உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் - சாய்னா நெவால் அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

டோக்கியோ: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் 2 இந்திய ஜோடிகள் கால் இறுதி சுற்றில் நுழைந்தன. அதேவேளையில் மகளிர் பிரிவில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சகநாட்டைச் சேர்ந்த காமன்வெல்த் சாம்பியனான லக்சயா செனை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். கால் இறுதியில் பிரனாய், சீனாவின் ஜாவோ ஜுன் பெங்கை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 33-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 12-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனை எதிர்த்து விளையாடினார். இதில் 33 வயதான சாய்னா நெவால் 17-21, 21-16, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

முதல் செட்டில் சாய்னா நெவால் தொடக்கத்தில் 3-11 என பின்தங்கியிருந்த நிலையில் அதன் பின்னர் 17-19 என நெருங்கி வந்தார். எனினும் அழுத்தத்தை அருமையாக கையாண்டு இந்த செட்டை பூசனன் ஓங்பாம்ருங்பன் கைப்பற்றினார். 2-வது செட்டில் சாய்னா நெவால் ஆக்ரோஷமாக விளையாடி பதிலடி கொடுத்தார்.

வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் இடைவேளை வரை இருவரும் சமமான புள்ளிகளையே பெற்றிருந்தனர். இதன் பின்னர் சாய்னா ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அதேவேளையில் வேகத்தை அதிகரித்த பூசனன் ஓங்பாம்ருங்பன் 5 புள்ளிகள் முன்னிலையுடன் முன்னேறிச் சென்று வெற்றிகரமாக ஆட்டத்தை நிறைவு செய்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன் மற்றும் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி தங்களது 3-வது சுற்றில் சிங்கப்பூரின் டெர்ரி ஹீ, லோ கீன் ஹீன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 18-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் நடைபெற்றது. துருவ் கபிலா, அர்ஜூன் ஜோடி கால் இறுதி சுற்றில் இந்தோனேஷியாவின் முகமது அஹ்சன், ஹென்ட்ரா சத்தியவான் ஜோடியை எதிர்கொள்கிறது.

சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி தங்களது 3-வது சுற்றில் டென்மார்க்கின் ஜெப்பா பே, லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியுடன் மோதியது. 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-12, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டது. இந்த ஜோடி கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டகுரோ ஹோகி, யுகோ கோபயாஷி ஜோடியை சந்திக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

இந்தியா

37 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்