“அன்று ஷார்ட்ஸ் அணியாதே என்றார்கள்... இன்று உலக சாம்பியன்” - மகள் நிகத் ஜரீனின் கனாவுக்கு உயிர் தந்த தந்தை ஜமீல் உருக்கம்

By எல்லுச்சாமி கார்த்திக்

ஹைதராபாத்: "அன்று ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் விளையாட்டை விளையாடக் கூடாது என என் மகள் நிகத் ஜரீனிடம் சொன்னார்கள். இன்று அவள் உலக சாம்பியன்" என தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்கிறார் நிகத் ஜரீனின் தந்தை முகமது ஜமீல் அகமது.

25 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் முதல் குமரி வரையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 'கனா' படத்தில் வரும் கௌசல்யா முருகேசனை போல நிஜ வாழ்வில் பல சவால்களை கடந்து வந்துள்ளார் நிகத் ஜரீன். அந்த உத்வேகக் கதையை கொஞ்சம் பார்ப்போம். உற்றார் உறவினர்களின் வன்சொல், காயம் என பல வலிகளை கடந்து சாதித்துள்ளார் அவர்.

"உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வது என்பது இஸ்லாமிய பெண்கள் உட்பட நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை நிச்சயம் கொடுக்கும். ஆணோ அல்லது பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்களது வாழ்க்கைப் பாதையை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். நிகத், அவளது வாழ்க்கைப் பாதையை அவளாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டாள்" என உணர்வுபூர்வமாக பேசுகிறார் முகமது ஜமீல்.

நிகத் ஜரீனின் மாமா ஷம்சம்சுதீனின் மகன்கள் இருவரும் குத்துச்சண்டை வீரர்களாக வளர்த்துள்ளனர். அதைப் பார்த்து வளர்ந்த நிகத்துக்கு குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வம் வந்துள்ளது. ஹைதராபாத் நகரின் நிசாமாபாத் பகுதியில் 2000-ன் பிற்பாதியில் குத்துச்சண்டை விளையாட்டில் பெண்பிள்ளைகள் பெரிதும் ஈடுபடாத சூழலில் தங்களது மகளின் விருப்பத்திற்கு தடை ஏதும் சொல்லாமல் இருந்துள்ளனர் அவரது பெற்றோர். மகள் கண்ட கனாவுக்கு முகமது ஜமீல் மற்றும் பர்வீன் சுல்தானா தம்பதியினர் உயிர் கொடுத்துள்ளனர்.

நிகத், இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அவரது உற்றார் மற்றும் உறவினர்கள் வன்சொல் பாடியுள்ளனர். 'பெண் பிள்ளைக்கு ஏன் இந்த விளையாட்டு? அதுவும் ஷார்ட்ஸ் (கால்சட்டை) அணிந்து விளையாடும் விளையாட்டு அவசியம் தானா?' என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள். ஆனால், பெற்றோரின் உறுதுணையுடன் 2011-இல் உலக இளையோர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் நிகத்.

"நான் சவுதி அரேபியாவில் 15 ஆண்டு காலம் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தேன். என் மகள்களின் கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சிக்காக நான் இந்தியா திரும்பினேன். நிகத்தின் இரண்டு அக்காவும் மருத்துவம் பயின்றனர். நான் நிகத் மற்றும் அவரது தங்கையின் விளையாட்டு பயிற்சிக்கு உதவியாக இருந்தேன். எனது இளைய மகள் பேட்மிண்டன் விளையாடி வந்தார். பாக்சிங் குறித்து நிகத் எங்களிடம் சொன்ன போது நானும், எனது மனைவியும் தயக்கமின்றி சம்மதம் சொன்னோம். உறவினர்கள் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். இருந்தாலும் எங்களது மகளின் கனவுக்கு உயிர் கொடுப்பதே எங்களது நோக்கமாக இருந்தது" என்கிறார் ஜமீல்.

ஜூனியர் பிரிவில் ஒரு ரவுண்டு வந்த நிகத் 2016-இல் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். இருந்தாலும் அடுத்த ஆண்டே அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் 2018-இல் ரிங்கிற்கு திரும்பிய அவர் சீனியர் தேசிய போட்டியில் வெண்கலம் வென்றார்.

"இளையோர் பிரிவில் பதக்கம் வென்றபோது அவருக்கு 15 வயதுதான். ஜுனியர் பிரிவிலிருந்து சீனியர் பிரிவுக்கு மாறும் தருணம் கொஞ்சம் கடினமானதாகும். அதை அவர் புரிந்து கொள்ள சில காலம் பிடித்தது. காயத்தினால் சர்வதேச அளவிலான போட்டிகளை மிஸ் செய்தது அவளுக்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது நிசாமாபாத் பகுதியில் ஜுனியர் அளவில் பதக்கம் வென்ற சில குத்துச்சண்டை வீரர்களின் கதையை நான் அவருக்கு சொன்னேன். மேலும் அவர் பெண் பிள்ளைகளுக்கு எப்படி ரோல் மாடலாக அமைந்துள்ளார் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவர் மனதளவில் திடமான பெண். ஆட்டத்தையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர். எப்போது எதிராளிக்கு பன்ச் கொடுக்க வேண்டும், எப்போது தடுப்பாட்டம் ஆட வேண்டும், எப்படி தப்ப வேண்டும் என்பதை அறிந்தவர். அது அவரது இயல்பும் கூட. ரிங்கிலும் அலர்ட்டாக இருப்பார். அதனால் அவர் காயத்திலிருந்து மீண்டதும் கம்பேக் கொடுக்க முடிந்தது" என்கிறார் 2014 முதல் நிகத்துக்கு பயிற்சி கொடுத்து வரும் பயிற்சியாளர் சிரஞ்சீவி.

கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை களத்தில் பிஸியாக இயங்கி வருகிறார் நிகத். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருந்தார் நிகத். இப்போது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம். அடுத்ததாக 2024 பாரீஸ் ஒலிம்பிக் அவரது இலக்காக உள்ளது.

நிகத்தின் வரவேற்க அவரது இல்லம் இப்போது தயாராகி வருகிறது. "கடந்த 2 - 3ஆண்டுகளாக அவளுக்கு மிகவும் பிடித்த பிரியாணி மற்றும் நிஹாரியை மிஸ் செய்திருந்தாள். முகாமிலிருந்து திரும்பியதும் அதை அவர் ருசிக்கலாம்" என தெரிவித்துள்ளார் ஜமீல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

உலகம்

14 mins ago

சினிமா

20 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

24 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

54 mins ago

கல்வி

49 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

மேலும்