ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஐபிஎல் டி20 போட்டி: செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்த பிசிசிஐ முடிவு; 60 போட்டிகள், 3 நகரங்கள்

By செய்திப்பிரிவு

2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதித்துவிட்ட நிலையில், மத்திய அரசின் அனுமதி கோரி ஐபிஎல் சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் பிரிஜேஸ் படேல் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோடி வருவாய் உள்ள போட்டி என்பதால் எப்படியாவது நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் சூழல் அதற்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை.

ரசிகர்களை அனுமதிக்காமல் மூடப்பட்ட மைதானங்களில் போட்டியை நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டது. குறிப்பாக மும்பையில் நடத்தத் திட்டமிட்டபோது, மும்பையில் கரோனா பாதிப்பு உச்ச கட்டத்தில் இருந்ததால், அது கைவிடப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் பெரும்பாலான தேர்வு ஐக்கிய அரபு அமீரகமாகவே இருந்தது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி, துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் படேல் எஸ்பிஎஸ் கிரிக்இன்போ தளத்திடம் கூறுகையில், “ஐசிசி டி20 உலகக்கோப்பையை முறைப்படி ஐசிசி ஒத்திவைக்க பிசிசிஐ, ஐபிஎல் அமைப்பு காத்திருந்தன. அந்த அறிவிப்பு வந்தபின் அந்தக் காலகட்டத்தில் ஐபிஎல் டி20 போட்டியை நடத்த முடிவு செய்தோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டோம். அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புகிறோம்.

அபுதாபி, ஷார்ஜா, துபாய் ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளைக் காண ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்யும். ஆனால், இந்தியாவில் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்காது என்பதை ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் இதுவரை முறைப்படி அறிவிக்கவில்லை.

ஆனால், செப்டம்பர் முதல் நவம்பர் 7 ம் தேதி அல்லது தீபாவளி விடுமுறையொட்டிவரை ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐபிஎல் முடிவு செய்துள்ளது. ஏறக்குறைய 60 போட்டிகள் கொண்ட தொடராகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 7 அல்லது நவம்பர் 14-ம் தேதி வரை நடத்தப்படுகிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், ஐபிஎல் போட்டி நடத்தும் தேதிகள், அட்டவணை முழுமையாக வெளியிடப்படும். அடுத்தவாரம் நடக்கும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணி வீரர்களும் விளையாடும் போது உரிய பாதுகாப்புடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விளையாடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தால், ஒரு மாதத்துக்கு முன்பே அனைத்து அணிகளும் அந்நாட்டுக்குச் சென்றால்தான் பயிற்சியில் ஈடுபட முடியும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தபின்பே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

பெரும்பாலும் ஐபிஎல் இறுதிப்போட்டி நவம்பர் 7-ம் தேதிக்குள் முடிந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டதால், அங்கு செல்ல ஆயத்தமாக வேண்டியுள்ளது. ஆதலால், நவம்பர் 7-ம் தேதி பெரும்பாலும் இறுதிப்போட்டி இருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

49 mins ago

வாழ்வியல்

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்