ஸ்டீவ் வாஹ் கடும் சுயநலக்காரர்: ஷேன் வார்ன் காட்டம்

By பிடிஐ

ஸ்டீவ் வாஹ் மீதான தனது கோபத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும் ஷேன் வார்ன் தற்போது அவரை ‘தன்னுடன் விளையாடிய வீரர்களில் அதிக சுயநலம் பிடித்தவர் ஸ்டீவ் வாஹ்தான்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

சேனல் 10 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஷேன் வார்ன் இது பற்றி கூறியதாவது:

“எனக்கு ஸ்டீவை பிடிக்காததற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று என்னவெனில், நான் விளையாடியதிலேயே ஸ்டீவ் வாஹ்தான் மிகவும் சுயநலம் பிடித்தவர் என்பதே.

அவரை நினைத்தால் எனக்கு கோபம் ஏற்படும் ஒரு விஷயம் என்னவெனில் 1999-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில் ஒரு போட்டியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தது, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்து பிராங்க் ஒரல் டெஸ்ட் டிராபியை தக்க வைக்க வேண்டும்.

இந்த நிலையில் கேப்டன் ஸ்டீவ் வாஹ், துணைக் கேப்டனான நான், பயிற்சியாளர் ஜெஃப் மார்ஷ் அணியைத் தேர்வு செய்ய வேண்டும்.

நான் அந்தத் தொடரில் நன்றாக வீசவில்லை. தோற்றோம், பிரையன் லாரா பேட்டிங் அசாதாரணமாக இருந்தது. ஆனாலும் நான் சரியாக வீசாததற்காக என்னையே கடிந்து கொண்ட காலம் அது. நான் சரியாக வீசவில்லை அது என்னுடைய தவறுதான்.

நாங்கள் அணித் தேர்வுக்கு உட்கார்ந்தோம், அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம். உடனே ஸ்டீவ் வாஹ் என்னிடம் ‘நீ இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, உன்னை நீக்குகிறோம்’ என்றார். நான் உடனே அணி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்றேன். அதற்கு ஸ்டீவ் வாஹ், “நான் தான் கேப்டன், நீ ஆடப்போவதில்லை” என்றார்.

இது இன்றும் கூட எனக்கு கடும் ஏமாற்றமாக இருக்கிறது. எனக்கு அப்போதுதான் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடந்தது. டெஸ்ட் போட்டியை வெல்ல ஒரு கேப்டன் என்னில் உள்ள சிறந்த திறமையையும் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும்.

எனக்கு ஸ்டீவ் வாஹை வேறு சில விஷயங்களுக்காகவும் சுத்தமாக பிடிக்காது, ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருடனான உறவு மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும் என்று நான் கருதவில்லை” என்றார் ஷேன் வார்ன்.

ஆனால் இந்தச் சம்பவம் பற்றி ஸ்டீவ் வாஹ் தனது 'The meaning of Luck' என்ற புத்தகத்தில் குறிப்பிடும் போது, “நான் ஒரு மிகப்பெரிய நட்பை இழந்தேன், ஆனால் அந்த அனுபவத்தின் மூலம் நான் திடமடைந்தேன். எது சரி என்பதை அறிந்திருப்பதற்கும் அதன் மீது செயல்படுவதும் இருவேறு விஷயங்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆனால் ஒருநாள் ஷேன் வார்ன் என்னைப் புரிந்து கொள்வார், அதாவது அவரது ஆழமான திறமையை நான் நம்பவில்லை என்பதல்ல அது, தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு நடைமுறையான முடிவே அவரை நீக்கியது. ஒவ்வொரு தலைவரும் ஒரு உள்மன உந்துதல் சொல்லும் விஷயங்களை நம்பி செயல்பட வேண்டும்” என்று எழுதினார்.

அந்தத் தொடரில் ஸ்டீவ் வாஹ், ஷேன் வார்னை கடைசிப் போட்டியில் உட்கார வைத்ததற்கான காரணங்கள் உள்ளன. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ஷேன் வார்ன் எடுத்த விக்கெட்டுகள் வெறும் 2 மட்டுமே. சராசரி 134 ரன்கள். மாறாக சக லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் 7 விக்கெட்டுகளை 31.43 என்ற சராசரியில் பெற்றிருந்தார்.

ஷேன் வார்னை நீக்கி விட்டு கொலின் மில்லரை அணியில் சேர்த்து கடைசி டெஸ்ட் போட்டியை 176 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று 2-2 என்று தொடரை சமன் செய்து பிராங்க் ஒரல் டிராபியை தக்கவைத்தது என்பதும் முக்கியமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்