“இந்த ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு”... - விடைபெற்றார் 'சக்தா எக்ஸ்பிரஸ்' ஜூலன் கோஸ்வாமி

By செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி.

அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில் நெகிழ்ச்சி நிலவியது. கடைசி போட்டியில், 10 ஓவர்களில் வீசி 3 மெய்டன்களுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

போட்டிக்கு முன்னதாக பேசிய கோஸ்வாமி, "1997ல் ஈடன் கார்டனில் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினேன். அன்றைய தினம் நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவுகண்டேன். அப்படித்தான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. நிறைய முயற்சி செய்தேன். எனது நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம்.

நான் இரண்டு [50-ஓவர்] உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடினேன், அதில் ஒன்றையாவது வென்றிருந்தால், எனக்கும், இந்தியாவுக்கும், மகளிர் கிரிக்கெட்டிற்கும் சிறப்பாக இருந்திருக்கும். அதுதான் இறுதி இலக்கு. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அது எனக்கு ஒரு வருத்தம். இந்தியா என்ற பெயர் எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்துகொள்வது தான் எப்போதும் அனுபவிக்கும் தருணம். அது என் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத விஷயம்" என்று உருக்கமாக பேசினார்.

ஜூலன் கோஸ்வாமி யார்?

சக்தாஹா (சக்தா) மேற்கு வங்கத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய நகரம். இந்த நகரில் வளர்ந்து வரும் ஒரு பெண் கிரிக்கெட் உலகில் உச்சத்தை அடைவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. சக்தாஹா நகரின் ஒரு எளிய வீட்டில் பிறந்து அதை சாத்தியப்படுத்தினார் ஜூலன். நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான எளிமையான குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட ஜூலனின் வீட்டார் விளையாட்டை விடப் பெண்களின் கல்வி மற்றும் திருமணம் பற்றி அதிகம் சிந்திக்கும் இயல்பு கொண்டவர்கள்.

கம்யூனிஸ்டுகளைப் பின்பற்றி வந்த மேற்கு வங்கத்தில் பெரும்பாலும் கால்பந்து விளையாட்டே அதிகம் ரசிக்கப்படும். ஜூலனுக்கும் கால்பந்தே பிடித்தமான விளையாட்டு. இதனால், 15 வயது வரை ஜூலனுக்கு கிரிக்கெட் பற்றிய பெரிய எண்ணம் கிடையாது. ஒரு தற்செயல் நிகழ்வு அவரை கிரிக்கெட் உலகை நோக்கி நகர வைத்தது. கிரிக்கெட் வீராங்கனை என்ற கனவை நோக்கிய பயணத்துக்கு அந்த நிகழ்வு அவரைக் கொண்டு சென்றது.

அந்த நிகழ்வு இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான கொல்கத்தா ஈடன் காடனில் 1997-ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி. 1997-ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜூலன் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினார்.

அன்றைய தினம், களத்தில் இருந்த மற்ற நாட்டுப் பெண் வீராங்கனைகளைப் பார்த்தவர், அடுத்த கணம் தானும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தார். தனது 15-வது வயதில் ஜூலன் கிரிக்கெட் பற்றிய கனவு கண்டாலும், அதை சாத்தியப்படுத்த அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். பொதுவாக இந்த 15 வயதில்தான் பலர் தொழில்முறை கிரிக்கெட் வீரருக்கான பயணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள்.

மற்றவர்களைவிட ஜூலன் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாக மாறச் செய்த உழைப்பு வியக்கத்தக்கது. பின்தங்கிய நகரமான சக்தாஹாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான எந்த வசதியும் கிடையாது. சக்தாஹாவில் இருந்து 80 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கொல்கத்தாவில் மட்டுமே அந்நாளில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதிகம் கவனிக்கப்படாத ஒரு விளையாட்டை நோக்கி இந்த 80 கி.மீ. தூரத்தை தினமும் கடக்கத் துணிந்தார் ஜூலன். அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் சாக்தாஹா - ஹவுரா ரயிலைப் பிடித்தால்தான் சரியான நேரத்துக்குப் பயிற்சிக்குச் செல்ல முடியும். கொல்கத்தாவில் அப்போது ஸ்வபன் சது என்ற பயிற்சியாளரே மிகப்பிரபலம். அவரிடமே ஜூலன் கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

பயிற்சியாளர் ஸ்வபன் சது மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்ளக் கூடியவர். எந்த அளவுக்கு என்றால், பயிற்சிக்கு ஒரு நிமிடம் தாமதமானாலும் ஜூலனை வந்த அதே ரயிலிலேயே திருப்பி அனுப்பிவிடும் அளவுக்கு பயிற்சியில் கண்டிப்புடன் நடந்துகொள்வார்.

பலமுறை ரயிலைப் பிடிக்க முடியாமல் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாமல் இருந்த ஜூலனின் கனவை, மன உறுதியை ஒவ்வொரு முறையும் அவரின் ஊர் மக்களும், உறவினர்களும் கலைக்க முயன்றுள்ளனர். ஏன் அவரின் பெற்றோர்களே பலமுறை ரயிலைப் பிடிக்க முடியாத சமயத்தில் கிரிக்கெட்டை விட்டு படிப்பைத் தொடர வற்புறுத்தியுள்ளனர். எதற்கும் ஜூலன் அசைந்து கொடுக்கவில்லை.

கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்க இரவு பகலாக உழைத்தார். ஜூலனின் கடின உழைப்புக்கு வெகுவிரைவாகவே பலன் கிடைக்கத் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளராகப் பயிற்சியில் மின்னிய ஜூலன் முதலில் பெங்கால் அணியில் தேர்வு செய்யப்பட்டார். நான்கு வருடக் கடின உழைப்பில், ஜூலன் சர்வதேச அரங்கிலும் அறிமுகமானார். 2002-ல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியே அவரின் முதல் சர்வதேசப் போட்டி. இந்தப் போட்டியின்போது அவரின் வயது 19 மட்டுமே. முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் அவர்தான் என்பதற்கான விதையைப் போட்டார் ஜூலன்.

அதன் பின்னான அவரின் வாழ்க்கை அனைத்தும் சரித்திரம். மகளிர் கிரிக்கெட் உலகில் அதிக வேகத்தில் பந்துவீசக்கூடிய ஸ்ட்ரைக் பவுலர்களில் ஒருவரான ஜூலன், இந்திய அணியின் சாதனை வெற்றிகள் பலவற்றில் முக்கியப் பங்கு கொண்டுள்ளார்.

2005 உலக மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்தியா ரன்னர் அப் ஆனதிலும் சரி, 2006-ல் இந்திய அணி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றபோதும் சரி ஜூலன் ஒரு ஆல் ரவுண்டராக மிகப்பெரிய பங்களிப்பை அணிக்காகக் கொடுத்துள்ளார். இந்திய மகளிர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆல் ரவுண்டராக அறியப்பட்டாலும் ஒரு வேகப்பந்து வீச்சாளராகச் சிறந்த ரெக்கார்டுகளை வைத்துள்ளார்.

2007-ம் ஆண்டுக்கான ''சிறந்த வீராங்கனை'' ஐசிசி விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது (2010) மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை (2012) வழங்கி மத்திய அரசு ஜூலன் கோஸ்வாமியை மத்திய அரசு கௌரவித்துள்ளது. முன்னாள் சிறந்த வீராங்கனை டயானா எடுல்ஜிக்குப் பிறகு பத்மஸ்ரீ விருது பெற்ற நாட்டின் இரண்டாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் ஆவார்.

ஜூலனைப் பொறுத்தவரை சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசச்கூடியவர் என்பதாலேயே ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்துடன் ஒப்பிடப்படுகிறார். அவரது வேகம் மணிக்கு 120 கி.மீ. பெண்கள் கிரிக்கெட்டில் இது அதிகம். இதனால்தான் இவரை 'சக்தா எக்ஸ்பிரஸ்', 'பெங்கால் எக்ஸ்பிரஸ்' என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கப்படுவதும் உண்டு. தற்போது இந்தப் பெயரில்தான் ஜூலனின் வாழ்க்கை வரலாற்றில் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்