டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் திடீர் அறிவிப்பு

By பிடிஐ

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணி வீரருமான டூப்பிளசிஸ் சர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் இன்று அறிவித்துள்ளார்.

அடுத்து வரும் இரு டி20 உலகக்கோப்பை மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் டூப்பிளசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''கடந்த ஆண்டு அனைவரையுமே வாட்டி எடுத்துவிட்டது. எதுவுமே நிலையில்லாமல் இருந்த நிலையில் எனக்குப் பல்வேறு விஷயங்களில் தெளிவு கிடைத்திருக்கிறது. புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்வதற்கு என் மனது தெளிவாக இருக்கிறது.

என்னுடைய தேசத்துக்காக நான் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் விளையாடியதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறுவதற்குச் சரியான நேரம் வந்துவிட்டது. இனிமேல் நான் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே என் கவனத்தைச் செலுத்தப் போகிறேன்.

அடுத்த இரு ஆண்டுகள் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான ஆண்டுகளாகும். என்னுடைய குறிக்கோள் அனைத்தும் டி20 உலகக் கோப்பையை நோக்கி இருக்கிறது. உலகம் முழுவதும் விளையாட விரும்புகிறேன். சிறந்த வீரராகப் பரிணமிக்க முடியும்.

இந்த டி20 போட்டியில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வருகின்றன. அப்படியென்றால் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டேன் எனும் அர்த்தம் இல்லை. குறுகிய காலத்துக்கு டி20 போட்டிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிப்பேன்''.

இவ்வாறு டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-13ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டூப்பிளசிஸ் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 78, 110 (நாட் அவுட்) ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் டூப்பிளசிஸ் வென்றார். இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டூப்பிளசிஸ், 4,163 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 10 சதங்கள், 21 அரை சதங்கள் என 40.02 சராசரி வைத்துள்ளார்.

2016-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற டூப்பிளசிஸ், 36 போட்டிகளுக்கு அணியைத் தலைமை ஏற்று நடத்தி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்தப் பதவியிலிருந்து விலகினார். இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதால், கேப்டன் பதவியிலிருந்து டூப்பிளசிஸ் விலகினார். டூப்பிளசிஸ் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி 18 வெற்றிகள், 15 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் டூப்பிளசிஸ் பெரிய அளவுக்கு ரன்களைக் குவிக்க முடியாமல் சிரமப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

59 mins ago

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்