IND vs BAN 2nd ODI | பயம் காட்டிய ரோகித் - இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்

By செய்திப்பிரிவு

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் இறுதி ஓவர்களில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பேட் செய்திருந்தார். ஆனாலும் அவரால் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை பெற முடியவில்லை.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. இந்தத் தொடரின் முதல் போட்டியை வங்கதேசம் வென்றிருந்தது குறிப்படத்தக்கது.

ரோகித் சர்மா, காயம் அடைந்த காரணத்தால் கோலி மற்றும் தவான் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தனர்.

பின்னர் களம் கண்ட அக்சர் படேல் உடன் 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷ்ரேயஸ் ஐயர். இருவரும் இறுதி வரை விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஷ்ரேயஸ் 82 ரன்களிலும், அக்சர் படேல் 56 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஷர்துல் 7 ரன்களிலும், தீபக் சாஹர் 11 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அந்தச் சூழலில் இடது கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பொருட்படுத்தாமல் பேட் செய்ய வந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவர் வந்தது முதலே பந்தை அடித்து ஆடும் மோடில் இருந்தார். அவரது பேட்டில் படும் பந்துகள் பவுண்டரிகளாக சென்று கொண்டிருந்தன. அவர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை வங்கதேச வீரர்கள் டிராப் செய்திருந்தனர்.

கடைசி 6 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரோகித் சர்மா இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்து டாட். அடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரி. நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் சிக்ஸர் விளாசி இருந்தார். அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்து யார்க்கராக வீசப்பட, அதில் ரோகித் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதனால், வங்கதேசம் வெற்றி பெற்றது. ரோகித் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். 5 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் இதில் அடங்கும்.

முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தொடரையும் இழந்துள்ளது இந்திய அணி.

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு 7-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹதி ஹசன் மற்றும் மஹ்முதுல்லா, 148 ரன்களை குவித்தனர். இருவரும் நேர்த்தியாக பேட் செய்தனர். மெஹதி ஹசன் 100 ரன்களும், மஹ்முதுல்லா 77 ரன்களும் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களை எடுத்தது.

69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. அப்போது களத்திற்கு வந்தார் மெஹதி ஹசன். இறுதி வரை அவுட்டாகாமல் பேட் செய்த அவர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதம் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் ஆகும். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி அசத்தினார். உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்