மேத்யூஸ் அபார கேப்டன்சி: இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இலங்கை

By செய்திப்பிரிவு

லீட்ஸில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை பரபரப்பான ஆட்டத்தில், கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் வெற்றிவாகை சூடி இலங்கை அணி, பிரிட்டன் மண்ணில் முதன்முதலாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 257 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்து 365 ரன்கள் எடுத்தது. மீண்டும் இலங்கை 457 ரன்களை எடுக்க இங்கிலாந்து 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த வெற்றியின் மூலக் கர்த்தாக்கள் இருவர். 2வது இன்னிங்ஸ்சில் சதம் அடித்த ஆஞ்சேலோ மேத்யூஸ். மற்றொருவர் இலங்கையின் தம்மிக்க பிரசாத், இவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் 4ஆம் நாள் மாலை ஆக்ரோஷமாக இவர் வீசியதால் இங்கிலாந்து 57/5 என்று மடிந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட இதே நிலைமையில் இலங்கையின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்டது. ஆனால் நேற்று கடைசி பந்துக்கு முதல் பந்தை எரங்கா பயங்கரமாஅக வீச ஜேம்ஸ் ஆண்டர்சன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இலங்கையின் இத்தகைய எழுச்சிக்கு கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. முதல் டெஸ்டில் சதம் கண்ட மேத்யூஸ் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தைக் காட்டிலும் 108 ரன்கள் பின் தங்கியிருந்த இலங்கையை தனது இரண்டாவது இன்னிங்ஸ் 160 ரன்கள் மூலம் அபாரமான முறையில்வெற்றி இலக்கை 350 ரன்களாக உயர்த்தினார்.

4ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் ஆக்ரோஷமாக வீச இங்கிலாந்து 57/5 என்று ஆனது.

இந்த நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இலங்கைக்குத் தேவை 5 விக்கெட்டுகள். இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அசாத்தியமான ஒரு டிராவுக்காக ஆடியது.

இங்கிலாந்து அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட, அசப்பில் ஹஷிம் ஆம்லா போலவே இருக்கும் இடது கை பேட்ஸ்மென் மொயீன் அலி அந்த அசாத்தியமான முயற்சியை மேற்கொண்டார். அவர் 281 பந்துகள் தாக்குப் பிடித்து 108 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

கடைசியில் இறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 55 பந்துகள் தாக்குப் பிடித்தார் ஆனால் ரன் எதுவும் எடுக்கவில்லை. இவ்வளவு பந்துகள் ஆடி கடைசியில் ரன் எடுக்காமல் இருந்ததில் ஏதாவது சாதனையை நிகழ்த்தினாரா ஆண்டர்சன் என்பதைப் பார்க்கவேண்டும்.

அவ்வளவு நேரம் 55 பந்துகள் நின்று இலங்கை வெற்றியை தடுத்து நிறுத்தும் அளவுக்குச் சென்ற ஆண்டர்சன் கடைசியில் எரங்காவின் ஆக்ரோஷமான பவுன்சரை தடுத்து ஆட நினைத்தார் ஆனால் பந்து மட்டையில் பட்டு பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் எளிதான கேட்ச் ஆனது. இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவையது.

இலங்கை தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை இங்கிலாந்தில் பெற்று வரலாறு படைத்தது.

அன்று இலங்கை தனது 2வது இன்னிங்ஸில் 108 ரன்கள் பிந்தங்கியிருந்த நிலையில் இலங்கை தன் 2வது இன்னிங்ஸில் 277/7 என்று இருந்தபோது ஆஞ்சேலோ மேத்யூஸ் ஆடிய ஆட்டம் அனைத்து கால சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்று என்றே கூறவேண்டும். ரிக்கி பாண்டிங் பொன்ற ஒரு மன நிலையில் அவர் ஆடினார். ஆட்டத்தின் ஸ்டைல் இலங்கை முன்னாள் வீரர் ராய் டயஸ் ஆட்டத்தை நினைவூட்டுவதாக அமைந்தது.

ரங்கன்னா ஹெரத்தும் இவரும் இணைந்து 277/7 என்ற ஸ்கோரை 426 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். இந்த பார்ட்னர்ஷிப் இங்கிலாந்தை நசுக்கியது. அதோடு மட்டுமல்லாது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மேத்யூஸ் பந்து வீச்சிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேத்யூஸ் கேப்டன்சியில் புதிய பக்கம் திறக்கப்பட்டுள்ளது.

அந்த அணி மேத்யூஸின் கீழ் இனி பரிணமிக்கும் என்று எதிர்பார்க்கலாம். கேப்டன்சி முறையிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். பவுலர்களை பயன்படுத்திய விதம், கள வியூகம், ஆக்ரோஷமான அணுகுமுறை என்று அவர் ஆஸ்திரேலிய கேப்டன்களை ஒத்திருக்கிறார்.

5ஆம் நாளான நேற்று இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மொயீன் அலியுடன் ஆண்டர்சன் ஆட வந்தார். இருவரும் இணைந்து 20.2 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மான்டி பனேஸரும், ஆண்டர்சனும் சுமார் 11 ஓவர்கள் நின்று டிரா செய்தது போல் இதனை முடியாது என்றே தெரிந்தது.

ஆனால் 20 ஓவர்கள் இருவரும் தாக்குப் பிடித்தனர். கடைசி 2 பந்துகளில்தான் கோட்டைவிட்டனர். இலங்கை வரலாறு படைத்தது.

ஆட்ட நாயகனாக மேத்யூஸ் தேர்வு செய்யப்பட, தொடரின் நாயகர்களாக ஆண்டர்சன் மற்றும் மேத்யூஸ் இருவரும் தேர்வு செய்யபப்ட்டனர்.

தோல்விக்கு இங்கிலாந்தே ஒரு விதத்தில் காரணம். முதல் இன்னிங்ஸில் 311/3 என்ற நிலையிலிருந்து 365 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியபோது 277/7 என்ற நிலையில் பந்து வீச்சில் கோட்டை விட்டது.

எது எப்படியிருந்தாலும் விளையாட்டு கிரகங்கள் இங்கிலாந்துக்கு இப்போது சரியான இடங்களில் இல்லை என்றே தெரிகிறது. கால்பந்தாட்டத்தில் உலகக் கோப்பையில் முதல் சுற்று வெளியேற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக இலங்கையிடம் தொடரை இழந்தது என்று அதன் நிலை பரிதாபமாக உள்ளது.

இந்த நிலையில் அந்த அணி புக் கிரிக்கெட், கோலிகுண்டு, கில்லித் தாண்டு, பம்பரம் என்று எதை ஆடினாலும் தோல்வியையே தழுவும் என்றே தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்