டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி; 16வயது ஷபாலி மீண்டும் அதிரடி

By பிடிஐ

ஷபாலி வர்மாவின் அதிரடியான ஆட்டத்தால், மெல்போர்னில் இன்று நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்தய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. 134 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

வங்கதேசத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும் அதிரடியாக பேட்டிங் செய்த 16வயதான ஷாபாலி வர்மா, இந்த ஆட்டத்திலும் 34 பந்துகளுக்கு 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகி விருதும் ஷாபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஷாபாலி வர்மாவுக்கு துணையாக ஆடிய தான்யா பாட்டியா 25 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.

133 ரன்கள் என்ற குறைவான இலக்கை நிர்ணயித்து, சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து அணியை கட்டுப்படுத்தி இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணியினர் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதற்கு முன் ஆஸ்திரேலியா, வங்கதேச அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தினர்.

டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷாபாலி வர்மா, மந்தனா ஆட்டத்தைத் தொடங்கினர். 11 ரன்னில் மந்தனா ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு பாட்டியாவும், ஷாபாலி வர்மாவும் சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். 23 ரன்கள் சேர்த்த நிலையில் பாட்டினா விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ரோட்ரிஸ் (10), கேப்டன் கவுர்(1) என சொற்பமாக விக்கெட்டை இழந்தனர்

அரைசதத்தை நோக்கி முன்னேறிய ஷாபாலி வர்மா 34 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நடுவரிசை வீராங்கனைகள் ஷர்மா(8), கிருஷ்ணமூர்த்தி(6) ரன்னிலும் வெளியேறினர். யாதவ் 14 ரன்னில் ரன்அவுட் ஆகினார். பாண்டே 10 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருது வென்ற ஷாபாலி வர்மா

20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் மேயர், கெர் தலா 2 விக்கெட்டுகளைச் சேர்த்தனர்.

134 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து மகளிர் அணி களமிறங்கினர். தொடக்க ஆட்ட வீரங்கனை ராச்சல் ப்ரீஸ்ட் 12ரன்கள் சேர்த்திருந்தபோது, அவரை ஷிகா பாண்டே வெளியேற்றினார்.

இந்திய வீராங்கனைகள் ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷிகா ஆகியோரின் நெருக்கடி தரும்விதமான பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி ரன்கள் குவிக்க மிகவும் சிரமப்பட்டனர்.

தீப்தி பந்துவீச்சில் பேட்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்திய அணி வீராங்கனைகள் ஆதிக்கமே இருந்தது. பூனம்யாதவ், ராதா யாதவ் ஆகியோரின் நெருக்கடியான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து தவித்தது. கேப்டன் சோபி டிவைன் 14 ரன்களில் ஆட்டமிழக்க நியூஸிலாந்து 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு மாடி கிரீன், மார்டின் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். க்ரீன் 24 ரன்களில் பூனம் யாதவ் பந்துவீச்சிலும், மார்டின் 25 ரன்னில் பாண்டே பந்துவீச்சிலும் வெளியேறினர்.

வெற்றிக்கு 21 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. 6-வதுவிக்கெட்டுக்கு களமிறங்கிய கெர் அதிரடியாகப் பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். பூனம் யாதவ் வீசிய 19-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசி ஆட்டத்தை பரபரப்பாக்கினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பாண்டே வீசிய கடைசி ஓவரில் கெர், ஜென்ஸனும் தலா ஒரு பவுண்டரி அடித்து மொத்தம் 11 ரன்கள் சேர்த்தனர். கடைசப் பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜென்ஸன் 11 ரன்களில் ரன்அவுட்டாக நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.


கெர் 19 பந்துகளில் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்து 4 ரன்களில்தோல்வி அடைந்தது.

இந்தியத் தரப்பில் பாண்டே, பூனம்யாதவ், பாண்டே, கெய்க்வாட், யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்