155 கி.மீ வேகத்தில் பந்துவீசும் பாகிஸ்தான் பவுலருக்கு ஐசிசி தடை

By செய்திப்பிரிவு

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைனின் பவுலிங் ஆக்‌ஷன், விதிகளை மீறி இருந்ததால், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்துவீச தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் அணியின் இளம் வீரர் முகமது ஹஸ்னைன். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 8 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹஸ்னைன், கடந்த 2019-ல் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியின்போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். 19 வயதில் ஹாட்ரிக் எடுத்த சாதனை வீரர் என்ற பெருமையை அதன்மூலம் பெற்றார். பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக மட்டுமில்லாமல், பிரீமியர் லீக் போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.

21 வயதாகும் ஹஸ்னைன், நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசி அசத்தினார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது அவரின் பந்துவீச்சு ஆக்ஷன் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக போட்டி நடுவர் ஜெரார்ட் அபூட் புகாரளித்தார். இதையடுத்து ஐசிசி உத்தரவின்பேரில் கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் அவரின் பந்துவீச்சு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தது.

ஆனால், பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹஸ்னைன் நாடு திரும்பியதை அடுத்து, லாகூரில் உள்ள ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் அவருக்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடந்த சோதனையில் பந்துவீச்சு ஆக்‌ஷன் விதிகளுக்கு மாறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பந்தை டெலிவரி செய்யும்போது ஹஸ்னைன் தன் கை முட்டியை மடக்குவது என்பது தேவையான 15 டிகிரி வரம்பை மீறுவது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையில் இருந்து வெளிவர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி அவருக்கு உதவ முன்வந்துள்ளது

பந்துவீச்சு நிபுணர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்துள்ள பிசிபி, சிக்கலைத் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைவில் ஹஸ்னைனுக்கு தனி பந்துவீச்சு ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அதன்மூலம் பந்துவீச்சை சரிசெய்து மறுமதிப்பீட்டிற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது. இதனை அறிக்கை வாயிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "ஹஸ்னைன் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு சொத்து. 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து, அதேநேரம் துல்லியமாக வீசும் மிகச் சில பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர். எனவே, ஹஸ்னைனின் எதிர்காலம் மற்றும் பாகிஸ்தான் அணியின் நலன்களை கருத்தில்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் அவர் இனி தொடர்ந்து பங்கேற்க மாட்டார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஹஸ்னைன் அந்த அணியின் முக்கிய தூணாக விளங்கிவந்தார். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள தடையால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்