ஸ்டாயினிஸ் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் வெற்றி வசப்பட்டது - லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு மார்கஸ் ஸ்டாயினிஸ் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 18 ரன்களை விளாசிய ரிங்கு சிங் 5-வது பந்தில் எவின் லீவிஸின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் உமேஷ் யாதவ் போல்டாக லக்னோ அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்தனர். போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:

இந்த மாதிரியான போட்டிகளுக்காக இன்னும் கூடுதல் ஊதியம் தரவேண்டும். இதுபோன்ற ஆட்டங்களை இந்த சீசனில் இழந்தோம். கடைசி பந்து வரை சென்ற ஆட்டங்கள் குறைவுதான். சில போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்றுள்ளது. வெற்றி அணியாக இருந்ததில் மகிழ்ச்சி. எளிதாக தோல்வியடைந்திருப்போம். அது நிகழ்ந்திருந்தால் மோசமாக விளையாடியதால் தோற்றோம் என்று நினைத்து வீட்டுக்கு திரும்பியிருப்போம்.

கடைசி லீக் போட்டியை சிறந்த வழியில் முடித்துள்ளோம். இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை உருவாக்கிய பெருமை இரு அணிகளுக்குமே சேரும். நாங்கள் பதற்றமடையவில்லை என்று கூற முடியாது, ஏனெனில் கடைசி கட்டத்தில் கொல்கத்தாவுக்கு 3 ரன்களே தேவையாக இருந்தது. மார்கஸ் ஸ்டாயினிஸ் கடைசி இரண்டு பந்துகளில் திட்டங்களைச் செயல்படுத்தி எங்களை வெற்றி பெறச் செய்தார்.அவர், அற்புதமாக செயல்பட்டார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். கொல்கத்தா அணி நிச்சயம் தாக்குதல் தொடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

தொடர்ந்து நல்ல ஷாட்களை விளையாடிய அவர்களை பாராட்ட வேண்டும். இதுபோன்ற வெற்றிகள் அணியின் பிணைப்பை வலுப்படுத்தும். எவின் லீவிஸ் தொடங்கி அனைவருமே சிறந்த பங்களிப்பை வழங்கினார்கள். கடந்த சில ஆட்டங்களில் மோஷின் கான் தனித்துவமாக பந்து வீசிவருகிறார். அவரிடம் திறமைகள் உள்ளது, ஆனால் முக்கியமானது என்னவென்றால் அவற்றை எப்போது பயன்டுத்த வேண்டும் என்பதை அவர், தெரிந்து வைத்துள்ளார். இதேபோன்று அவர், செயல்படும்பட்சத்தில் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார். இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் – சென்னை

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்