உமிழ்நீர் பயன்பாட்டுக்குத் தடையிலும் ஸ்விங்: ஜேசன் ஹோல்டரின் அபார பவுலிங்கில் 204 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து

By இரா.முத்துக்குமார்

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இங்கிலாந்து -மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஜேசன் ஹோல்டரின் அசாத்திய பவுலிங்கில் 204 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்சில் சுருண்டது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பந்தில் எச்சில் தடவி பளபளப்பேற்றுவது தடை செய்யப்பட்டுள்ள புதிய எதார்த்தத்திற்கு மே.இ.தீவுகள் சரியாக தகவமைத்துக் கொண்டனர். எச்சில் பயன் இல்லாமலேயே நன்றாக ஸ்விங் ஆனது. 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய பவுலர்களி விட மே.இ.தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷனன் கேப்ரியல் ஆகியோருக்கு பந்துகள் ஸ்விங் ஆக இங்கிலாந்து 35/1 என்ற நிலையிலிருந்து 67.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் மடிந்தது.

மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 20 ஓவர்கள் வீசி 6 மெய்டன்களுடன் 6 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்களுக்குக் கைப்பற்ற. இவரை விட அதிவேகம் வீசும் ஷனன் கேப்ரியல் 15.3 ஓவர்களில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்று முதலில் ஜோ டென்லி 18 ரன்களில் ஷனன் கேப்ரியல் இன்ஸ்விங்கருக்கு தளர்வாக காலை முன்னால் நகர்த்தி மட்டையைக் கொண்டு செல்ல மணிக்கு 90+ கிமீ வேக இன்ஸ்விங்கர் ஸ்டம்பை பதம் பார்த்தது.

இவர் ஆட்டமிழந்தவுடனேயே ரோரி பர்ன்ஸ் என்ற மற்றொரு தொடக்க வீரரும் கேப்ரியல் பந்துக்கு கால்காப்பில் வாங்க ஹோல்டர் ரிவியூ செய்ய அது அவுட் என்று தெரியவர வெளியேறினார். ரோரி பர்ன்ஸ் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 51/3.

அடுத்ததாக கிராலி 26 பந்துகளில் 10 ரன்களை எடுத்து ஹோல்டரின் ஏகப்பட்ட அவுட்ஸ்விங்கர் சோதனைகளுக்குப் பிறகு ஒரு இன்ஸ்விங்கர் உள்ளே வர கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார், இதுவும் ஹோல்டர் ரிவியூ செய்து பெற்ற அவுட்தான்.

அடுத்ததாக ஒலி போப் 12 ரன்கள் எடுத்து ஹோல்டர் ஒரு பந்தை வைட் ஆஃப் த கிரீசுக்குச் சென்று வீச அவர் இன்ஸ்விங்கர் என்று நினைத்தார் ஆனால் பந்து கோணமாக உள்ளே வந்து லேசாக வெளியே எடுக்க எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இணைந்து ஸ்கோரை 87/5லிருந்து 154 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், ஸ்டோக்ஸ் அடித்து ஆட வேண்டியவர் கொஞ்சம் நிதானித்து ஆடினார் 7 பவுண்டரிகளை அடித்து 97 பந்துகளில் 43 ரன்களுடன் ஃபுல் லெந்த் ஹோல்டர் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார், மிக அருமையான பந்து.

47 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் என்று ஆக்ரோஷம் காட்டிய ஜோஸ் பட்லர் மீண்டும் ஒரு ஜேசன் ஹோல்டர் ஆஃப் ஸ்டம்ப் பந்தை எட்ஜ் செய்து டவ்ரிச்சின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார்.

ஜோப்ரா ஆர்ச்சர் ஹோல்டரிடம் டக் அவுட் ஆகி வெளியேற மார்க் உட் 5 ரன்களில் ஹோல்டரின் வைடு பந்தை விரட்டி கல்லியில் கேட்ச் ஆனார்.

கடைசியில் பெஸ் சில அருமையான டெஸ்ட் ஷாட்களை ஆடி 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கடைசி விக்கெட்டுக்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் (10) 30 ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து 204 ரன்களுக்குச் சுருண்டது.

மே.இ.தீவுகள் சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. ஜான் கேம்பல் 21 ரன்களுடனும் கிரெய்க் ப்ராத்வெய்ட் 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்