிரித்துக்கொண்டு பேசினார் அம்பேத்கர். அதன் சுருக்கம்:

பொதுமக்களே!

உங்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கடந்த முப்பது ஆண்டுகளாக நான் போராடிவருகிறேன். நாடாளுமன்ற, மாநிலச் சட்டமன்றங்களில் உங்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்திருக்கிறேன். உங்களுடைய குழந்தைகள் கல்வி பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன். இனிமேல் கல்வி, பொருளாதார, சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களைய ஒன்றிணைந்து போராட வேண்டியது உங்களுடைய கடமை. அதைச் சாத்தியப்படுத்த எல்லாவிதமான தியாகங்களையும் செய்வதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.

தலைவர்களே!

யாரேனும் ஒருவர் உங்களைத் தன்னுடைய மாளிகைக்கு அழைத்தால் தாராளமாகச் செல்லுங்கள். ஆனால், உங்களுடைய குடிசையைத் தீக்கிரையாக்கிவிட்டு அங்கே போகாதீர்கள். ஒருவேளை நாளையே உங்களை அவர் தன்னுடைய மாளிகையில் இருந்து தூக்கி எறிந்துவிட்டால் பிறகு எங்கே போவீர்கள்? உங்களையே நீங்கள் விற்றுவிட முடிவெடுத்தால் அது உங்கள் இஷ்டம். ஆனால், ஒருபோதும் உங்களுடைய கழகத்துக்குத் துரோகம் இழைத்துவிடாதீர்கள்.

நிலமற்ற கூலித் தொழிலாளர்களே!

என் கவலையெல்லாம் நிலமற்ற கூலித் தொழிலாளர்களைப் பற்றியதுதான். அவர்களுக்கு வேண்டியதை என்னால் செய்ய முடியவில்லை. அவர்கள் சந்திக்கும் சிரமங்கள், துயரங்களை என்னால் சகிக்க முடியவில்லை. நிலவுடமையாளர்களாக இல்லாததால்தான் பல வன்கொடுமைகளுக்கும் அவமானங்களுக்கும் அவர்கள் ஆட்பட வேண்டியிருக்கிறது. தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியாதவர்கள் அவர்கள். நான் அவர்களுக்காகப் போராடுவேன். இந்த முயற்சியில் அரசாங்கம் குறுக்கிட்டால் தொழிலாளர்களைத் தலைவர்களாக உருவாக்கிச் சட்டரீதியாகப் போர் தொடுப்பேன். எப்படியாவது அவர்களுக்கு நிலம் பெற்றுத்தருவேன்.

அரசு ஊழியர்களே!

கல்வியால் நமது சமூகம் ஓரளவு முன்னேறி இருக்கிறது. சிலர் கல்வி பெற்று உயர்ந்த பதவிகளை அடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் படித்தவர்கள்தான் எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்கள். உயர்கல்வி படித்து முடித்த பிறகு, அவர்கள் சமூக சேவையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தங்களுடைய வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்ளும் சின்னதும் பெரியதுமான குமாஸ்தாக்கள் சேர்ந்த கூட்டமாகவே அவர்களை இப்போது பார்க்கிறேன். அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுடைய சம்பளத்தில் 20-ல் ஒரு பங்கைச் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணிக்க வேண்டும். அப்படித்தான் நமது சமூகம் முன்னேறும். இல்லையேல் ஒரு குடும்பம் மட்டுமே ஆதாயம் அடையும். சமூகத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், கிராமத்திலிருந்து படிக்க வெளியே செல்லும் ஒரு சிறுவனைச் சுற்றித்தான் இருக்கிறது. கல்வியறிவு பெற்றவர் சமூகப் பணியாளராக ஆகும்போது அவர் அந்தச் சமூகத்துக்கு வரமாகத் திகழ முடியும்.

மாணவர்களே, இளைஞர்களே!

மாணவர்களிடம் என்னுடைய வேண்டுகோள் எல்லாம், படித்துமுடித்த பிறகு அல்பமான குமாஸ்தாவாகாமல் தங்களுடைய கிராமத்துக்கும் அக்கம்பக்கத்தவருக்கும் அவர்கள் சேவை புரிய வேண்டும். அறியாமையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அநீதிக்கும் சுரண்டலுக்கும் முடிவுகட்ட வேண்டும். உங்களது எழுச்சி சமூகத்தின் எழுச்சியோடு இணைந்தது.

பிரம்மாண்டமான ஒரு கூடாரத்துக்கு முட்டுக்கொடுக்கும் கழி போலத்தான் இன்று நான் நிற்கிறேன். இந்தக் கழி இல்லாமல்போகும் தருணத்தை நினைக்கும்போது கவலை எழுகிறது. எனக்கு உடல்நிலை சரி இல்லை. உங்களை எப்போது பிரிவேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. நாதியற்று, நம்பிக்கையற்று நிற்கும் லட்சக்கணக்கான இம்மக்களைப் பாதுகாக்க ஒரு இளைஞனும் எனக்குத் தென்படவில்லை. இந்தப் பொறுப்பை ஏற்கச் சில இளைஞர்கள் முன்வந்தால் நான் அமைதியாக உயிர்விடுவேன். இறுதியாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன், சுயமாகக் கல்வி பெறுங்கள், பிறகு ஒன்றிணையுங்கள், நேர்மறையாகச் செயல்படுங்கள், பிறகு உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுங்கள். இந்தப் பாதையில்தான் உங்களுக்கான விடுதலை உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்