44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று சாதனை, ஓபன் பிரிவில் வெண்கலம் கைப்பற்றியது

By பெ.மாரிமுத்து

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், அர்மேனியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா பி அணி வெண்கலப் பதக்கமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கப் பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கமும் வென்றன. மகளிர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. 11 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் 2.5-1.5 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அந்த அணி சார்பில் அப்துசட்டோரோவ் நோடிர்பெக், யாகுபோவ் நோடிர்பெக், சிந்தரோவ் ஜாவோகிர் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்திருந்தனர்.

அதேவேளையில் வகிடோவ் ஜகோங்கிர் 69-வது நகர்த்தலின் போது வார்மர்டாம் மேக்ஸை தோற்கடித்தார். இந்த வெற்றியால் உஸ்பெகிஸ்தான் அணி 11 சுற்றுகளின் முடிவில் 8 வெற்றி, 3 டிராவுடன் 19 புள்ளிகள் குவித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.

அர்மேனியாவுக்கு வெள்ளி...

ஓபன் பிரிவில் அர்மேனியா வெள்ளிப் பதக்கம் வென்றது. அந்த அணி தனது கடைசி சுற்றுஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அர்மேனியா புள்ளிகள் பட்டியலில் 19 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தது. அர்மேனியா 9 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்றிருந்தது.

இந்தியா பி 11 சுற்றுகளின் முடிவில் 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இந்திய பி அணி நேற்றுதனது கடைசி சுற்றில் 3-1 என்றகணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது. இந்திய அணி சார்பில் நிஹால் சரின், சத்வானி ரவுனக் ஆகியோர் வெற்றி பெற்றனர். டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியார் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்திருந்தனர்.

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி தங்கப் பதக்கத்துக்கான வாய்ப்பை நழுவ விட்டது. 10 சுற்றுகளின் முடிவில் 17 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் இருந்த இந்திய ஏ அணி நேற்று தனது கடைசி ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்த நிலையில் தானியா சச்தேவ் 46-வது காய் நகர்த்தலின் போது யிப் காரிசாவிடமும், பக்தி குல்கர்னி 48–வது நகர்த்தலின் போது ஆபிரகாம்யான் ததேவிடமும் தோல்வியடைந்தனர். இதனால் இந்திய ஏ அணியின் தங்கப் பதக்க கனவு தகர்ந்தது.

11 சுற்றுகளில் 8 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்ற இந்திய ஏ மகளிர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. அமெரிக்கா, கஜகஸ்தான் ஆகிய அணிகளும் தலா 17 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் இந்திய ஏ அணி ஆட்ட புள்ளிகளின் அடிப்படையில் 3-வது இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒலிம்பியாட் வரலாற்றில் மகளிர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். மகளிர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்த இந்திய பி அணி யானது 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடம் பிடித்தது. அதேவேளையில் இந்திய சிஅணி 15 புள்ளிகள் பெற்று 17-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.

மகளிர் பிரிவில் உக்ரைன் அணிதங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தனது கடைசி சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியது. முசிச்சுக் மரியா, உஷெனினாஅனா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் முசிச்சுக் அனா, புக்ஸா நடாலியா ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர்.

ஜார்ஜியா மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அந்த அணி தனது கடைசி சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. பாட்சியாஷ்விலி நினோ, அரபிட்ஸ் மெரி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஸாக்நிட்ஸி நானா, ஜவகிஷ்விலி லேலா ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்திருந்தனர்.

மகளிருக்கான தொடக்கம்..

இந்திய மகளிர் ஏ அணியின் பயிற்சியாளரான அபிஜித் குந்தே கூறும்போது, “கடந்த நான்கு மாதங்களாக அணி மிகவும் கடினமாக உழைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணியின் முதல் பதக்கம் இதுவாகும். இந்த பதக்கமானது செஸ் விளையாட்டில் பெண்களுக்கான சிறந்த தொடக்கமாக இருக்கவேண்டும்” என்றார்.

2-வது முறை:

ஓபன் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.

கப்ரின்டாஷ்விலி கோப்பை

செஸ் ஒலிம்பியாட்டில் மதிப்புமிக்க கப்ரின்டாஷ்விலி கோப்பையையும் இந்தியா வென்றது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் அணியின் கூட்டு செயல்திறனுக்காக இந்த கோப்பை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்